காதல் தோல்விகள், சர்ச்சைகள் என பரபரப்பான நடிகையாகவே சினிமாவில் தொடரும் நயனுக்கு, எவை மைனஸாக இருந்ததோ அவையே ப்ளஸ் ஆக இருந்தன.
இதனால் அதிகம் பேசப்படும் நடிகையாக முக்கியத்துவம் பெற்றவர் அடுத்து தென்னிந்தியாவில் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டத்தோடு, அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையையும் பெற்றார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பியிருக்கிறார் நயன்தாரா. சமாச்சாரம் என்னவென்றால், ஸீ ஸ்டுடியோ அறிமுக இயக்குநர் நீலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அடுத்து தயாரிக்கவிருக்கும் படத்தில் நடிக்க நயனை அணுகியதாம் சேனல் தரப்பு.
உற்சாகமாக அவர்களை வரவேற்ற நயன், சம்பளம் பத்து என்றாராம். சேனல் தரப்பு கொஞ்சம் திகைத்தாலும், இதுவரை மறுப்பு எதுவும் சொல்லவில்லையாம். 5 கோடி வாங்கிக் கொண்டிருக்கும் நயன் சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தினாலும், அவரை வைத்து பிஸினெஸ் செய்துவிடலாம் என சேனல் தரப்பு யோசித்து வருகிறதாம்.
இதுவரையில் ஆலியா பட், திபீகா படுகோன் மட்டுமே 8 கோடி முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்கி வந்தனர். இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் இவர்கள் இருவரும்தான். இப்போது நயனும் அந்த பட்டியலில் இணைந்துவிடுவார் என்கிறார்கள்.
ராஷ்மிகா மந்தனாவின் புதிய சம்பளம்!
ஒரேயொரு படம். ஒரேயொரு பாடல். அந்த ஒரேயொரு டான்ஸ் மூவ்மெண்ட். இன்று ஒட்டுமொத்த இளம் இந்தியாவும் ’நேஷனல் க்ரஷ்’ ஆக கொண்டாடும் ராஷ்மிகாவின் ப்ரொஃபைல் வேறு லெவலில் இருக்கிறது.
கன்னட சினிமாவிலிருந்து தெலுங்கு சினிமாவிற்கு புலம் பெயர்ந்த ராஷ்மிகா, ’கீதா கோவிந்தம்’ படத்திற்குப் பிறகு ‘புஷ்பா’ படத்தில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கினார்.
ஆனால் ஒடிடி மூலம் ‘புஷ்பா’ ஃபயர் போல் பற்றிக்கொள்ள, இப்போது ஹிந்தி சினிமாவில் முகாமிட்டு இருக்கிறார் ராஷ்மிகா.
தனக்கு தற்போது கிடைத்திருக்கும் மவுசு எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது தெரியாது என்பதை நன்றாகவே புரிந்தும் வைத்திருக்கிறார். இதனால் தடாலடியாக அவர் செய்த காரியம் தனது சம்பளத்தை உயர்த்தியதுதான்.
அதிலும் கூட கில்லாடித்தனமாக செயல்படுகிறார். ஹிந்திப் படங்களில் நடிக்க 4 கோடி என்று முடிவு செய்திருக்கிறாராம். அப்படியானால் தமிழ், தெலுங்குப் படங்களில் நடிக்க எவ்வளவு என்று கேட்டால், 3 விரல்களைக் காட்டுகிறாராம்.
சம்பள உயர்ந்தாலும் கூட ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்ய கோலிவுட்டில் முண்டியடித்து கொண்டு கதை சொல்ல இயக்குநர்கள் அப்பாயின்மெண்ட் கேட்டு காத்திருக்கிறார்களாம்.
காஜல் அகர்வாலை அழைத்த கமல்!
இயக்குநர் ஷங்கரும், கமலும் இணையும் ‘இந்தியன் – 2’ படத்தின் ஷூட்டிங்கில் பல்வேறு பிரச்சினைகள், அடுத்து நிதி நெருக்கடி என தொடர்ந்ததால் அதன் ஷூட்டிங் தடைப்பட்டு நின்றது.
ஆனால் ‘விக்ரம்’ படத்தின் வெற்றி தற்போது ‘இந்தியனின்’ தலைவிதியை மாற்றியிருக்கிறது. ’விக்ரம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பினால், இந்தியனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கலாம் என கமல் களத்தில் இறங்கியிருக்கிறாராம்.
ஷங்கரிடம் பேசிய கமல் அடுத்த ஷெட்யூலுக்கான வேலையைத் தொடங்குமாறு கேட்டிருக்கிறாராம். இந்தியன் – 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் கமிட்டாகி இருந்தார். படம் நின்றுபோக, தனது வாழ்க்கையைத் தொடர நினைத்த காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். இதனால் காஜல் அகர்வால் இந்தப் படத்தில் இல்லை என்று முதலில் நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
காஜல் சோர்ந்து போயிருந்த இத்தருணத்தில் திடீரென ஒரு தொலைப்பேசி அழைப்பு வர, அந்த அழைப்பை பேசி முடித்ததும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால்.
’செப்டெம்பர் 13-ம் தேதி ‘இந்தியன் – 2’ ஷூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறது. அதனால் ஷூட்டிங்கிற்கு தயாராக இருங்கள். கமலும், ஷங்கரும் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்’ என்று போனில் தகவல் தெரிவிக்கப்பட்டதாம்.
மகன் நீல் பிறந்த நேரம், காஜல் அகர்வாலுக்கு மீண்டும் நல்ல நேரம் ஆரம்பித்திருக்கிறது.