“நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருவதாக கடந்த வாரம் சொல்லி இருந்தேனே. இப்போது திமுகவும் அதற்கு வேகமாக தயாராகி வருவதாக தகவல் வருகிறது” என்றபடி உள்ளே வந்தார் ரகசியா.
“இவ்வளவு சீக்கிரமாவா? என்ன செய்யறாங்க?”
“புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் களநிலவரத்தை ஆராய குழு அமைத்து வேலை பார்க்கச் சொல்லி இருக்கிறது திமுக தலைமை. கட்சிக்கு என்னென்ன பிரச்சினை இருக்கிறது? எதையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என்றும் விசாரிக்கச் சொல்லி இருக்கிறது. இது தவிர தற்போதைய எம்பிக்களுக்கு என்ன செல்வாக்கு உள்ளது என்று பொதுமக்களின் பல்ஸைப் பார்த்து சொல்லும் பொறுப்பை தனியார் நிறுவனம் ஒன்றிடம் விட்டிருக்கிறார்கள். அதனால் சிட்டிங் எம்.பி.க்கள் எல்லோரும் டென்ஷனாய் இருக்கிறார்கள்”
“ஓஹோ?”
“நாமக்கல்லில் திமுக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மாநாட்டில், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நான் சர்வாதிகாரியாக மாறவும் தயங்கமாட்டேன் என்று முதல்வர் சொன்னதை கவனித்தீர்களா? இந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடுகூட நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம்தான் என்று சொல்கிறார்கள்.”
“திமுகவில் இருந்து ஷிண்டேக்கள் புறப்படுவார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே. உனக்கு தெரிந்து யாராவது ஷிண்டேக்கள் இருக்கிறார்களா?”
“எனக்கு தெரிந்து திமுகவிலிருந்து பெரிய தலைகள் எதுவும் பாஜகவுக்கு போவதுபோல் தெரியவில்லை. வலுவாக ஆட்சியிலிருக்கும் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு அவர்கள் என்ன அரசியல் தெரியாதவர்களா? ஆனால்…..” என்று இழுத்தாள் ரகசியா.
“என்ன ஆனால்..?”
“கடலூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பாஜகவுக்கு மாறலாம் என்று திமுக வட்டாரத்தில் பேசுகிறார்கள். கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது கடலூர் மேயர் தேர்தலில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிபாரிசு செய்த வேட்பாளருக்கு எதிராக சில வேலைகள் செய்தார் என்ற குற்றச்சாட்டு காரணமாக ஐயப்பனை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியது திமுக தலைமை. பொதுவாக இப்படி நீக்கப்பட்டவர்களிடம் சில வாரங்களுக்குப் பிறகு மன்னிப்பு கடிதம் வாங்கிக்கொண்டு சேர்த்துக் கொள்வதுதான் வழக்கம். ஆனால், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பிடிவாதமாக இவரை கட்சியில் சேர்க்கக்கூடாது என்று தடுத்து வருகிறாராம். எனவே, பேசாமல் தாமரை கட்சியில் சேர்ந்து விடலாம் என்று ஐயப்பனின் ஆதரவாளர்கள் அவரை வற்புறுத்தி வருகிறார்களாம்”
“அவர்தான் திமுகவை விட்டு செல்லமாட்டேன்னு அறிக்கை விட்டிருக்காரே?”.
“இருந்தாலும் நெருப்பு இல்லாமல் புகையுமான்னு கட்சிக்குள்ள பேசிக்கிறாங்க.”
“திமுக அதிருப்தியாளர்கள் பாஜகவுக்கு போறாங்கனன்னா, அவங்க அதிமுக இடத்தைப் பிடிக்கப் போகறாங்கன்னுதானே அர்த்தம்?”
“அதற்கான முயற்சில இருக்காங்க. வேலூரில் 9, 10 ஆகிய தேதிகளில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க அண்ணாமலை வருகிறார். இதற்கு செலவுக்காக வேலூர் பாரதிய ஜனதா பெண் பிரமுகர் சில நிறுவனங்களுக்கு சென்று சில லகரங்களை வசூல் செய்கிறாராம். நிறுவனங்களும் அமலாக்கத்துறை வருமான வரித்துறைக்கு பயந்து பணத்தை தந்து விட்டார்களாம்.”
“பாஜகவிடம் இல்லாத பணமா?”
“கட்சியில் பணத்துக்கு தட்டுபாடில்லைதான். ஆனால், தமிழ் நாட்டு பாஜகவுக்கு நிதி பொறுப்பாளராக இருக்கும் மூத்தவர் பணமெல்லாம் தர மாட்டேன் என்கிறாராம். திராவிடக் கட்சிகள் போல பணம் செலவு செய்து கட்சியை வளர்க்க தேவையில்லை என்று கறாராக சொல்கிறாராம். கட்சிக்குள்ளேயே அண்ணாமலைக்கு எதிர்ப்பு இருக்கு. அதுதான் இந்த பணம் தரமாட்டேன்கிற பிடிவாதம். அண்ணாமலை அடிக்கடி அறிவிக்கும் உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றிற்கு வசூல் செய்துதான் கட்சிக்காரர்கள் சமாளிக்கிறார்களாம்.”
“பணம்னதும் ஞாபகத்துக்கு வருது. முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடையவர்கள் வீட்டில் ரெய்டு நடந்திருக்கிறதே?”
“இது எடப்பாடி அணிக்கு பாஜகவால் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை சிக்னல் என்கிறார்கள் கட்சிக்காரர்கள். நாங்க சொன்னபடி கேட்டு நடந்தா உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது என்று இதன் மூலமாக தாமரை கட்சி சொல்லியிருக்கிறது.”
“முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டிலும் ரெய்டு நடந்திருக்கிறதே?”
“இதற்கு காரணம் ஓபிஎஸ் அணியில் உள்ள வைத்தியலிங்கமாம். தனக்கு நெருக்கமான உள்ளூர் திமுக தலையிடம் சொல்லி இந்த ரெய்டுக்கு அவர் ஏற்பாடு செய்ததாக சொல்கிறார்கள். இதனால், வைத்திலிங்கம் மீது காமராஜ் கடும் கோபத்தில் இருக்கிறார்.”
“அவர் என்ன வத்தி வைக்கப் போகிறாரோ? ஆளுநர் கோப்புகளில் கையெழுத்து போட்டிவிட்டார்னு ஒரு நியூஸ் வருதே உண்மையா?”
“பல்கலைக்கழக வேந்தர் பதவி, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட சில மசோதாக்களைத் தவிர மற்ற மசோதாக்களுக்கு ஓகே சொல்லி ஒப்புதல் தந்து விட்டாராம் ஆளுநர். டெல்லி போனபோது பாஜக தலைமை தந்த கிரீன் சிக்னல்தான் இதற்கு காரணம். ஒப்புதல் தந்த விஷயத்தை ராஜ்பவன் அதிகாரிகள் தலைமைச் செயலாளரிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், திமுக தரப்பினர் இன்னும் கோப்புகள் கோட்டைக்கு வரவில்லை என்கிறார்கள்.”
“சென்னை கவுன்சிலர்களை அழைத்து அமைச்சர் நேரு கூட்டம் போட்டாரே… அதில் நடந்ததைப் பற்றி ஏதும் விசாரித்தாயா?”
“சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களிடம் அமைச்சர் நேரு பேசும்போது, ‘உங்கள் வார்டு மேம்பாடு பற்றி மட்டும் பேசுங்கள். அந்த வேலையை செய்யுங்கள். வசூல் வேலையெல்லாம் செய்யாதீர்கள்’ என்று எச்சரித்துள்ளார். அப்போது ஒரு பெண் கவுன்சிலர் எழுந்து, ‘நம்ம கட்சி வட்டச்செயலாளர் எங்களை வேலை செய்யவே விடுவதில்லை. இதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம் நீங்க கிளம்புங்க என்று மிரட்டுகிறார்கள். அப்புறம் எதற்கு எங்களை கவுன்சிலர்களாக நீங்கள் அனுப்பினீர்கள்?’ என்று புலம்பியிருக்கிறார்கள். இது சம்பந்தமாக உங்கள் மாவட்ட செயலாளர்களிடம் பேசுகிறேன் தலைமையிடம் சொல்கிறேன் என்று அமைச்சர் கூட்டத்தை முடித்தாராம்.”
“சிவாஜி குடும்பத்திலேயே சொத்துப் பிரச்சினை கிளம்பியுள்ளதே?”
“இதன் பின்னணியில் வளர்ப்பு மகன் இருப்பதாக ஒரு பேச்சு நிலவுகிறது. சிவாஜி பேத்தியின் கணவரான வளர்ப்பு மகன், ஒரு காலத்தில் மிகவும் வளமாக இருந்திருக்கிறார். ஆனால், தற்போது சிறையில் இருந்து திரும்பிய நிலையில் கையில் பணம் இல்லாமல் தவிக்கிறார். அதனால் சொத்துக்காக சிவாஜியின் மகன்கள் மீது வழக்கு போடச்சொல்லி தனது மாமியாரை அவர் தூண்டி விட்டதாக ஒரு பேச்சு நிலவுகிறது. அதேநேரத்தில் சின்ன எம்ஜிஆரைப் பற்றி இன்னொரு விஷயமும் பேசப்படுகிறது. அண்மையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வளர்ப்பு மகன் போன் செய்திருக்கிறார். ‘சின்ன எம்ஜிஆர்’ என்று மக்களால் அழைக்கப்படும் எனக்கு இன்னும் செல்வாக்கு இருக்கிறது. நான் பாஜகவில் சேர்ந்தால், இந்த செல்வாக்கு உங்களுக்கு பயன்படும் என்று அண்ணாமலையிடம் கூறியிருக்கிறார் வளர்ப்பு மகன்.”
“அண்ணாமலையின் பதில் என்ன?”
“கட்சியில் சேர்வதாக யார் வந்தாலும் அவர்களை வளைத்துப் போடுவதுதானே அவர் பாலிசி. அதனால் தாராளமாக வாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். இதைக் கேட்ட வளர்ப்பு மகன், ‘பாஜகவில் நான் சேர்ந்தால், எனக்கு என்ன கொடுப்பீர்கள்?” என்று கேட்டுள்ளார். அவரது இந்த டிமாண்டைக் கேட்டதும் சைலண்ட் ஆகிவிட்டாராம் அண்ணாமலை.”
“அதிமுக விவகாரம் ஏதாவது தெரியுமா?”
“ஓபிஎஸ், சசிசலா ஆகியோர் தொடர்பாக தன்னிடம் உள்ள சில ஆதாரங்களை வைத்து அவர்களை பணியவைக்கும் முயற்சியில் இபிஎஸ் ஈடுபட்டுள்ளார். கோடநாடு விஷயத்தில் தான் கைதாகாமல் இருக்கத்தான் பொதுச்செயலாளர் பதவியை பிடிப்பதற்கு எடப்பாடி இத்தனை ஆர்வம் காட்டுகிறார் என்கிறது ஓபிஎஸ் தரப்பு. அதேநேரத்தில் இந்த வழக்கில் திமுக அரசு தீவிரமாக செயல்படாமல் இருப்பதாக ஓபிஸ் தரப்பினர் புலம்புகிறார்கள். இந்த விஷயத்தில் அரசு அத்தனை தீவிரம் காட்டவில்லை என்ற வருத்தம் திமுகவினருக்கும் உள்ளது.”
“திமுக ஆர்வம் காட்டவில்லையா?”
“திமுகவுக்கு ஆர்வம்தான். ஆனால், அவசரப்பட்டு எதையும் பாதித்துவிடக் கூடாது என்று கருதுகிறது. இந்த விசாரணையில் எந்தத் தவறும் வந்துவிடக் கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறாராம். அதனால் விசாரணை அதிகாரிகள் சர்வ ஜாக்கிரதையாக காய்களை நகர்த்தி வருகிறார்கள். மெல்ல நகர்ந்தாலும் நிச்சயம் தப்பிக்க முடியாதபடி சுற்றுப் போடப்படும் என்று சொல்கிறார்கள் அறிவாலயத்தினர்” என்று கூறி கிளம்பினாள் ரகசியா.