ஜப்பானியர்கள் மீது நமக்கு எப்போதுமே ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது. அவர்களின் உழைப்பை நாம் எல்லோரும் மதிக்கிறோம். 2-வது உலகப் போரின்போது கிட்டத்தட்ட அழிந்துபோன தங்கள் நாட்டை மீட்டு, இன்று மிக முன்னேறிய நாடாக அவர்கள் மாற்றியதற்கு காரணம் உழைப்பு. இப்படி உழைப்புக்கு பெயர்பெற்ற ஜப்பானியர்களிடையே உள்ள மற்ற சில விசித்திர வழக்கங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்…
உதவிகள் விரும்பப்படாது
ஒருவருக்கு உதவுவது உயர்ந்த குணமாக இந்தியாவில் பார்க்கப்படுகிறது. அப்படி ஒருவர் உதவினால் அவருக்கு நன்றி சொல்வது நம் வழக்கம். ஆனால் ஜப்பானில் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்வதை யாரும் விரும்புவதில்லை. அதை மற்றவரின் வேலையில் தலையிடுவதாகத்தான் கருதுகிறார்கள். ஜப்பானியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வேலையை தாங்களே செய்ய விரும்புவதால் இந்த நிலை இருக்கிறது.
நோ டிப்ஸ்
ஓட்டலில் சாப்பிட்டதும் சர்வருக்கு டிப்ஸ் கொடுப்பது நம் வழக்கம். ஆனால் ஜப்பானியர்கள் அப்படி டிப்ஸாக பணம் கொடுப்பதை விரும்புவதில்லை. நாம் டிப்ஸ் கொடுத்தாலும் அதை வாங்கிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அதற்கு பதிலாக நம் அன்பை வெளிப்படுத்த ஏதேனும் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்தால் அதை அன்புடன் ஏற்றுக்கொள்வார்கள்.
அதேபோல் புதிதாக ஒரு இடத்துக்கு செல்லும்போது அங்கே இருப்பவர்களுக்கு ஏதாவது பரிசுப் பொருட்களை வாங்கிச் செல்வதும் ஜப்பானியர்களின் கலாச்சாரமாக இருக்கிறது. ஒருவர் அன்பாக வாங்கிவரும் பரிசுப் பொருளை தட்டாமல் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் கலாச்சாரத்தில் உள்ளது.
வேலை நேரம் மேலதிகாரி கையில்
பெரும்பாலான நாடுகளில் 8 மணிநேர வேலை என்பது பொதுவான அம்சமாக இருக்கிறது. ஒருவர் எத்தனை மணிக்கு வேலைக்கு வருகிறாரோ அதிலிருந்து 8 மணிநேரம் கழித்து வீடு திரும்புவார்கள். அந்த நேரத்தில் அலுவலகத்தில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தங்கள் வேலை நேரம் முடிந்ததும் வீட்டுக்கு கிளம்பிவிடுவார்கள். ஆனால் ஜப்பானில் அப்படி இல்லை. ஒவ்வொரு அலுவலகத்திலும், ஒருவர் எத்தனை மணிக்கு வேலைக்கு வந்தாலும், அங்குள்ள தங்கள் மேலதிகாரி வீட்டுக்கு கிளம்பிய பிறகே அலுவலகத்தில் இருந்து புறப்படுவார்கள். அதனால் அங்கு ஒருவர் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவது அவர்கள் கையில் இல்லை. மேலதிகாரியின் கையில்தான் இருக்கிறது.
அதேநேரத்தில் கூடுதல் நேரம் வேலை செய்பவர்களுக்கு ஓவர்டைம் சம்பளம் கொடுக்கும் வழக்கமும் அங்கு இல்லை. ஆனால் வேலை நேரம் முடிந்த பிறகு சாதாரண ஊழியரும், மேலதிகாரியும் அங்கு ஒன்றுதான் இருவரும் இணைந்து பப்களில் ஒன்றாக நேரம் செலவழிப்பதை அங்கு பார்க்க முடியும்.
தோள்களில் அடுத்தவர் தூங்குவது சகஜம்
பேருந்தில் பயணம் செல்லும்போது பக்கத்தில் இருப்பவர்கள் நம் தோளில் தூங்கி விழுந்தால் நமக்கெல்லாம் கோபம் வரும். ஆனால் ஜப்பானியர்கள் அப்படி கோபப்பட மாட்டார்கள். அதற்கு பதிலாக “பாவம் நீண்ட நேரம் வேலை பார்த்து களைப்பாக இருக்கிறார்” என்று தூங்குபவரைப் பார்த்து அனுதாபப்படுவார்கள். முடிந்தவரை அவரது தூக்கத்தை கெடுக்காமல் இருப்பார்கள். அங்கு பலரும் 12 மணிநேரம் வரை தினசரி வேலை பார்ப்பது இதற்கு காரணம். இதனாலேயே அங்குள்ள ரயில்கள், பேருந்துகளில் அடுத்தவர் தோளில் சாய்ந்து உறங்கும் ஏராளமானவர்களைப் பார்க்கலாம்.
வீடுகளுக்கு நோ விருந்தாளி
வார விடுமுறை நாட்களில் நண்பர்களின் வீட்டுக்கு சென்று வருவது நம் வழக்கம். ஆனால் ஜப்பானியர்கள் யாரும் யாருடைய வீட்டுக்கும் செல்ல மாட்டார்கள். வீடு என்பது ஒருவரின் தனிப்பட்ட இடம் என்பதில் ஜப்பானியர்களுக்கு உள்ள உறுதியான நம்பிக்கைதான் இதற்கு காரணம். விடுமுறை நாட்களில் நண்பர்களை சந்திக்க வேண்டும் என்றால், அவர்களை பொது இடத்துக்கு அழைத்து சந்தித்து பேசுவதை ஜப்பானியர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதனாலேயே ஜப்பானில் மக்கள் சந்தித்து பேசுவதற்கான பொது இடங்கள் நிறைய உள்ளன.
கிளப்களில் no dance
நம் ஊரில் பல இடங்களில் புகை பிடிக்காதீர் என்ற எச்சரிக்கை பலகை இருக்கும். அதேபோல் ஜப்பானில் உள்ள பல கிளப்களில் ‘no dance’ என்ற எச்சரிக்கை பலகையை காணலாம். ஜப்பானில் உள்ளவர்கள் பரஸ்பரம் சந்தித்துக்கொள்ள கிளப்களை பயன்படுத்துவார்கள். அதனாலேயே அங்குள்ள கிளப்கள் பெரும்பாலும் நெரிசலாக இருக்கும். இந்த நெரிசலில் டான்ஸ் ஆடினால் இன்னும் பிரச்சினை என்பதால் இப்படி எச்சரிக்கை பலகைகளை வைக்கிறார்கள். விஸ்தாரமான ஒருசில கிளப்களில் மட்டும் நடனமாட அனுமதி உண்டு.
4-ம் நம்பருக்கு அதிர்ஷ்டமில்லை
நம் நாட்டில் 8-ம் எண்ணை ஒருசிலர் அதிர்ஷ்டமில்லாத எண்ணாக கருதுவார்கள். சில நாடுகளில் 13 அதிர்ஷ்டமில்லாத எண்ணாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஜப்பானில் 4-ம் எண்ணை அதிர்ஷமில்லாத எண்ணாக கருதுகிறார்கள். அதிலும் ஒருசிலர் அந்த எண்ணை இறப்புக்கு இணையான எண்ணாக கருதுகிறார்கள். அதனால் முடிந்தவரை அந்த எண்ணைத் தவிர்ப்பார்கள். ஓட்டல்களில்கூட 4-ம் எண் அறையைப் பார்க்க முடியாது.
ஆண்களுக்கு அதிக சம்பளம்
என்னதான் முன்னேறிய நாடாக இருந்தாலும் ஜப்பானில் ஆண் – பெண் இடையிலான பேதம் அதிகமாக இருக்கிறது. பென்களால் குறிப்பிட்ட வேலையைத்தான் செய்ய முடியும், ஆண்களைப்போல் அவர்களால் கடினமான வேலைகளைச் செய்ய முடியாது என்ற எண்ணம் ஜப்பானியர்களிடையே இருக்கிறது. அதனால் அங்கு ஆண்களைவிட பெண்களுக்கு குறைந்த அளவிலேயே ஊதியம் வழங்கப்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரையில் ஜப்பானில் இது மிகப்பெரிய குறையாக இருக்கிறது.
எங்கும் எதிலும் அமைதி!
பொது இடங்களிலோ, பஸ் ரயில் பயணங்களின் நடுவிலோ தொலைபேசி அழைப்பு வந்தால், “ஆ… அப்புறம்… சொல்லு மச்சான்” என்று ஆரம்பித்து சத்தமாக பேசும் பலரை நம் நாட்டில் பார்த்திருக்கலாம். ஆனால் ஜப்பானில் அப்படிப்பட்ட ஆட்களை பார்க்கவே முடியாது. பொது இடங்களில் தங்களுக்கு போன் வந்தால்கூட ஒரு கையால் வாயை மூடிக்கொண்டு மற்றவர்களை பாதிக்காத வகையில் சன்னமான குரலில் பேசுவது ஜப்பானியர்களின் வழக்கம். வாகனங்கள்கூட சத்தமாக ஹாரனை ஒலிக்க விடாது. அதனால் ஜப்பானில் திரும்பிய பக்கமெல்லாம் அமைதியைக் காணலாம்.