கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தடைந்தார். சென்னையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி, இன்றிரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். நாளை (ஜனவரி 20 ) காலை திருச்சிக்கு செல்லும் பிரதமர் மோடி, 11 மணியளவில் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த கோவிலில் கம்ப ராமாயணத்தின் வரிகளை பல்வேறு அறிஞர்கள் வாசிப்பதையும் பிரதமர் கேட்கவுள்ளார்.
அதன்பிறகு, பிற்பகல் 2 மணியளவில் ராமேஸ்வரம் செல்லும் பிரதமர், அங்கு அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் வழிபாடு செய்கிறார். தனுஷ்கோடிக்கு அருகில், ராமர் பாலம் கட்டப்பட்ட இடமாகக் கூறப்படும் அரிச்சல் முனைக்கும் பிரதமர் செல்கிறார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னை, திருச்சி மற்றும் ராமேஸ்வரத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்
பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “என் குடும்பத்தினர் எப்போதும் அதிமுகவில்தான் இருந்துள்ளனர். நன்றியை மறக்கக் கூடாது என்பதற்காக அதிமுகவில் இணைந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து கடந்த ஆண்டில் விலகிய அவர், அதன்பிறகு கடந்த பல மாதங்களாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக முன்னாள் பொருளாளராகவும், முன்னாள் மின்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஆற்காடு வீராசாமி ( 92 ). வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து வட பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு முட நீக்கியல் துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக திமுக எம்எல்ஏ மகன் மீது வழக்கு
வீட்டு பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி. சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார். செல்வியின் மகள் ரேகா 12-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு மேற்கொண்டு படிக்க வசதி இல்லாமல் தாயை போலவே வீட்டு வேலை செய்ய சென்றுள்ளார். சென்னை பல்லாவரத்தில் திமுக எம்எல்ஏவாக இருக்கும் கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார் ரேகா.
இந்நிலையில் வீட்டு வேலைக்கு சேர்ந்த ரேகாவை தீயினால் சுட்டும், தலை முடியை வெட்டியும் அவர்கள் கொடுமைபடுத்தியதாக ரேகா குற்றம் சாட்டி உள்ளார்.
பொங்கல் பண்டிகைக்காக வீட்டிற்கு வந்த ரேகா தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தனது அம்மாவிடம் சொல்லி அழுதிருக்கிறார். உடலில் அடிப்பட்ட மற்றும் தீயினால் சுட்ட காயங்கள் இருந்ததால் அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் போலீஸில் புகார் செய்யச் சென்றுள்ளார். சம்பவம் நடந்தது சென்னை திருவான்மியூர் என்பதால், உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து நீலாங்கரை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ, மருமகள் மர்லினா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி அளித்த பேட்டி ஒன்றில், “என் மகனுக்கு 7 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகிவிட்டது. அவர் அவரது குடும்பத்துடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். நான் வேறு பகுதியில் வசிக்கிறேன். அவர்கள் எப்போதாவது இங்கு வருவார்கள். நானும் எப்போதாவது அங்கு செல்வேன். அங்கு நடந்தது என்னவென்ற முழு விவரம்கூட எனக்குத் தெரியாது. நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். நான் இதில் ஏதும் தலையிடவில்லை. இந்த விவகாரத்தில் எனக்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.