No menu items!

மிஸ் ரகசியா – அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல்

மிஸ் ரகசியா – அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல்

வழக்கமாக காரிலோ, ஸ்கூட்டரிலோ ஆபீசுக்கு வரும் ரகசியா, கொஞ்சம் வித்தியாசமாக ஸ்போர்ட்ஸ் சைக்கிளில் வந்து இறங்கினார்.

“என்ன சைக்கிளுக்கு மாறிட்டே?… எடை குறைப்பா?”

“எடைக் குறைப்பெல்லாம் ஒன்றுமில்லை. இது செலவுக் குறைப்பு. உங்களுக்குத் தெரியுமா?… உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறதாம்” என்றார்.

“அதெப்படி பக்கத்து நாடான இலங்கையில்கூட 200 ரூபாய்க்கு மேல் விற்கிறார்களே?”

“ஆனால் அந்த ஊர் ரூபாயின் டாலர் மதிப்புப்படி பார்த்தால் அங்கு இந்தியாவைவிட குறைந்த விலைக்கு பெட்ரோலை கொடுப்பதாக கணக்கு சொல்கிறார்கள். சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெட்ரோலின் விலையை டாலரில் கணக்கிட்டால் இந்தியாதான் 3-வது அதிக விலை நாடாக இருக்கிறது. சூடான், லாவோஸ் ஆகிய நாடுகள் முதல் 2 இடத்தில் இருக்கின்றன.”

“அப்படியா?”

“ஆமாம். பெட்ரோல் விலையிலாவது 3-வது இடத்தில் இருக்கிறோம். ஆனால் சமையல் எரிவாயு விலையில் இந்தியாதான் முதல் இடத்தில் இருக்கிறது”

“ அநியாயமா இருக்கே. விலைவாசியைச் சொல்லி கடுப்பேத்தாதே. பாலிடிக்ஸ் விஷயம் சொல்லு. அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஏதோ மோதல் என்றும், வைத்தியலிங்கம் பாதியில் கோபித்துக்கொண்டு போனதாகவும் சொல்கிறார்களே?”

“நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். அமைப்புத் தேர்தல் குறித்து ஆலோசனை என்று வெளியில் சொன்னாலும் அதிகம் பேசியது சசிகலா எண்ட்ரியைப் பத்திதான் என்கிறார்கள் உள்ளிருந்தவர்கள். அமைப்புத் தேர்தலிலும் எடப்பாடி ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக ஓபிஎஸ் தரப்பு புகார் தெரிவித்திருக்கிறது”

“எடப்பாடி தரப்பிலிருந்து என்ன கூறினார்களாம்?”

“அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ்ஸைவிட எடப்பாடிக்குத்தான் ஆதரவு அதிகம். அதனால் ஒபிஎஸ் ஆதரவு குரல் கொஞ்சம் குறைவாகதான் ஒலித்திருக்கிறது. சசிகலாவை குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும், அவர் வந்தால் கட்சிக்கு நல்லது என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறியிருக்கிறார்கள். இது எடப்பாடி ஆதரவாளர்களின் பிரஷரை ஏற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டார்களாம். அதிமுக வரலாற்றில் தலைவர்கள் முன்னிலையில் ஆபாச அர்ச்சனை நடந்திருப்பது இதுதான் முதல் முறை என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள்”

“எப்படியிருந்த கட்சி… சரி, வைத்திலிங்கம் கோபத்துல எழுந்து போய்ட்டாராமே”

“ஆமாம். வைத்தியலிங்கம் சசிகலா பக்கம் சாய்ந்திட்டார்னு அவருக்கு எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. கடுமையா பேசியிருக்காங்க. உடனே அவர் கோபித்துக் கொண்டு போய்விட்டார், அப்புறம் சமாதானப்படுத்தி அழைத்து வந்ததாக சொல்றாங்க”

“ஏதோ அவசர வேலை இருந்ததுனால வெளியே போனார், வேலையை முடிச்சிட்டு திரும்பி வந்துட்டார்னு ஜெயக்குமார் சொன்னாரே”

“அவர் அப்படிதான் சொல்வார். சண்டை போட்டுட்டு போனார்னு சொல்ல முடியுமா?”

”கரெக்ட்தான். இரண்டு தரப்பு சமாதானமாய்ட்டாங்கனும் செய்தி வருதே?”

“அதெல்லாம் பொய் செய்தி. சமாதானத்துக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அதிமுக மாவட்ட செயலாளர்களில் நிறைய பேர் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளனர். அவங்க ஸ்டிஃபா நிக்கிறாங்க. இப்படியே போனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக இரண்டாக உடையலாம்.”

“இரு தரப்பையும் சமாதானப்படுத்த பாஜக எதையும் செய்யாதா?”

“பாஜகவின் கணக்கு வேறாக இருக்கிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தங்கள் தலைமையில்தான் கூட்டணி அமையவேண்டும் என்று கருதுகிறார்களாம். அதற்கு அதிமுக உடைந்தாலும் பரவாயில்லை என்பது அவர்களின் கணக்கு. அதே நேரத்தில் கூட்டணியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்பவும் ஜி.கே.வாசனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கினால் என்ன என்று யோசிக்கிறார்களாம்”

“வாசனுக்கு அதிர்ஷ்டம்தான்”

“அதிர்ஷ்டம் மட்டுமல்ல அவரது கிராக்கியும் ஏறியிருக்கிறது. அவருக்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிற மாதிரி மறுபுறம் காங்கிரஸ் கட்சியும் அவரை இழுக்க நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சமீபத்தில் சோனியா காந்தி சொல்லியிருந்தாங்க. இதை நடைமுறைப்படுத்தும் விதமாக கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர்களை, மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைப்பதற்கான முயற்சிகள் நடக்குதாம். அதுல வாசனை காங்கிரஸ்க்குள்ள இழுக்கிற திட்டமும் இருக்குதாம்.”

“வாசன் என்ன முடிவு எடுப்பார்?”

“பலவீனமான காங்கிரசில் சேருவதற்கு வாசனுக்கு விருப்பமில்லை, இங்கேயே ஏகப்பட்ட தலைவர்கள் இருக்கும்போது காங்கிரஸ்ல இணையறது எந்த லாபத்தையும் தராதுனு நினைக்கிறாராம். ஆனா ஆட்சில இருக்கிற பாஜக கூட்டணில இருந்தும் எந்த பலனும் இல்லையேனும் வருத்தத்துல இருக்கிறாராம்”

“ஆளுநர் டெல்லி போயிருக்கிறாரே?”

“உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அழைப்பின்பேரில் போயிருப்பதாகவும், அவர் சென்னை திரும்பியதும் தமிழக அரசியல்ல அதிர்ச்சி தரும் பல காட்சிகள் அரங்கேறும் என்றும் சொல்கிறார்கள். தமிழ் நாட்டுல ஆளுநரை மையமாக வைத்து அரசியல் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாம்”
“எல்லா மாநிலத்திலயும் அவங்க அப்படிதானே பண்றாங்க. சரி, பாஜக நிறுவன நாள் நிகழ்ச்சிகளுக்கு போயிருந்தியா?”

“அந்தக் காமெடியை ஏன் கேட்கிறீர்கள். பாஜக கொடியை குஷ்பு ஏத்தியிருக்கிறார். ஏத்துன கொடி தலைகீழாக பறந்திருக்கு. கொடியேற்றுவதற்கு முன் இதையெல்லாம் கவனிக்க வேண்டாமா என்று மூத்த தலைவர்கள் சிலர் புலம்புனாங்க. ஏற்கனவே மூத்த தலைவர்கள் அதிருப்தில இருக்காங்க. இதுல இந்த மாதிரி தமாஷ்லாம் நடக்கிறது அவங்களுக்கு கஷ்டமா இருக்கு”
“மூத்த தலைவர்களுக்கு என்ன அதிருப்தி?”

“அண்ணாமலை ஒன் மேன் ஷோ நடத்துகிறார் என்பது மூத்தவர்களின் குற்றச்சாட்டு. அரசியல்லயும் கட்சியிலயும் அதிக அனுபவம் இல்லாதவருக்கு கீழ நாம் செயல்பட வேண்டுமா என்ற கடுப்பும் பலருக்கு இருக்கிறது”


“சட்டசபை செய்திகள் ஏதும் இருக்கிறதா?”

“மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்காக சட்டசபை இந்த வாரம் கூடியது. முதல் நாளில் நீர்வளத் துறை மானியம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் பேச சபாநாயகர் அதிக நேரம் வாய்ப்பு அளிக்கவில்லை. அப்போது துரைமுருகன் குறுக்கிட்டு, எதிர்க் கட்சியினர் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கூறினார். இது துரைமுருகனின் சாமர்த்தியம்னு சொல்றாங்க. கடந்த பத்து வருஷத்துல என்னென்ன திட்டங்கள் எப்படிலாம் செயல்படுத்தப்பட்டிருக்குனு அவங்ககிட்டருந்தே தகவல்களை அறியும் முயற்சியாம் அது.”

“அவர் இதுலலாம் கிங் ஆச்சே!”

“எஸ்.எஸ்.சிவசங்கருக்கு அடித்ததுபோல் தங்களுக்கு ஜாக்பாட் அடிக்காதா என்று காத்திருக்கிறார்களாம் சில அமைச்சர்கள். இந்த கூட்டத்தொடர் முடிந்ததும் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோருக்கு ஜாக்பாட் அடிக்கலாம் என்று திமுக வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.”
“அவர்களுக்கு நல்லது நடக்கட்டும்”

“இசை சம்பந்தமான செய்தி ஒன்றைச் சொல்கிறேன் குறித்துக் கொள்ளுங்கள். சங்கீத கலாநிதி பட்டம் கடந்த 2 ஆண்டுகளாக யாருக்கும் வழங்கப்படாமல் இருந்தது. அதனால் இம்முறை கடந்த 2 ஆண்டுகளுக்கும் சேர்த்து 3 பேருக்கு சங்கீத கலாநிதி பட்டம் வழங்கப்படும் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை இந்த ஆண்டுக்கான பட்டம் மட்டும்தான் வழங்கப்படும் என்று சிலர் சொல்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் இப்பட்டத்தை பெற இப்போதே லாபி ஆரம்பித்துவிட்டதாம். பாம்பே ஜெயஸ்ரீ, தவில் வித்வான் ஏ.கே.பழனிவேலு உள்ளிட்ட பலரது பெயர் தற்போது அடிபடுகிறது” என்று கூறிவிட்டு ரகசியா கிளம்பினார்.
போகும்போது சினிமா செய்திகளையும் தந்துவிட்டு கிளம்பினார்.

நிதிச் சிக்கலில் நடிகர்

பெரிய குடும்பத்துப் பெண்ணை சமீபத்தில் விவாகரத்து செய்த நடிகர், ஒரு தயாரிப்பாளராகவும் உள்ளார். முன்பெல்லாம் அவர் படங்களுக்கு நிதி உதவி செய்ய நான் நீ என்று எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள். ஆனால் இப்போது அவரது தயாரிப்பு நிறுவனத்துக்கு நிதி உதவி செய்ய பலரும் தயங்குகிறார்களாம்.


விவாகரத்து மூடில் தயாரிப்பாளர்

கனவுத் தொழிற்சாலையின் பிரபல தயாரிப்பாளர் ஒருவர், விரைவில் தன் மனைவியை விவாகரத்து செய்யக்கூடும் என்று கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள். குடும்பத்தினர் கொடுக்கும் பிரஷர்தான் இதற்கு காரணமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...