உலகளாவிய அளவில் தனக்கென்று மிகப்பெரிய இமேஜை வைத்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. விஸ்வகுரு என்று அழைக்கப்படும் அளவுக்கு சர்வதேச நாடுகளில் தன்னைப் பற்றிய ஒரு பிம்பத்தை கட்டமைத்து இருந்தார் பிரதமர் மோடி. இந்த நேரத்தில் நேற்று வந்த தேர்தல் முடிவை உலகளாவிய அளவில் எப்படி பார்க்கிறார்கள். பல்வேறு நாட்டு பத்திரிகைகளிலும் இதைப்பற்றி எப்படி செய்திகளை வெளியிட்டுள்ளார்கள் என்பதைப் பற்றி ஒரு பார்வை…
DAWN
பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் பத்திரிகை, “இந்தியாவில் பாஜகவுக்கு கிடைத்திருப்பது கசப்பான வெற்றி. 400 இடங்களுக்கு மேல் வெல்வோம் என்று சொல்லிவந்த பாரதிய ஜனதா கட்சியால் தனிப் பெரும்பான்மைகூட பெற முடியவில்லை. பாஜகவின் முக்கிய நம்பிக்கையான இந்தி பேசும் மாநிலங்களிலேயே அக்கட்சியால் பெரிய வெற்றிகளை பெற முடியவில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரம் இந்தியாவில் பாஜகவின் தோல்விக்கான முக்கிய காரணமாகும். இதன்மூலம் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரம் குறையும் வாய்ப்பு உள்ளது” என்று தலையங்கம் எழுதியுள்ளது.
The Wall Street Journal
அமெரிக்காவின் நியூயார்க் நகைரை அடிப்படையாகக் கொண்டு வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை இயங்கி வருகிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான இதில், “அதிர்ச்சியளிக்கும் தேர்தல் முடிவுகளில் நரேந்திர மோடி மெஜாரிட்டியை இழந்தார். ஆனால் அதிகாரத்தை தக்க வைத்துள்ளார். இந்து கட்சியின் தலைவரான மோடி, தனி மெஜாரிட்டியை பெறத் தவறிவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளது.
The Guardian
இங்கிலாந்தின் முன்னணி நாளிதழான தி கார்டியன், ”இந்திய தேர்தலில் நரேந்திர மோடி மெஜாரிட்டியை இழந்தார். இது மோடிக்கு மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. ஆட்சியை கைப்பற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
DW
ஐரோப்பிய நாடுகளில் வெளியாகும் டிடபிள்யூ என்ற நாளிதழ், ”இந்திய தேர்தல் முடிவுகள், பிரதமர் மோடிக்கு ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அவரது கட்சியால் இந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற முடியவில்லை” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
CNN
சிஎன்என் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “தனது கட்சியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாவிட்டாலும், நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க அளவில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
The Washington Post
வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ், “வெல்ல முடியாத மனிதர் என்ற நரேந்திர மோடியின் இமேஜ் தகர்ந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் தேவையான மெஜாரிட்டியை பெற பாரதிய ஜனதா கட்சி தவறிவிட்ட்து” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.