தமிழ் சினிமாவில் மாற்றங்களை உருவாக்கிய படைப்பாளிகள் வரிசை எல்லீஸ் ஆர் டங்கன் முதல் பாரதிராஜா, பாலசந்தர், மகேந்திரன், பாலு மகேந்திரா என தொடரும். ஆனால் ஒரு இயக்குநருக்கான கமர்ஷியல் மார்க்கெட்டை மாற்றிய பெருமை ஷங்கருக்கு உண்டு.
ஷங்கர் இயக்கிய இரண்டுப் படங்கள் மாபெரும் வெற்றியடைந்ததுமே, அவருடைய பாதையை அவரே தீர்மானிக்க ஆரம்பித்தார். அதாவது, ஷங்கர் இயக்கும் படங்களுக்கான பட்ஜெட் இவ்வளவு என்று ஆரம்பத்தில் பேசப்பட்டாலும், படம் முடிவடையும் போது முடிவு செய்யப்பட்ட பட்ஜெட் அதிகமாக இருந்தது.
இதனால் ஷங்கர் அடுத்தடுத்து இயக்கியப் படங்களுக்கு பட்ஜெட் இவ்வளவு என்று சொன்னாலும், அதிலிருந்து சில பல கோடிகளை ரிசர்வ் ஆக வைத்தப்படியே தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரித்தார்கள்.
அடுத்து ஷங்கர் படங்கள் பெரும்பாலும், எப்போது வெளியீட்டு தேதி என்று குறிக்கப்படாமல், சொல்லப்படாமலேயே வெளியாவது வழக்கம். காரணம் இவரது படங்களில் சண்டைக்காட்சிகள், பாடல்காட்சிகளுக்கு அதிக ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகள் இருக்கும். இதனால் திட்டமிட்டப்படி பணிகள் முடியாவிட்டால் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும். இதனால் அவர் ரிலீஸ் தேதி பற்றி பூஜையின் போது பேசுவதே இல்லை.
இந்த பாணியைதான் இப்போது லோகேஷ் கனகராஜ் பின்பற்ற போகிறாராம். இந்த முடிவை லோகேஷ் கனகராஜ் எடுக்க காரணம் ’லியோ’. இப்படம் வெளியானதும் கலவையான விமர்சனங்களைப் பெற்றதை லோகேஷ் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லையாம். இதனால்தான் படம் வெளியான பிறகு, நான் எடுத்தது வேற. வெளியிட்டது வேற என மன்சூர் அலிகானின் ஃப்ளாஷ்பேக் பற்றி தானாக முன்வந்து விளக்கமளித்தார்.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு காரணம் படத்தை எடுத்தப்பின், சொன்ன ரிலீஸ் தேதியில் வெளியிட வேண்டுமென்ற நெருக்கடி இருந்ததுதான். இதனால் சுதந்திரமாக யோசித்து நினைப்பதை படத்தில் வைக்க முடியவில்லை. லியோ இரண்டாம் பாதிக்கு உண்டான பிரச்சினை மாதிரி, ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் பிரச்சினை வராமல் பார்த்து கொள்வேன். அதனால் இனி எடுக்கப்போகும் படங்களுக்கு ரிலீஸ் தேதி இதுதான் என்று அறிவிக்காமலேயே படம் பண்ணப் போகிறேன் என்று ஷங்கரின் பாலிஸிக்கு மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜின் இந்த முடிவுக்கு ரஜினியும், தயாரிப்பு நிறுவனமும் எந்த மறுப்பும் சொல்லவில்லையாம். இதனால் ரிலாக்ஸ் ஆகியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
தளபதி 68 – இளமைத் துள்ளும் விஜய்!
விஜய் நடிக்க ஆரம்பித்த காலத்தில் தொடர்ந்து காதல் கதைகளில் மட்டுமே நடித்துவந்தார். அடுத்து ’திருமலை’ படத்திற்குப் பிறகு காதலுடன் ஆக்ஷன் கலந்த கதைகளில் நடித்தார். ’துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு ஆக்ஷன், அரசியல் என ஒரு பக்கா கமர்ஷியல் ஹீரோவுக்கான கதைகளில் நடிக்க ஆரம்பித்தார்.
இப்படியே போனால் பெண்கள் மத்தியில் ஒர் ஈர்ப்பு இல்லாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில்தான் ‘வாரிசு’ படத்தில் நடித்தார்.
ஒரே மாதிரியான அடிதடி, ஆக்ஷன் மட்டுமே காட்டி நடிக்காமல் கொஞ்சம் ரூட்டை மாற்றி நடிக்கலாம் என்று நினைத்த போதுதான் வெங்கட் பிரபு கதை விஜய்க்கு பிடித்து போனது.
இந்த கதையில் விஜய்க்கு இரு வேறு காலக்கட்டத்தில் வந்து போகும் வகையில் தோற்றத்தில் மாற்றம் இருக்கிறதாம். அதில் ஒன்று இளமைத் துள்ளும் இளைய தளபதியாகவும், பின்னர் அவர் தளபதியாகவும் இருக்கும் வகையில் திரைக்கதை நகர்கிறதாம்.
இந்த தோற்ற மாற்றத்திற்காகதான் விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனை கல்பாத்தி ஆகிய மூவரும் வெளிநாட்டுக்கு சென்று வந்தார்கள். அங்கு விஜய் உடல் முழுவதும் உள்ள அசைவுகளை பதிவு செய்திருக்கிறார்கள். இதை வைத்து இளமையான விஜயை திரையில் உருவாக்க இருக்கிறார்கள்.
இந்த மாதிரியான கம்ப்யூட்டர் கலாட்டா வேலைகளுக்கு நாட்கள் அதிகம் பிடிக்கும். அதே போல் இதற்கான செலவும் பெரிதாக இருக்கும். அதாவது அந்த காட்சிகளை உருவாக்கும் ஒவ்வொரு நொடிக்கும் இவ்வளவு பணம் என கணக்கிடுவார்கள்.
அந்தவகையில் விஜயின் தோற்றத்திற்காக மட்டும் செலவான தொகை 5 கோடி என்கிறார்கள்.
சாலட் வியாபாரம் பண்ணும் நடிகை!
தமிழ் சினிமாவில் கடந்த தலைமுறை நடிகைகளுக்கும், இப்போதுள்ள இளைய தலைமுறை நடிகைகளுக்கும் இடையே எக்கச்சக்கமான மாற்றங்கள்.
முன்பெல்லாம், ஒரு நடிகை ஷூட்டிங்கிற்கு வருகிறார் என்றால் அவருடன் அவரது அம்மா அல்லது அப்பா என யாரேனும் கூட வருவார்கள். சென்னை அல்லாமல் வெளியூர்களில் ஷூட்டிங் இருந்தால், நடிகையுடன் அவர்களும் ஹோட்டல்களில் தங்குவார்கள்.
கடந்த தலைமுறை நடிகைகள் சம்பாதிப்பதை அப்படியே தங்களது பெற்றோர்களிடமோ அல்லது உடன்பிறந்த சகோதரர் சகோதரிகளிடமோ கொடுத்து, அதை பத்திரமாக பராமரிக்க சொல்வார்கள். வேறெந்த துறையிலும் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள்.
இப்படி பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இன்றைய இளைய தலைமுறை நடிகைகள் இந்த மாதிரியான விஷயங்களுக்கெல்லாம் யாரையும் சார்ந்து இருப்பது இல்லை. தங்களுடைய கால்ஷீட், ஷூட்டிங் பயணம், சம்பாதிக்கும் சொத்தை முதலீடு செய்வது என தன்னிச்சையாக செயல்படுமளவிற்கு சுதந்திரமான பெண்களாக இருக்கிறார்கள்.
குறிப்பாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், அஜித்தின் ‘நேர்க்கொண்ட பார்வை’, மாதவன், விஜய் சேதுபதி இணைந்த ‘விக்ரம் வேதா’, சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் இவர் ரொம்பவே வேறு மாதிரி.
ஷ்ரத்தா ஸ்ரீநாத், தன்னை ஹீரோயின் என்று சொல்லிக் கொள்வது இல்லை. நடிகை என்று சொல்வதில்தான் இவருக்கு பெருமை. எந்த விஷயங்களையும் பேசக்கூடிய அளவிற்கு மெச்சூர்டான நடிகையாக இருக்கும் இவர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். ரியல் எஸ்டேட் துறையில் ஒரு நிறுவனத்தின் வழக்கறிஞராக பணியாற்றியவர். சினிமா மீது கொண்ட காதலால், நீதிமன்றம் பக்கம் போய் கொண்டிருந்தவர், ஸ்டூடியோக்கள் பக்கம் திரும்பிவிட்டார்.
சினிமாவில் நடிப்பதோடு, இவர் வியாபாரத்திலும் இறங்கியிருக்கிறார். நயன்தாரா லிப் பாம், சரும பராமரிப்பு தயாரிப்புகளில் ஆர்வம் காட்டுகிறார் என்றால் இவர் சாலட்களை விற்பதில் மும்முரமாகி இருக்கிறார்.
யோகா செய்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள்தான் இவரது இலக்கு. இதனால் யோகா சென்டர், ஜிம் ஆகியவற்றுக்கு பக்கத்தில் சாலட் கடைகளை திறந்திருக்கிறார்.
பழங்கள், காய்கறிகள் மட்டுமே கொண்டு செய்யப்படும் சாலட்களை இவர் விற்கிறார்.