No menu items!

மிருணாள் தாகூர் கேட்கும் 3!

மிருணாள் தாகூர் கேட்கும் 3!

மிருணாள் தாகூரின் உயரம் 5 அடி 7 அங்குலம், வயது 31. மற்றவை எல்லாம் திரையில் அவர் நடிக்கும் போது பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

ஹிந்தியில் டிவி சீரியல்கள், டாக்குமெண்டரிகள் அடுத்து திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்த மிருணாள் தாகூருக்கு, ஒரு பெரும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்று கொடுத்த படம் ‘சீதாராமம்’. தெலுங்குப் படமாக இருந்தாலும், அதை தமிழ், ஹிந்தி, மலையாளம் என இந்திய மொழிகளில் டப் செய்து பான் – இந்திய படமாக வெளியிட்டார்கள். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஒரு ஹிட் படம் கொடுத்தால், உடனே அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவியும். சம்பாதிக்க ஆசைப்பட்டு வருகிற வாய்ப்புகளை எல்லாம் ஒப்புக்கொண்டு, அடுத்தடுத்து ப்ளாப் கொடுத்து காணாமல் போவதுதான் நடிகைகளின் வழக்கம்.

ஆனால் இந்த வகையறா நடிகை நான் இல்லை என்று தீர்மானமாக இருந்தவர் மிருணாள் தாகூர். ‘சீதாராமம்’ வெளியாகி அடுத்த 6 மாதங்கள் எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருந்தார். தேடி வந்த எந்த வாய்ப்புகளையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகுதான் நானியுடன் ‘ஹாய் நாநா’ படத்தில் நடித்தார். இந்தப் படமும் ஹிட்.

இதற்காகவே காத்திருந்த மாதிரி மிருணாள் தாகூர், இப்போது அடுத்து கதைகளைக் கேட்க ஆரம்பித்திருக்கிறார். மிருணாளை எப்படியாவது தமிழுக்கு இழுத்துகொண்டு வரவேண்டுமென மும்முரமாக இருக்கிறார்கள்.

இப்போது ஹைதராபாத்தில் அதிக நேரம் செலவழிக்கும் மிருணாளை அங்கேயே போய் சந்தித்து இருக்கிறார்கள். கதை நன்றாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மிருணாள் மற்றொரு விஷயத்திலும் பிடிவாதமாக இருக்கிறாராம். அது சம்பளம்தான்.

ஹீரோ யார் என்பது முக்கியம். சம்பளம் முக்கியம். 3 கோடி முக்கியம். இப்படிதான் மிருணாளின் யுக்தி இருக்கிறதாம். வாட்டச்சாட்டமாக இருப்பதால் இவரை இங்குள்ள பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க வைப்பதே பெரும் போராட்டம்தான். அதிலும் இவர் இப்படி சம்பளம் கேட்கிறாரே என்று புலம்பல்கள் அதிகரித்து இருக்கின்றன.


விக்னேஷ் சிவனுக்கு வந்த நோட்டீஸ்!

அஜித் நடிப்பில் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த படம் கடைசி நிமிடத்தில் கைவிடப்பட்டது. விக்னேஷ் சிவன் சொன்ன கதை லைகாவிற்கும், அஜித்திற்கும் திருப்தி இல்லாத காரணத்தால்தான் அந்தப் படம் ட்ராப் ஆனது என்ற கோலிவுட்டில் கூறப்பட்டது.

இதனால் கடுப்பான விக்னேஷ் சிவன், அடுத்து தனது ரவுடி பிக்சர்ஸ் சார்ப்பில் தயாரிக்க முயன்றார். ஆனால் அதுவும் சரியாக எடுப்படவில்லை.

இந்நிலையில்தான் ‘லவ் டுடே’ படம் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘எல்.ஐ.சி.’ [லவ் இன்ஸ்சூரன்ஸ் கார்பொரேஷன்] என்றப் படத்தை எடுக்க இருக்கிறார். அதை கமல் ஹாஸனின் ராஜ்கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கப் போகிறது என்றும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் அந்த முயற்சியும் அப்படியே முடங்கிப் போனது. பட்ஜெட், சம்பள பிரச்சினையால் ராஜ்கமல் நிறுவனம் பின்வாங்கியது.

இப்படியொரு சூழலில் அதே ‘எல்.ஐ.சி’-யை விஜயை வைத்து ‘லியோ’ படத்தைத் தயாரித்த லலித் குமார் தயாரிக்க முன் வந்தார். இதனால் இப்பட வேலைகள் இப்போது மும்முரமாக நடந்து வருகின்றன. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

’எல்.ஐ.சி.’ என்ற பெயரை இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், அதனால் அந்த டைட்டிலை விக்னேஷ் சிவனை பயன்படுத்த கூடாது என்றும் ஒரு சர்ச்சையும் கிளம்பியது. ஆனால் இடையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. சர்ச்சையைக் கிளப்பிய இசையமைப்பாளர் அமைதியாகிவிட்டார்.

ஆனால் இந்தப்படம் குறித்த சர்ச்சை முடிந்தபாடில்லையாம். எல்.ஐ.சி என்று படத்திற்கு பெயர் வைத்திருப்பது எங்களது நிறுவனத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவது போல் இருக்கிறது என எல்.ஐ.சி. சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். இந்த பெயரை வைக்க கூடாது என விக்னேஷ் சிவனுக்கு எல்.ஐ.சி. சார்பில் நோட்டீஸூம் விடப்பட்டிருக்கிறதாம்.

இந்த பெயரை மாற்றாவிட்டால், ஏழு நாட்களில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கிறார்கள்.

இந்த நோட்டிஸூக்கு தயாரிப்பு நிறுவனமோ அல்லது விக்னேஷ் சிவனோ இதுவரையில் எந்த பதிலும் கொடுக்கவில்லை என்கிறார்கள். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கவினை காலி பண்ணும் நயன்தாரா மேனேஜர்!

சின்னத்திரையில் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர்களில் கவினும் ஒருவர். டிவி சீரியல்களில் இருந்து சினிமாவிற்கு வர ஆசைப்பட்டார். இதனால் சீரியல்களுக்கு குட்பை சொல்லியவர் சில காலம் எந்த வாய்ப்புகளும் இல்லாமல் காத்திருந்தார். அவரது காத்திருப்பு வீண் போகவில்லை. ஒருவழியாக இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

ஆனால் இவரை சினிமா நடிகராக அங்கீகரிக்க வைத்த படம் ‘டா டா’. இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, கவினை வைத்து படமெடுக்கு வழக்கம் போல் ஒரு கூட்டம் கிளம்பியது.

இதனால் இவரது கைவசம் இப்போது சில படங்கள் இருக்கின்றன. இவையெல்லாம் சொல்லிக்கொள்ளுமளவிற்கு பெரிய பட்ஜெட் படங்கள் இல்லை என்பதே உண்மை.

ஆனாலும் பெரிய நடிகராக வரவேண்டுமென்ற ஒரு ஆசையில் கவின் செய்த முதல் காரியம், தனக்கென்று ஒரு மேனேஜரை நியமித்துகொண்டார். இந்த மேனேஜர்தான் இப்போது நயன்தாராவுக்கும் மேனேஜர். நயன்தாரா மேனேஜர்தான் தன்னுடைய மேனேஜர் என்றால் ஒரு கெளரவம் இருக்கும். அடுத்து அவருக்கு நெளிவுச்சுழிவு எல்லாம் தெரியும் என்பதால்தான் இந்த ஏற்பாடாம்.

இந்நிலையில் கவினை வைத்து படமெடுக்க முடிவு செய்த ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம், கவினைத் தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறது. ஆனால் கவின் அந்த நிறுவனத்திடம் தனது மேனேஜரிடம் பேசுமாறு கூறிவிட்டாராம்.

இதற்குப் பிறகுதான் மேனேஜர் ஆட்டம் ஆரம்பமாகி இருக்கிறது.

தன்னைத் தொடர்பு கொண்ட தயாரிப்பு நிறுவனம் தரப்பிடம் பேசிய கவின் மேனேஜர், ‘கதையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். கவினுக்கு இப்போ மார்க்கெட் எகிறிக்கிட்டே இருக்கு. அதனால சம்பளம் பத்தி முதல்ல பேசலாம். அடுத்தடுத்த படங்கள் வந்தா கவினுக்கு சம்பளம் 6 கோடி சம்பளம் நிச்சயம். அதனால இப்போ 2 கோடி முன்பணம் கொடுங்க. மத்த விஷயங்களையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.’ என்று கூறினாராம். இதனால் தயாரிப்பு நிறுவனம் தரப்புக்கு தலைச்சுற்றியிருக்கிறது.

இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. ‘கவின் ஷூட்டிங்குக்கு வரும்போது டபுள் டோர் கேராவேன் வேணும். அவர் டயட்டுல இருக்கிறதால, உணவு விஷயத்துல கவனமா இருக்கணும். அதனால இந்த மாதிரி உணவு வேணும் என ஒரு பட்டியலை நீட்டினாராம். இதனால் தயாரிப்பு தர்ப்பு போன வேகத்தில் திரும்பிவிட்டதாம்.

’டா டா’ பட த்தில் நடிக்க சில லட்சங்கள் வாங்கிய கவினின் சம்பளம் இப்போது நான்கு மடங்கு அதிகமா, இதெல்லாம் கவினுக்குத் தெரியுமா, அல்லது அவர் சொல்லிதான் இப்படியெல்லாம் நடக்கிறதா என்ற குழப்பத்தில் இருக்கிறது கோலிவுட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...