No menu items!

மேகாலயா: மேகம் தழுவும் நிலம்

மேகாலயா: மேகம் தழுவும் நிலம்

நோயல் நடேசன்

“உணவின் முன்பாக இவ்வளவு அழகான சிரிப்பைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த ஹோட்டலில் தங்கலாம்“ என்று அந்த உணவு விடுதியின் வரவேற்பிலிருந்த பெண்ணிடம் கூறியபோது, அவள் முகம் சிவந்து தலை குனிந்தாள். இருபத்தைந்து வயது இளம்பெண்ணான அவளைத் தேவையற்று சங்கடப்படுத்திவிட்டேனோ என்ற மனக்குழப்பத்துடன் உணவு மேசையிலிருந்து எழுந்து சென்று மன்னிப்புக் கேட்டேன். அப்பொழுது அவள் சிரித்தபடி, “எனது தந்தையின் வார்த்தையாக நினைக்கிறேன்“ என்றாள்.

அதைக் கேட்டபோது எனக்கு மகிழ்வாக இருந்தது.

சிலோங் என்ற மேகாலயாவின் தலைநகரில் நான்கு நாட்கள் நின்றபோது இது நடந்தது. எந்த வெளிநாட்டவர்களும் அதிகமில்லாத காலம். கொரோனா தொற்று முடிந்து ஹோட்டல்கள் உல்லாசப் பிரயாணிகளை எதிர்பார்த்துக் காத்திருந்த நேரம். அத்துடன் நாங்கள் மூன்று நேரமும் அந்த விடுதியில் உணவுண்டதால் அங்கு வேலை செய்தவர்கள் எங்களுக்குப் பரிச்சயமாக இருந்தார்கள்.

உல்லாசப் பிரயாணிகள் செல்லும் இடங்களைத் தவிர சிலோங்கின் கடைகள், தேவாலயங்கள், வைத்தியசாலை எனப் பல இடங்களுக்கும் சென்றபோது அங்கு பெண்களும் ஆண்களுடன் சரிசமமாகவும் மனஉறுதியுடனும் பழகுவதாகத் தெரிந்தது. எனது இந்தக் கருத்து சரியானதா பிழையானதா எனக் கூறமுடியாது. மேலும், நான்கு நாட்களில் இப்படியான ஒரு முடிவுக்கு வரமுடியுமா எனவும் கேட்க முடியும்!

என் போன்ற ஒருவராலும் பதில் சொல்ல முடியாத போதிலும் மற்றைய இந்தியப் பிரதேசங்களிலும் வித்தியாசமான உணர்வை எனக்குக் கொடுத்தது.

இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மேகாலயா, அசாமிலிருந்து பிரிக்கப்பட்டது. ஆங்கிலமே உத்தியோக மொழியாகக் கொண்ட மாநிலம் (நாகலாந்தும் அப்படியே). இந்துக்கள் 12 வீதமான சிறிய தொகை. கிறிஸ்தவர்கள் முக்கால் பகுதியில் வாழும் மாநிலம்.

ஆங்கிலம் உத்தியோக மொழியான இரு மாநிலங்களில் ஒன்று என்ற போதிலும் மூன்று முக்கிய இனக்குழுக்கள் உள்ளார்கள். அவர்களது மொழியே அவர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இங்கு தாய்வழி சமூக அமைப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிலோங்கில் நடக்கும்போது எனக்கு இலங்கையின் நுவரெலியாவின் நினைவு வந்தது. அதே உயரம் (1600 மீட்டர்கள்) அதே நில அமைப்பு கொண்ட நகரம். காலனியக் காலத்தில் பிரித்தானியர்களின் குளிர்கால நகரம்.

அசாமிலிருந்து தெற்கு நோக்கி மேகாலயாவின் தலைநகரான சிலோங் இருந்தது. சிலோங்கின் தெற்கே வங்காள தேசமும் அமைந்துள்ளது.


மேகாலயாவின் நுழைவாயிலில் கொரோனா தடை மருந்தின் சான்றிதழைக் கேட்டு அதைப் பதிந்தார்கள். எல்லா விடயங்களும் தொலைபேசியில் நடந்தது. அங்கிருந்த இளம் பெண்ணே முழுவதையும் எங்களுக்காக பதிவு செய்தார். ஒரு விதத்தில் மோடியின் டிஜிட்டல் இந்தியா அங்கே தெரிந்தது. நம் போன்ற முந்திய தலைமுறையினர் கஷ்டப்பட்டுப் பழகவேண்டும் எனத் தெரிந்தது.

மேகாலயா, மலைகள் கொண்ட பிரதேசம். மலைகளில் மேல் எப்பொழுதும் மேகங்கள் படுத்துறங்கியபடி இருக்கும். முதல்நாள் எங்கள் பிரயாணம் சீரா பூஞ்சி என்ற இடம் நோக்கியிருந்தது. உலகத்தில் அதிக மழை வீழ்ச்சியுள்ள பிரதேசம் எனச் சிறுவயதில் படித்திருந்தேன். அது மேகாலயாவில் உள்ளது என அறியப் பல வருடங்கள் சென்றது. சீரா பூஞ்சி ஏரிகளும் அருவிகளும் நிறைந்த பிரதேசம்.

நாங்கள் சென்றது கோடை காலம். நிலம் காய்ந்திருந்தது.

இங்கு நோக்கலிக்கல் (Nohkalikai Falls) என்ற அருவி ஓடுகிறது. இந்தியாவில் அதி உயரமானது. 340 மீட்டர் (1115) அடி உயரத்திலிருந்து விழுகிறது. இந்த அருவி அருகே சென்றபோது பெண் ஒருத்தி விழுந்து இறந்ததாக எமது அசாமியச் சாரதி சொன்ன கதை பெரிதாகப் புரியவில்லை. பின்பு அதைத் தேடியபோது வித்தியாசமானதாக இருந்தது. லைக்கை என்ற பெண் குதித்தது என்பதே அவர்களது மொழியில் அந்த அருவியின் பெயர்.

கணவன் இறந்ததால் லைக்கை என்ற ஏழைப்பெண் தனது குழந்தையை பராமரிக்க வேண்டும், பணத்திற்காக வேலை செய்யவேண்டும் என்பதால் இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்கிறாள். புதிதாக வந்த கணவன் கெட்ட மனிதன். தன்னைவிட்டு குழந்தையிடமே தாயின் கவனமிருப்பதால் கோபமடைந்து, தாய் வேலைக்குப் போயிருந்தபோது குழந்தையை வெட்டி கறியாகச் சமைத்து விடுகிறான். வீடு வந்த தாய் குழந்தையைக் காணவில்லை. எங்காவது பக்கத்தில் விளையாடப் போயிருக்கும் என்ற நினைவில் பசியைத் தாங்காது சமைத்திருந்த உணவை உண்கிறாள். உணவுண்ட பின்பு வெற்றிலைபோட வெளியே சென்றபோது அங்கு குழந்தையின் பிஞ்சு விரல்கள் தரையில் துண்டுகளாகச் சிதறிக் கிடந்ததைக் கண்டதும், நடந்த கொடுமையை புரிந்துகொண்டாள். தனது குழந்தையைத் தானே உணவாக உண்டதைப் பொறுக்காது ஓடிச் சென்று இந்த அருவியிலிருந்து குதித்து உயிரிழக்கிறாள். அந்தச் சம்பவத்தின் பின்னர் அந்த அருவி, லைக்கை குதித்த அருவி என அழைக்கப்படுகிறது.

பெரும்பாலும் அருவிகளை நெருங்கிப் பார்ப்பதற்கு நூற்றுக்கணக்கான படிகள் இறங்கவேண்டும். அப்படியான ஒரு அருவியில் இறங்கும்போது பருமனான ஒரு இளம் பெண் தனியாக ஏறுவதற்கு முயற்சித்து காற்றை இரந்து மார்பை மேலும் கீழும் அசைத்துஉள் வாங்கியபடி நின்றாள். அப்பொழுது அவளிடம், “இன்னமும் சிறிதளவு தூரமே உள்ளது. உன்னால் இலகுவாகக் கடக்கமுடியும் “ என்றேன். அவள் சிரித்தபடி, “நன்றி“ என்றாள்.

மழை அதிகமாக பெய்வதால் கரை புரண்டோடும் வெள்ளத்தால் செதுக்கப்பட்ட பத்துக்கு மேற்பட்ட வெவ்வேறு நீளமான குகைகள் மேகாலயாவில் உள்ளன. அதில் மோசாமி (Mawsmai Cave) என்ற குகைக்குச் சென்றோம்.

நிலத்தின் கீழ் குகைகள் இருக்கும்போது அங்கு தண்ணீர் ஆறாக ஓடும். இப்படியானவை மெக்சிக்கோவின் யூக்கற்றின் குடாநாட்டில் இருந்தது. அதில் ஒன்றில் இறங்கிப் போகும்போது தலைக்குமேல் தண்ணீர் வந்துவிட்டது. பக்கத்திலிருந்த அமெரிக்கா இளைஞனது உதவியால் அன்று அதைக் கடந்தேன்

இந்தக் குகையில் இறங்கும்போது, “தண்ணீர் அதிகமில்லை. ஆனாலும் காலணியைக் கழற்றிவிட்டுச் செல்லுங்கள்“ என்றார்கள். அத்துடன் நாம் செல்லும் தூரம் அரை கிலோ மீட்டர் என்பதும் தெரிந்தது. பலர் எங்களுக்கு முன்பாக சென்றார்கள். மனதில் ஒரு பயம், கடுக்கன் நண்டாக இறுகக் கடித்தாலும், தொடர்ந்து முன்னேறினோம். இடையில் நாம் திரும்பி வெளியே வர முடியாது. எமக்குப் பின்னால் பலர் வந்தார்கள். ஒரு சில மத்திய வயதுப் பெண்கள் ஆட்களில் மோதியபடி, இயலாது என்பதாகத் தலையை அசைத்தபடி திரும்பினார்கள்.

இறங்கி நடக்கத் தொடங்கிய இடத்தில் இலகுவாக இருந்தாலும் பாறைகள் வழுக்கத் தொடங்கியது. தலையில் சுண்ணாம்புப் பாறைகள் இடிக்கவும் கைகளால் தடவியபடி தொடர்ந்து சென்றபோது, எங்களது வயதிற்கு அது கடினமானது என்பது புரியத் தொடங்கினாலும் பின்வாங்க முடியாத இடமாகிவிட்டது.

குகையின் நடுப்பகுதியில் குனிந்து படுத்துக்கொண்டு போகவேண்டும் என்ற நிலைக்கு வந்தோம். அத்துடன் கும்மிருட்டு, முழங்காலளவு தண்ணீர், வழுக்குப்பாறை. வௌவால் போன்றவற்றின் சத்தம். சில இடங்களில் அட்டையாக நெளிந்து, ஊர்ந்து குகையின் இறுதிப் பகுதிக்கு வரும் நேரத்தில் எனது நண்பரது கால் சறுக்கிவிட்டதால் தலையில் சிறிய காயம். ரத்தம் வழிந்தது. விழுந்த எனது நண்பரை என்னால் தனியே தூக்க முடியவில்லை. பக்கத்தில் வந்த இந்திக்காரரிடம் ஆங்கிலத்தில் பேசியபோது, அவருக்கு எனது உடல்மொழி புரிந்தது. அத்துடன் அவரது மகளுக்கு ஆங்கிலம் நன்றாகப் புரிந்ததால் மூவருமாக நண்பரைத் தூக்கிப் பிடிக்க அவர் எழுந்தார். பெரிய காயமில்லை என்பதால் எனது கைக்குட்டையால் கட்டியதும் இரத்தம் நின்றது.

வாகனத்தில் நேராக சீரா பூஞ்சி வைத்தியசாலைக்குச் சென்றபோது அங்குள்ள உதவியாளர் எங்களை உடனே டாக்டரிடம் அழைத்துச் சென்று தையல் போடவைத்தார். டாக்டர்கள் மற்றும் உதவியாளர்கள் எம்மை மிகவும் மனிதாபிமானமாக நடத்தினார்கள். “ஏதாவது பணம்?“ என்றபோது, அங்குள்ள நன்கொடை பெட்டியில் போடச் சொன்னார்கள். எங்களை வைத்தியசாலைக்குள் கொண்டு சென்றவர், பின்பு மருந்துக் கடைக்கும் வழிகாட்டினார். வழிகாட்ட உதவிய வைத்தியசாலை சிற்றூழியருக்கு பணம் கொடுக்க முயன்றபோது அவர் வேண்டாமென மறுத்துவிட்டார்.

இதுவரையும் தமிழ் திரைப் படங்களில் வரும் காட்சிகளைப் பார்த்து வைத்தியசாலைகளிலும் வைத்திய ஊழியர்களிலும் அதிருப்தியான அபிப்பிராயத்தை வைத்திருந்த எனக்கு, அன்றைய நிகழ்ச்சி கன்னத்தில் அறைந்தது போன்றிருந்தது. இந்தியாவில் இப்படியான அரச வைத்தியசாலைகளும் சேவை மனப்பான்மையுடன் வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மையைத் தெரிந்துகொள்ள நான் சீரா பூஞ்சி வரை செல்ல வேண்டியிருந்தது.

உயிர்ப்பாலங்கள் (Root Bridge -Fiscus Elastica) மேகாலயாவில் பிரசித்தியானது. ரப்பர் இனத்தைச் சேர்ந்த மரத்தின் வேர்களை ஆற்றின் மேலாக மூங்கில்கள் மீது படர விடுவார்கள். பின்பு அந்த வேர்கள் பிணைந்து பாலத்தை உருவாக்கிவிடும். இவ்வாறு அமையும் பாலம் பல கார்கள் போகக்கூடிய பலமுள்ளவை.

சாதாரணமாக ஆற்றின் மேலாகப் போடும் பாலங்கள் மழையால் அள்ளுப்பட்டுவிடும் என்பதால், உயிர்ப்பாலங்கள் அமைக்கும் முறை வந்தது. இந்த பாலம் அமைக்கும் கலை சமூகத்தில் சிலருக்கு மட்டுமே தெரியும். இப்படித் தெரிந்தவர்கள் அருகி வருவதாகக் கூறப்படுகிறது. இரட்டைத்தட்டு உயிர்ப் பாலம் ஒன்று மிகவும் பிரசித்திபெற்றது. ஆனால், அதற்கு பலநூறு படிகள் கீழே ஆற்றோரமாக இறங்கவேண்டும். அதனால் ஒற்றைத்தட்டு உயிர்ப் பாலமிருந்த ரிவாய் (Riwai) என்ற கிராமத்திற்குச் சென்று அங்கு உயிர்ப் பாலத்தைப் பார்த்தேன்.

Noel Nadesan
நோயல் நடேசன்

அதுகூட கிட்டத்தட்ட 300 படிகள் கீழே நடந்து செல்லவேண்டும். ஆனால், தலையில் ஏற்பட்ட காயத்தின் பின்னர் எனது நண்பர் வரத் தயங்கியதால் நான் தனியே சென்றேன். ஒருவிதத்தில் அங்கு சென்றபோது அரைமணி நேரம் மன நிறைவாக நின்று பார்த்தேன். 300 அடிகள் ஈரமான படிகளில் நின்று பார்த்துவிட்டு மீண்டும் நான் ஏறவேண்டும். அப்படி ஏறியபோது முதல்நாள் அருவியருகே கண்ட பெண் எதிரே வந்து சிரித்துவிட்டு, “நீங்கள் கொடுத்த உற்சாகத்திலே நான் அருவியையும் உயிர்ப் பாலத்தையும் பார்த்தேன்“ என்றாள்.

வார்த்தைகள் புது இரத்தமாக உற்சாகத்தையும் அதேவேளையில் ஆசனிக் நஞ்சாகவும் தொழிற்படுமென யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.

அடுத்த தினம் எங்கள் பயணம் மேகங்களைத் தழுவிய மலைகள் ஊடாக இந்திய வங்காள தேச எல்லையை நோக்கி இருந்தது. அந்த வழியால் பயணிப்பதே கண்களையும் இதயத்தையும் கவரும் காட்சி. மேகாலயா என்ற பெயருக்கேற்ற மேகங்கள் மலைகளை இடைவெளி விடாது தழுவியபடி அந்த நடுப்பகலிலும் கூடல் செய்தன. பலமுறை பல இடங்களில் நின்று பார்த்தோம். அந்தப் பாதை தற்பொழுது வங்காள தேசத்திற்கும் இந்தியாவிற்குமான பிரதான சாலையாக அகலமாக்கப்படுகிறது.

நான் முன்னர் வாழ்ந்த இலங்கை, தற்போது வாழும் அவுஸ்திரேலியா, கடல்கள் சூழ்ந்தவை என்பதால் நில எல்லைகள் தெரியாது. இந்தியா போன்ற நாட்டில் எல்லைகளின் முக்கியத்துவம் வித்தியாசமானது. உயரமான வேலிகள் அமைந்துள்ளது. ஆனால், தொடர்ந்த எங்கள் பயணம் வங்காள எல்லையருகே சென்றது. அங்குள்ள எல்லைக் கிராமம் (Dawki) அங்கு ஓடும் ஆறு (Umngot River) இந்தியாவையும் வங்காள தேசத்தையும் பிரிகிறது. இந்த ஆறு மிகவும் சுத்தமானது மட்டுமல்ல, கண்ணாடி போன்றது. ஆற்றின் கரையில் கற்கள் வைக்கப்பட்டு எல்லை குறிக்கப்பட்டுள்ளது. ஒரு எல்லை பாதுகாப்பு வீரர் மட்டும் ஆற்றின் குறுக்கே துப்பாக்கியுடன் நின்றார்.

வங்காள தேசத்தின் பக்கத்தில் இளநி வியாபாரிகளும் மற்றும் சில்லறை பொருள் விற்பவர்களும் இருந்தார்கள். இந்தியப் பக்கத்தில் பயணிகள் நின்றார்கள். ஆற்றில் அதிகம் நீர் ஓடவில்லை. மீண்டும் சிலோங் திரும்பியபோது 75 வருடங்கள் முன்பாக ஒரே நாட்டு மக்களாக இருந்தார்கள், உறவினர்கள் இரு பக்கத்திலும் இருந்திருப்பார்கள் என்ற எண்ணம்தான் என் மனதில் ஓடியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...