அதிமுக மீண்டும் இரண்டாக உடைந்திருக்கிறது. ஆனால் சரி பாதியாக அல்ல. எடப்பாடி பழனிசாமியிடம் பெரும் பாகமும் ஓ.பன்னீர்செல்வத்திடம் சிறு பாகமாகவும் பிளந்திருக்கிறது.
அதிமுக இதுவரை மூன்று முறை பிளவுபட்டிருக்கிறது, எஸ்டிஎஸ், திருநாவுக்கரசர் சம்பவங்களை சேர்க்காமல் பார்த்தால்.
1987 டிசம்பரில் எம்.ஜி.ஆர். மறைந்தபோதும் ஒரு பிளவு நிகழ்ந்தது. ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டு கோஷ்டிகள். பிரிந்து நின்றதில் பெரும்பான்மையை நிருபிக்க இயலாமல் ஆட்சி கவிழ்ந்தது.
1989ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் தோற்றன. அந்தப் பிளவுக்கும் இப்போதைய பிளவுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது. இப்போது ஆட்சியில் இல்லை.
2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைந்த போதும் அதிமுக ஆட்சியில் இருந்தது. 1987 போலவே உடனடியாக அதிமுக பிளவுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்கள் கழித்து அது நடந்தது. பிப்ரவரியில் முதல்வர் பதவிக்கு சசிகலா ஆசைப்பட்டதால் கட்சி பிளவுப்பட்டது. சசிகலா ஒரு பக்கமும் ஓ.பன்னீர்செல்வம் எதிர் பக்கமும் பிரிந்து நின்றார்கள். ஆனால் சசிகலா சிறை செல்ல எடப்பாடி முதல்வரானார். எதிர்த்து நின்றார் ஓபிஎஸ். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
1987ல் பாடம் கற்றிருந்த அதிமுகவினர் அன்று போல் ஆட்சியை இழக்க விரும்பவில்லை. எடப்பாடிக்கு அதிக அளவில் ஆதரவளித்து ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றிக் கொண்டார்கள். 2017 செப்டம்பரில் ஓபிஎஸ்ஸும் வந்து சேர ஆட்சி அடுத்த நான்காண்டுகள் சிக்கலின்றி சென்றது.
இப்போது மீண்டும் ஒரு பிளவு. இந்த முறை ஆட்சியில் இல்லை. கடந்த இரு பிளவுகளின் போதும் ஆட்சியில் அதிமுக இருந்தது. ஒரு முறை பிளவினால் ஆட்சியை இழந்தது. அடுத்த முறை பிளவுபட்டும் ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டது. இந்த முறை ஆட்சி என்ற நெருக்கடி இல்லை. உடனடித் தேர்தலும் இல்லை. 2024ல்தான் நாடாளுமன்றத் தேர்தல். அதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன. நீதிமன்ற, தேர்தல் ஆணைய சிக்கல்களை இரண்டு ஆண்டுகளுக்குள் முடித்துவிடலாம்.
இதுவரை இரண்டு முறை அதிமுகவின் தலைமை அலுவலகம் பூட்டப்பட்டிருக்கிறது. 1988ல் ஜானகி ஆட்சி கவிழ்ந்ததும் ஜெ அணியினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கவர்னர் ஆட்சியில் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டப்பட்டது. அதன்பிறகு பல நீதிமன்ற வழக்குகள் தீர்ப்புகளைத் தாண்டி, 1989 தேர்தலில் இரண்டு அணிகளும் தோற்றப் பிறகு 1989ல் அலுவலகம் திறக்கப்பட்டது. அப்போது அது ஒன்றுபட்ட அதிமுகவாக ஜெயலலிதா தலைமையில் இருந்தது.
1990 ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஒரு முறை அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த முறை திருநாவுக்கரசருக்கும் அதிமுகவினருக்கும் ஏற்பட்ட மோதலினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் நான்கு மாதங்கள் கழித்து டிசம்பரில் நீதிமன்ற தீர்ப்பு மூலம் அதிமுக தலைமையகம் ஜெயலலிதா கட்டுப்பாட்டுக்கு வந்தது.
இப்போது மீண்டும் சீல் வைக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நீதிமன்ற மோதல்கள் காத்திருக்கின்றன.
இடைக்கால பொதுச் செயலாளர் ஆகியிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இன்றைய சூழல் பலமிக்கதாக தெரியலாம். கட்சியினரின் பெரும்பாலனவர்களின் ஆதரவு அவருக்கு இருக்கிறது என்பது தெரிகிறது. கட்சி அவரிடம் செல்கிறது என்று தெரிந்தால் ஆதரவு இன்னும் கூடும். ஆனால் இந்த ஆதரவு எல்லாம் கட்சியின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள். மாவட்டச் செயலாளர்களாக, பொதுக்குழு உறுப்பினர்களாக பவனி வருபவர்கள்.
ஜூலை 11ல் நடந்த பொதுக் குழுவில் அதிமுக சட்டவிதிகளில் சில திருத்தப்பட்டிருக்கின்றன.
அதிமுகவின் சட்டத்திட்ட விதிமுறைகளில் 20வது விதி மிக முக்கியமானது. இந்த விதிப் பிரிவுகளில்தாம் பொதுச் செயலாளர் தேர்வு, ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பு குறித்தெல்லாம் இருக்கின்றன. இந்த 20ஆம் விதிதான் அதிகம் திருத்தப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த நிரந்தர பொதுச் செயலாளார் பதவி நீக்கப்பட்டிருக்கிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மாற்றப்பட்டு கழகப் பொதுச் செயலாளர் என்று அழைக்கப்படுவார் என்று திருத்தப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுச் செயலாளர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அதிமுகவின் சட்டதிட்ட விதிமுறைகள் கூறுகின்றன. இதுதான் அதிமுகவின் ஆதார விதி. இதில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
அதன்படி இப்போது இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டுமென்றால் அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளாராக அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்களா? இது எடப்பாடி பழனிசாமியின் முன் உள்ள மிகப் பெரிய சவால்.
இப்போது அதிமுக சாதி ரீதியாக இரண்டாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி சார்ந்த மேற்கு மற்றும் வடக்கு மண்டல அதிமுகவினர் அவருக்கு வாக்களிப்பார்கள். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் சார்ந்த தென் மற்றும் டெல்டா மண்டல அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் எடப்பாடிக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.
இந்த சிக்கலைத் தவிர்க்கதான் ஆர்.பி.உதயகுமார், ஒ.எஸ்.மணியன் போன்ற ஓபிஎஸ் சமூகத்தை சார்ந்தவர்களை தன்னுடன் இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும் இது அவருக்கு மிகப் பெரிய சவால்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அவர் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கிக் காட்ட வேண்டும். அப்போதுதான் அவரால் தேர்தலை சந்திக்க வேண்டும். முக்கியமாய் நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் அதிமுக இரண்டுபட்டு இருப்பதை பாஜக விரும்பாது. அதிமுக பலவீனப்பட்டால் பாஜகவுக்கு லாபம்தான் ஆனால் அது நீண்டகால இலக்கு இரண்டு வருடங்களில் அதிமுகவின் இடத்தை பாஜகவால் பிடிக்க இயலாது. அதனால் 2024 தேர்தலுக்கு பாஜகவுக்கு ஒன்றுபட்ட அதிமுக தேவை. இரட்டை இலை சின்னம் தேவை. அதை எடப்பாடி பழனிசாமி தர வேண்டும். இல்லையென்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக எடுக்கும். அது எடப்பாடிக்கு நல்லதாக இருக்காது.
இடைக்காலப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக, பாமக, தமாகா போன்ற கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து கூறியிருக்கிறார்கள். இந்த வாழ்த்து 2024 தேர்தல் வரை நீடிக்க வேண்டுமென்றால் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி வைத்திருக்க வேண்டும், அதிமுக அனைத்து சமூகத்தினருக்கான கட்சி என்பதை நிருபிக்க வேண்டும்.
ஆனால் இத்தனை சிக்கல்களை சமாளித்தவர் இந்தப் பிரச்சினைகளையும் சமாளித்துவிடுவார் என்று அவரது கடந்த கால வரலாறு கூறுகிறது. வெல்ல மண்டி வைத்திருந்தவர் இத்தனை உச்சத்துக்கு வந்திருக்கிறார் என்றால் அது அசாதரணமான வெற்றி. பொதுக் குழு கூட்டத்தில் ‘என்னை பழைய பழனிசாமினு நினைச்சிட்டிங்களா’ என்று ஆவேசமாய் பேசினார் எடப்பாடி பழனிசாமி, பழைய பழனிசாமியை அவர் குறைத்து மதிப்பிடுவது போன்ற தொனியில். ஆனால் அவர் பழைய பழனிசாமியாக இருந்தால்தான் அவரால் இனி வரும் சவால்களை சமாளிக்க இயலும்.
குனிய வேண்டிய இடத்தில் குனிந்து, வளைய வேண்டிய இடத்தில் வளைந்து, அடிக்க வேண்டிய இடத்தில் அடித்து, கவிழ்க்க வேண்டிய இடத்தில் கவிழ்த்து, ஓட வேண்டிய இடத்தில் ஓடி, தவழ வேண்டிய இடத்தில் தவழ்ந்து….இதுதான் பழைய பழனிசாமி.
அந்த பழைய பழனிசாமிதான் அவரை தமிழ் நாட்டு முதல்வராக்கியது, எதிர்க் கட்சித் தலைவராக்கியது, இணை ஒருங்கிணைப்பாளராக்கியது, இப்போது இடைக்கால பொதுச் செயலாளாராக்கியிருக்கிறது.