No menu items!

மிஷ்கின் என்னும் பைத்தியக்காரன் – Mysskin Birthday Special

மிஷ்கின் என்னும் பைத்தியக்காரன் – Mysskin Birthday Special

சு. கஜன் 

இயக்குநர் மிஷ்கின் பிறந்த நாள் இன்று. இந்த நாளில் மிஷ்கினின் சினிமாக்கள் குறித்து ஒரு அலசுகிறார் விமர்சகர் சு. கஜன்…

சினிமாவில் இரண்டு வகையினர் உண்டு. ஒன்று சினிமாவை பயன்படுத்துபவர்கள், இரண்டாவது சினிமாவுக்கு பயன்படுபவர்கள். மிஷ்கின் இரண்டாவது வகை. அதற்காக மிஷ்கின் படைப்புகள் எல்லாம் கலைப் படைப்புகள் என்று அர்த்தமல்ல. சிறப்பான திரைக்கதை, இசை, ஒலி அமைப்பு, காட்சிக் கோணம் என பல தளங்களில் அவரது நுணுக்கம் வெளிப்படுகிறது. வணிக சமரசத்திற்கான காட்சிகள் உண்டு என்ற போதிலும், அதிகபட்சம் கலையை பயன்படுத்தக்கூடிய இடங்களிலெல்லாம் பயன்படுத்துகிறார்.

அண்மையில் வெளிவந்த ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தை மக்கள் அனைவரும் கட்டாயம் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததும் அதன் இயக்குநர் மணிகண்டனை தானே நேரில் சென்று சந்தித்தமையும் மிஷ்கினின் சினிமா மீதான தீராக் காதலின் வெளிப்பாடுதான். தமிழ் சினிமாவின் எந்த பிரமாண்ட அல்லது பிரபல இயக்குநர்களும் இவ்வாறு செய்வதில்லை.

மிஷ்கின் திரைப்படம் ஒவ்வொன்றிலும் கவித்துவமான, ஜென் தன்மை கொண்ட காட்சிகள், ஆழ்ந்த உண்மைகளை எளிமையாக வெளிப்படுத்தும் உரையாடல்கள் என ஒரு விதமான முழுமை காணப்படுகிறது. மிஷ்கினின் திரைப்படங்கள் ரசிக்கத்தக்க ஜென் தருணங்களைக் கொண்டவையாக இருப்பதற்கு, அவர் அவர் ஜப்பானிய ஹைக்கூவின் பெரிய ரசிகன் என்பதும் ஒரு காரணம்.

ஜென் கதையில் ஒருவர் இருட்டினுள் தொலைத்த சாவியை வெளிச்சத்தினுள் தேடுவார். அதைப் போல, ‘யுத்தம் செய்’ படத்தில் கதாநாயகன் தனது காணாமல் போன சகோதரியை தேடி, அவளைக் கடைசியாகப் பார்த்த தெருவிளக்கின் கீழ் ஒவ்வொரு இரவையும் கழிக்கிறான். கதாநாயகன் தவறான இடத்தில் தேடிக் கொண்டிருக்கிறான் என்ற ஜென் கதையின் வெளிப்பாடுதான் அது.

ஒரு ஓவியன் காட்சிகளின் மூலமாகவே தனது கருத்தை வெளிப்படுத்துகிறான், வார்த்தைகளுக்கு அங்கு இடமில்லை. அதேபோல் ஓவியங்கள் மீது அதிக ஈடுபாடு கொண்ட, காட்சிகளின் மூலமாகவே சிந்திக்கும் தன்மை கொண்ட மிஷ்கின், தான் சொல்ல வந்ததை குறைந்த வசனத்துடன் அதிக வீரியத்துடன் காட்சிகளின் மூலமாகவே பார்வையாளனுக்கு கடத்தி விடுகிறார். அந்த வகையில் ‘முகமூடி’ திரைப்படம் அழகியல்தன்மை அதிகம் கொண்ட ஒரு திரைப்படம். (ஆனால், கதையில் கவனத்தை சிதறவிட்டுவிட்டதால் படைப்பு ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் அது தோல்வியை தழுவியது.)

மிஷ்கினின் படங்களில் அடிநாதமாக இழையோடிக் காணப்படும் மனித நேயம், பிரச்சார நோக்கில் வலிந்து திணித்தது போல் இல்லாமல், கதையோடு ஒன்றி கவித்துவமாகவும் தனித்துவமாகவும் காணப்படுவது கவனிக்க வேண்டியது. தன்னை காயப்படுத்திய குடிகாரனைக் கூட வைத்தியசாலையில் சேர்க்கும் சித்தார்த்தின் அம்மா, பிச்சைக்காரர்களுக்கு சித்தார்த் செய்யும் உதவி, பவானியின் தந்தைக்கு சித்தார்த் செய்யும் உதவி, வோல்(f) எட்வார்ட்டாக மாறி அவனின் குடும்பத்தைக் காப்பாற்றுதல் என பல உதாரணங்கள் உள்ளன.

பேய், பிசாசு என்றால் வன்முறை, ஆபாசம், மட்டமான காமெடிகள், பழி வாங்கும் குணம், இரத்தம் குடிக்கும் காட்டேரி என சென்றுகொண்டிருந்த தமிழ் சினிமாவில் பிசாசை ஒரு அன்பின் குறியீடாக, தேவதையாக காட்டியவர் மிஸ்கின். பேய் என்றால் என்ன என்ற கேள்விக்கு, எந்த ஒரு அதீத உணர்வும் பேய்தான் என்கிறார் மிஸ்கின். பேய் என்னும் அதீத உணர்வு, சினிமா என்னும் வடிவில் மிஷ்கினுள் இருப்பதனாலேயே அவரது திரைப்படங்கள் ரசனை மிகுந்த சினிமாவாக காணப்படுகின்றது.

பல பிரபல இயக்குநர்கள் கூட திருநங்கைகளை கேலிப் பொருளாக்கி மிக மோசமாகவே சித்தரித்துக் கொண்டிருந்த வேளை, சமூகம் ஒதுக்கிய திருநங்கைகளும் எங்களை போன்ற மனிதர்கள்தான், அவர்களுக்கும் உணர்வு உண்டு என எடுத்துக்காட்டியவர் மிஷ்கின்.

இதுபோல் யதார்த்த உலகை சந்திக்க முடியாமல் தயங்குகிறவர்களுக்கும் ஒரு இடத்தை தனது படத்திலே ஆங்காங்கே கொடுத்துவிடுகிறார். அதாவது, பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள் போன்ற இச்சமூகம் ஒதுக்கிய நபர்களுக்கும் வாழ்வு உண்டு என்பதை படங்களில் பதிவு செய்யத் தவறுவதில்லை.

‘துப்பறிவாளன்’ படத்தில் பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்துவதற்காக ஒரு பிரபல நடிகரைக் காணவில்லை என்றோ அல்லது ஏதோ ஒரு பிரமாண்ட பொருளைக் காணவில்லை என்றோ முதல் காட்சியை அமைத்திருக்க முடியும். ஆனால், நாய்க்குட்டியைக் காணவில்லை என்றே அதன் முதல் காட்சியை அமைக்கிறார். ஒரு எளிய எண்ணத்தை மிகப்பெரும் கருத்துருவாக மாற்றுவதும் அதை மக்கள் கொண்டாடும் படைப்பாக மாற்றுவதும் ஒரு படைப்பாளியின் முக்கிய திறனாகும். மிஷ்கின், எளிய விடயங்கள் மூலம் மக்கள் மனதைத் தொடும் ரஸவாதிதான் என்பதை இதில் நிருபிக்கிறார்.

செயற்கைத்தன்மையான உடல் மொழி, இருண்ட காட்சிகள், கால் ஷாட், வன்முறை போன்றவை மிஷ்கின் படங்களில் பொதுவாகக் காணப்படும் அம்சம். இதற்காக அவர் விமர்சிக்கவும் படுகிறார். ஆனால், அதையும் தாண்டி மிஷ்கின் படங்களில் காணப்படும் கதை நரம்பு பேரன்பு, கருணை, மனிதம்.

அன்புதான் ஆதி, அதுதான் தாய். எனவே, அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பதுதான் தனது பாணி என மிஷ்கின் நம்புகிறார் என தோன்றுகிறது. இயேசு, புத்தர், முகம்மது என அனைவரும் அன்பைத்தான் போதித்தனர். தானும் தனது படங்களின் மூலம் அதே அன்பை போதிக்க வேண்டும் என நினைக்கலாம். ஒரு குழந்தையிடம் காணப்படும் அன்பு, கடவுளிடம் உள்ள கருணை – இதனையே தனது படைப்புகளில் மிஷ்கின் வெளிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

மிஷ்கின் அரசியல் சார்பான படம் எடுப்பதில்லை என்பது பரவலாக அவர் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு. ஆனால், வெளிப்புற அரசியலை தொடுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே, அதற்கு மிஷ்கினும் தேவை அல்ல. மனிதர்களின் உளவியலைப் பேசுவதே அவரது படங்களின் அரசியல். அரசியல் சார்பற்ற அழகியல்வாதம் தான் மிஷ்கினின் பாணி.

தான் காதல் படங்களை ஏன் எடுப்பதில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த மிஸ்கின், “என்னைப் பொறுத்தவரை, காதலை விட முக்கியமான பல உணர்ச்சிகள் உள்ளன. நான் மற்றவர்களை கேலி செய்து படம் எடுப்பதில்லை. ரொமான்ஸ் என்பது 18 முதல் 35 வயதுக்குள் நீங்கள் அனுபவிக்கும் ஒரு சிறிய அனுபவமாகும். அதனால் என்னால் அதை பெரிதாக காட்ட முடியாது. காதலுக்கு அப்பாலும் ஒரு வாழ்க்கை உண்டு, நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்பதைப் புரிந்துகொள்ள காதலை மட்டுமல்லாமல் பல்வேறு உணர்ச்சிகளை நீங்கள் அனுபவிக்க வேண்டும்” என்கிறார்.

மிஷ்கினின் பெரும்பாலான கதாநாயகர்கள் வீரம் இல்லாதவர்கள், தயக்கமானவர்கள், உலகின் மோசமான நடவடிக்கைகளினால் உறிஞ்சப்பட்டுக் கொண்டிருப்பவர்கள். பின்னர் ஒருவித உணர்தல் நிலைக்கு ஆட்பட்டு கருமை நிலையிலிருந்து வெண்மை நிலைக்கு மாறுபவர்களாக காணப்படுகின்றனர். ‘அஞ்சாதே’ சத்யா, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ சந்துரு, ‘யுத்தம் செய்’ ஜே.கே போன்றோர் சில உதாரணங்கள்.

சில கதாநாயகர்கள் ஒருவித ஆத்மார்த்த தேடலை நோக்கிப் பயணப்படுபவர்களாக காணப்படுகின்றனர். ‘பிசாசு’ சித்தார்த், ‘துப்பறிவாளன்’ கணியன் பூங்குன்றன், ‘சைக்கோ’ கெளதம் போன்றோர் அவ்வகையில் அடங்குவர்.

வெறும் கருப்பு வெள்ளையாக மட்டுமல்லாமல் சாம்பல் நிற கதாபாத்திரங்களும் மிஷ்கின் படங்களில் காணப்படும். நல்லவராக இருக்க விரும்பும் தீயவர்கள், தீயவராக இருக்க விரும்பும் நல்லவர்கள், தீயதை நிறுத்த விரும்புபவர்கள், நல்லவராக இருப்பதை நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள் என பலவாறாக அவர் படங்களில் மனிதர்கள் வெளிப்படுகின்றனர்.

தஸ்தாவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் கதைக்கரு குற்றவுணர்வு. இந்தக் குற்றவுணர்வுதான் மிஷ்கின் படங்களின் பொதுத்தன்மையாக காணப்படுகின்றது. அவரது முதல் படமான ‘சித்திரம் பேசுதடி’-இல் கதாநாயகியின் தந்தை பாலியல் தொழிலாளியிடம் சென்றதற்கான பழியை கதாநாயகன் ஏற்றுக்கொள்ளுவான். அந்தக் குற்றவுணர்வால் கதாநாயகியின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார். ‘அஞ்சாதே’ படத்தில் கதாநாயகன் சத்யா மோசடி செய்து பரிட்சையில் சித்தி யெய்த, நன்றாகப் படித்த கிருபா தோல்வி அடைகிறான். இந்தக் குற்றவுணர்வு சத்யாவை கடைசிவரை உறுத்திக்கு கொண்டே இருக்கின்றது. ‘நந்தலாலா’ படத்தில் பாஸ்கர்மணிக்கு தனது தாயை இறுதியில் பார்க்கும்போது ஏற்படும் குற்றவுணர்வு; ‘யுத்தம் செய்’ படத்தில்  கதாநாயகன் ஜே.கே.க்கு, தான் ஒரு சிறந்த சி.பி.சி.ஐ.டி ஆக இருந்தும் கூட தனது தங்கையைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்கிற குற்றவுணர்வு; தான் பணத்துக்கு கொலை செய்யும் ஒரு கூலிப்படையாக இருந்த போதும் கண்ணு தெரியாத ஒரு சிறுவனைக் கொன்றுவிட்டோமே என்ற வோல்ஃபின் குற்றவுணர்வு, ‘துப்பறிவாளன்’ படத்தில் தான் ஒரு துப்பறியும் முகவராக இருந்தும் கூட கதாநாயகியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற கதாநாயகன் கனியன் பூங்குன்றனின் குற்றவுணர்வு; ‘பிசாசு’ படத்தில் தான் காப்பாற்ற நினைத்த பெண்ணை விபத்தின் மூலம் கொன்றதே தான்தான் எனத் தெரிய வரும்போது கதாநாயகன் சித்தார்த் படும் குற்றவுணர்வு என அனைத்திலும் குற்றவுணர்வே பிரதான உணர்வாக பிரதிபலிக்கின்றது.

தஸ்தாவ்ஸ்கியின் நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள் இயல்புடன் குழப்பங்களும் கொண்ட கதாபாத்திரமாகவே இருக்கிறார்கள். அக்கதாபாத்திரங்கள் காதலை உணரும்பொழுது தன்னை திருத்திக்கொள்வார்கள். காதலை மனது ஒரு நிமிடம் முழுமையாக உணர்ந்துகொண்டால் வாழ்க்கை முழுமைக்கும் அது போதுமானது என்கிறார் தஸ்தாவஸ்கி. கொடூரமான மனிதனை காதல் எவ்வாறு மாற்றுகிறது என்பதைக் காட்டும் ‘சைக்கோ’ படம் கூட தஸ்தாவஸ்கியின் தாக்கத்திலிருந்து உருவானது எனலாம். ‘சைக்கோ’ படத்தின் கதாநாயகன் காதலை உணரும்பொழுது தன்னை தானே அழித்துக்கொள்வது குற்றவுணர்வின் அதிஉச்சம் எனலாம்.

மிஷ்கினுக்கு எதிராக முன்வைக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, அதிக மிகைப்படுத்தும் காட்சிகள். ஆனால், மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் மூலம் பல நுணுக்கங்களையும் உருவகங்களையும் பார்வையாளர்களுக்கு கடத்துவதுதான் அவரின் உத்தி. இறுக்கமான கதையின் மூலம் பார்வையாளர்களை மெலோட்ராமாட்டிக் (Melodramatic) என்னும் ஒருவித உயர் நிலையில் வைத்திருத்தலே அவரின் திறன்.

மிஷ்கினின் கதாபாத்திரங்கள் அதீத உணர்ச்சியை வெளிக்காட்டுபவர்களாக இருக்கிறார்கள் என்ற விமர்சனமும் பரவலாக மிஷ்கின் மேல் வைக்கப்படுகின்றது. தஸ்தாவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் வரும் கதாபாத்திரங்கள், அதீத மனநிலையில் இருப்பதைப் போன்று தோன்றினாலும் உண்மையில் அவர்கள் இயல்பானவர்களே, அகச் சிக்கல்களை வெளிப்படுத்தும் தருணங்களிலேயே அவர்கள் அதீத மனநிலையில் காணப்படுகின்றனர். அதேபோல்தான் மிஷ்கினின் கதாபாத்திரங்களும் அகச் சிக்கல்களைக் கொண்டிருப்பதனாலேயே அதீத உணர்ச்சிகளை வெளிக்காட்டுகின்றனர்.

காதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை முகத்தில் இருந்து மட்டுமல்லாது அவர்களின் கால்கள், அதனுடன் இணைந்த தரையின் மீதான காட்சிகள் மூலமும் காட்டுகிறார். சம்பவம் நடைபெறும் பிரதேசத்தைக் காட்ட அல்லது கதாபாத்திரத்தின் இன்னொரு முகத்தைக் காட்ட அல்லது நுட்பமான ஒரு குறியீட்டைக் காட்ட இவ்வாறான ஷாட்களை வைக்கிறார்.

உரையாடல் மூலமாக அல்லாமல், காட்சி மூலமாகவே அதிகமும் கதை சொல்ல முற்படும் மிஷ்கினின் காட்சி அமைப்பு ஒரு இலக்கணம் என்று கூட சொல்லலாம். கேமராக் கோணம் மூலமாக அவர் தொடும் எல்லை நிச்சயமாக தமிழ் சினிமாவுக்கு புதிதுதான். அதுவும் குறிப்பாக பறவைக் கோணத்தில் காட்சிகளை பார்ப்பதில் அலாதி பிரியம் கொண்ட மிஷ்கினின் காமிரா பெரும்பாலும் விளக்குகள் அல்லது மரத்தின் மேலே இருந்து காட்சிகளை பதிவு செய்யும். தனது காட்சிகள் பார்வையாளர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வைட் ஆங்கிள் ஷாட்களையும் அதிகம் வைக்கிறார். இதனால் உரையாடல் செயலற்று, செயலுக்கான வாய்ப்பு அதிகமாகவும், கதை நடைபெறும் சூழல் பற்றிய ஆழமான புரிதலையும் புலத்தையும் கொண்டதாக அக்காட்சிகள் அமைந்து விடுகின்றன.

கதாபாத்திரத்தை முரட்டுத்தனமாக அல்லது வலிமையானதாக அல்லது சக்தி வாய்ந்ததாக காட்டுவதற்கு அல்லது சமாளிக்க முடியாத ஒரு சூழலை சித்தரிப்பதற்கு காமிராவை மிகக் குறைந்த புள்ளியில் மேல் நோக்கி வைக்கிறார். இதனால் கீழிருந்து ஒரு விடயத்தைப் பார்ப்பவர் ஒரு புழுவைப் போல அதை பார்க்கிறார். அவர் தன்னை ஒரு சக்தியற்ற புழுவாக எண்ணிக்கொள்கிறார். Worm’s Eye Shot எனப்படும் இந்த காட்சிக்கு ‘அஞ்சாதே’ படத்தில் வரும் விளையாட்டு மைதானக் காட்சி மிகச் சிறந்த உதாரணம்.

இயற்கையான விளக்குகளை முடிந்தவரை பயன்படுத்தும் மிஷ்கின், பதற்றம், பயத்தை வெளிப்படுத்த நிழல்கள் மற்றும் நிழற்படத்தை நம்பியிருக்கிறார். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் மூன்று குழுவாக பாத்திரங்கள் அமர்ந்திருக்கும் காட்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். பிரகாசமான முழு வெளிச்சத்தில் ஒருவர், பகுதி வெளிச்சத்தில் இன்னொருவர், முழு இருளில் இன்னொருவர் என அவர்களின் பதற்றத்தை தெருவிளக்கின் வெளிச்சத்தின் ஊடாக சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருப்பார். அது தவிர செயற்கை விளக்குகள் கூட மிகத் தனித்துவமாகத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கும். ‘யுத்தம் செய்’ படத்தில் ஜே.கே தனது டார்ச் லைட்டைப் பயன்படுத்தி புருசோத்தமன் வீட்டைத் தேடும் காட்சி அதற்கு உதாரணம். இவை பார்வையாளர்களின் காட்சி அனுபவத்தை வேறு ஒரு நிலைக்கு உயர்த்துகின்றன. அத்துடன் வசீகரிக்கும் வயலின், மயக்கும் புல்லாங்குழல், பியானோ இசை போன்றன அதை இன்னும் இன்னும் இன்னும் உச்சமடைய செய்கின்றன.

திரையரங்குகளிலேயே அல்லது நூறு நாட்களில் ஆயுட்காலம் முடிந்துவிடாமல் பல வருடங்கள் கழிந்த பின்பும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை மிஷ்கின் படங்கள். ஒவ்வொரு முறையும் தனது படத்தைப் பார்க்கும்போது பார்வையாளர்கள் புதிய நுணுக்கங்களை புரிந்துகொள்ள வேண்டும் என விரும்பும் அவர், ‘அஞ்சாதே’, ‘ஓநாயும் ஆட்டுகுட்டியும்’, ‘பிசாசு’ போன்ற படங்களினூடாக இம்முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கின்றார்.

‘சித்திரம் பேசுதடி’ முதல் ‘சைக்கோ’ வரை உயிர்பிழைத்தல், பசி, மரண பயம், துரோகம், மன்னிப்பு, மனித நேயம், ஆன்மாவின் மோதல்கள், உள்ளுணர்வுகள் என பல உணர்ச்சிகளையும் அதனுடன் இணைந்த தத்துவங்களையும் சிக்கலான தொகுப்பாக இணைக்கும் போக்கு அவரது திரைப்படங்களில் காணப்படுகின்றது. அதற்காக திரில்லர் வகைக் கதைகளை ஒரு வாகனமாகப் பயன்படுத்துகிறார். அவ்வாகனத்தின் மூலம் அன்பையும் கருணையையும் நேசத்தையும் எல்லையில்லா மனித அக்கறையையும் போதிப்பதே அவரது படைப்புகளின் இலக்காக இருக்கிறது. சுருக்கமாக சொன்னால், த்ரில்லர் கதைகளின் ஊடாக மனித வாழ்க்கையின் பல பரிணாமங்களைக் காட்டுவதே மிஷ்கினின் படங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...