தன் செல்ல மகன் ரித்திக்குக்கு நுரையீரலில் சிக்கல். அவனால் ஆக்சிஜன் சிலிண்டர் உதவி இல்லாமல் வாழ இயலாது. அவனுக்கு சிகிச்சையளிக்க கேரளாவுக்கு சென்றுக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. பஸ் ஒரு மலைப்பாதையில் செல்லும்போது இயற்கை சீற்றத்தில் சிக்குகிறது. பஸ்ஸில் பயணித்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதே கதை.
த்ரில்லர் திரைப்படமாக எடுக்க முற்பட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ். ஆனால் படத்தை முழுமையான திரில்லர் என்று குறிப்பிட இயலாது. ஆனால் வித்தியாசமான திரைக்கதை, கதாபாத்திரங்களுடன் நம்மை ஈர்க்க முயன்றிருக்கிறார்.
கொரோனா இரண்டாம் அலையின் போது ஆக்சிஜன் தேவையை நாமெல்லோரும் தீவிரமாய் உணர்ந்தோம். அந்த ஆக்சிஜனை மையமாக வைத்து கதையை பின்னப்பட்டிருக்கிறது.
நயன்தாராவும் அவரது எட்டு வயது மகனும் பயணிக்கும் பஸ் நிலச் சரிவில் சிக்கிக் கொள்ளும்போது திரைக்கதை வேகமெடுக்கிறது.
உயிர் பிழைப்பதற்காக பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் ஆக்சிஜனுக்காக தடுமாறுகிறார்கள். எட்டு வயது மகனுக்காக நயன்தாரா கொண்டு வந்திருந்த ஆக்சிஜன் சிலிண்டருக்காக மோதல் ஏற்படுகிறது. காட்சிகள் பதைபதைக்க வைக்கின்றன. பரப்பான கதைக்களம் கிடைத்திருந்தும் படம் முழுவதும் அந்த பரபரப்பு இல்லை என்பது குறை.
‘அச்சுறுத்தும் போது இயற்கை இரக்கமற்றது’ என்று முதல் காட்சியிலேயே சொல்கிறார் நயன்தாரா, தனது மகனின் மூச்சுத் திணறல் பிரச்சினைக்கு தீர்வு காண முயலும் தாயாக அவரது நடிப்பு சிறப்பு.
இருக்கும் ஒரே ஆக்ஸிஜன் சிலிண்டரைப் பயன்படுத்தி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் காவலர் கருணை ராஜனிடமிருந்து பார்வதி தனது குழந்தையைக் காப்பாற்ற முயலும் காட்சிகளில் நயன்தாராவின் நடிப்பு படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்று.
நயன்தாராவின் எட்டு வயது மகனாக ரித்திக். நல்ல தேர்வு. நன்றாகவும் நடித்திருக்கிறான் சுட்டிப் பையன்.
ஒரு மருத்துவ மாணவர், அவரது பெண் தோழி, முன்னாள் எம்.எல்.ஏ. திமிர் பிடித்த போலீஸ்காரர் என வித்தியாசமான கதாபாத்திரங்கள். ஆனால் இந்த கதாபாத்திரங்களை சரியாக வடிவமைக்கவில்லை இயக்குநர். இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருக்கும் O 2 ஒரு உணர்வுபூர்வமான படம். படத்திற்கு நயன்தாரா மிக பெரிய பலம். ஆனால் அவர் மட்டுமே பலமாக இருப்பதுதான் படத்தில் பிரச்சினை. மற்றவர்களுக்கான முக்கியத்துவம் குறைவாக இருக்கிறது.
அறிமுக இயக்குனர் விக்னேஷின் முதல் படமே கவனிக்க வேண்டிய படமே அமைந்து இருக்கிறது. வித்தியாசமானா கதைக்களத்தில் ஒரு விறுவிறுப்பான கதை கொடுக்க முயற்சித்து இருக்கிறார். அவரது அடுத்தப் படம் இன்னும் சிறப்பாக அமையும் என்பது இந்தப் படத்தின் மூலம் தெரிகிறது.