சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய சுட்டிக் குழந்தை மதீஷா பதிரணா. சுட்டிக் குழந்தை மட்டுமல்ல, வேகக் குழந்தையும் இவர்தான். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் ஆடி 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ள பதிரணாவைப் பார்த்து சக சிஎஸ்கே வீரர்களே பொறாமைப் படுகிறார்கள். வேகத்தின் உச்சத்தில் இருக்கிறது அவரது பந்து வீச்சு. சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக நடந்த போட்டியில் பதிரணா வீசிய பந்து 150 கிமீ வேகத்தை தொட்டிருக்கிறது.
பதிரணாவுக்கு இப்போது 20 வயதாகிறது. உலகிலேயே மிக வேகமாக பந்தை வீசியவர் என்ற பெருமையும் பதிரணாவுக்கு இருக்கிறது. 2020ல் நடந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடந்தது. அப்போது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மதீஷா பதிரணா வீசிய பந்து 175 கிமீ வேகத்தை தொட்டது, அதுதான் உலகிலேயே மிக வேகமாக வீசப்பட்ட பந்து என்று கூறப்படுகிறது. அப்போது பதிரணாவுக்கு வயது 17.
மற்ற பந்துவீச்சாளர்கள் தவறு செய்தால் தோனியைப் பார்க்க பயந்து பதுங்குவார்கள். ஆனால் பதிரணாவோ, அவரை ஓரக்கண்ணால் பார்த்து நாக்கைக் கடித்து சிரிக்கிறார். தோனியும் பதிலுக்கு செல்லமாக முறைக்கிறார். இவர்கள் இருவரின் பாசப் பிணைப்பு சிஎஸ்கே ரசிகர்களை புல்லரிக்கச் செய்கிறது.
இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் ஜெராக்ஸ் காப்பி என்று பதிரணாவைச் சொல்லலாம். மலிங்காவின் அதே ஸ்டைலில் கையைச் சுழற்றி யார்க்கர்களை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கும் பதிரணாவின் சொந்த ஊர் இலங்கையின் கண்டி. இவர் சிஎஸ்கே அணியில் இடம்பிடித்ததற்கும். 2019-ம் ஆண்டு ஐபிஎல்லின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸிடம் சிஎஸ்கே தோற்றதற்கும் ஒரு முக்கிய தொடர்பு இருக்கிறது.
2019-ம் ஆண்டு நடந்த ஐபிஎல்லின் இறுதி ஆட்டத்தில் கடைசி பந்தில் மும்பையிடம் தோற்றது சிஎஸ்கே. அப்போட்டியின் கடைசி பந்தில் சிஎஸ்கே ஜெயிக்க 2 ரன்கள் தேவைப்பட்டது. ஷர்துல் தாக்குர் பேட்டிங் செய்ய, மும்பைக்காக மலிங்கா பந்துவீசினார். அவர் வீசிய யார்க்கர் பந்தில் ஷர்துல் தாக்குர் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டம் இழக்க, ஒரு ரன்னில் ஜெயித்து கோப்பையை தட்டித் தூக்கியது மும்பை இந்தியன்ஸ்.
அந்த போட்டி முடிந்த பிறகு சக வீரர்களிடம் பேசிய தோனி, “இப்படி ஒரு பவுலர் நமக்கும் வேணும்” என்றார். சிஎஸ்கே நிர்வாகம் இதற்கான தேடலில் ஈடுபட்டது. அப்போது கண்டியைச் சேர்ந்த 17 வயதான ஒரு சிறுவன், மலிங்காவைப் போலவே பந்து வீசுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருந்தது. தோனியும், சிஎஸ்கே நிர்வாகிகளும் அந்த வீடியோவைப் பார்த்து புல்லரித்தார்கள். அவரை அணியின் நெட் பவுலராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்போது அவரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்கவில்லை.
இதே காலகட்டத்தில் இலங்கைக்கு கிரிக்கெட் ஆடச் சென்ற பல வெளிநாட்டு பேட்ஸ்மேன்களும், பதிரணவாவை நெட்டில் பந்து வீசச் செய்து மலிங்காவுக்கு எதிராக ஆட பயிற்சி பெற்றனர். தனக்கான டிமாண்ட் அதிகமாக, ஒரு கட்டத்தில் காயம் ஏற்பட்டதாக பொய் சொல்லி பயிற்சிக்கு செல்லாமல் இருந்திருக்கிறார் பதிரணா. இதை அவரது சிறு வயது பயிற்சியாளரான பின்னடுவா குறிப்பிட்டுள்ளார்.
பதிரணாவைப் பற்றி மேலும் கூறும் அவர், “பதிரணாவுக்கு 12 வயதாக இருந்தபோது பள்ளி கிரிக்கெட் ஒன்றில் அவர் பந்து வீசுவதைப் பார்த்தேன். அவரது பந்துவீச்சில் மலிங்காவின் சாயல் தெரிந்ததால் வியந்துபோன நான், அவருக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். அவரது பந்துவீச்சு ஸ்டைலை மேலும் மெருகூட்டினேன். ஆரம்பத்தில் அவர் நேராக ஓடமாட்டார். தத்தக்கா பித்தக்கா என்று கால்களை மாற்றிவைத்து ஓடுவார். ஆனால் அப்போதே 110 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுவார். அவர் ஓடும் ஸ்டைலை மட்டும் மாற்றினால் சிறந்த வீரராக அவரை உருவாக்கலாம் என்று நினைத்து அதை மாற்றினேன்” என்கிறார்.
இதைத்தொடர்ந்து இலங்கையில் நடந்த 14 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் பலரது கவனத்தை பதிரணா பெற்றுள்ளார். 2021 முதல் இலங்கையின் உள்ளூர் டி20 லீக் போட்டிகளிலும், துபாயில் நடந்த 10 ஓவர் லீக் கிரிக்கெட்டிலும் பதிரணா ஆடினார். அப்போது அவருடன் இந்த தொடரில் ஆடிய பிராவோ, அவரை சிஎஸ்கேவில் சேர்க்க வலை விரித்தார். 2022 ஐபிஎல்லின் நடுவில் சிஎஸ்கேவுக்காக ஆடிக்கொண்டிருந்த மில்னே காயத்தால் விலக, இந்தச் சமயத்தில பதிரணாவை அணிக்குள் கொண்டுவந்தது சிஎஸ்கே நிர்வாகம்.
நெட் பிராக்டிஸில் அவர் வீசிய முதல் பந்தைப் பார்த்ததும் தோனிக்கு பிடித்துப் போய்விட்டது. “இப்படிப்பட்ட ஒருவரைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்” என்று பதிரணாவை வாரி அணைத்துக்கொண்டார். அவருக்கு தீவிர பயிற்சிகள் தர அணி நிர்வாகத்துக்கு ஆலோசனை கூறினார். சிஎஸ்கேவின் முக்கிய புள்ளியாக பதிரணா உருவெடுத்தது இப்படித்தான். கடந்த ஆண்டிலேயே சிஎஸ்கே அணியின் சேர்க்கப்பட்டாலும், அவரை அதிகமாக ஆட வைக்கவில்லை. இந்த ஆண்டில் பதிரணா முழுமையாக தயாரானதாக தோனிக்கு நம்பிக்கை ஏற்பட்ட பின்னர்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாலராக அவர் பயன்படுத்தப்படுகிறார்.
பதிரணாவின் பந்துவீச்சை தோனி விரும்பினாலும், அவரது பந்துவீசும் ஸ்டைலால் அதிக காயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதனால் குறைந்த அளவிலான போட்டிகளிலேயே அவர் ஆடவேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறார் தோனி. இலங்கை அணியும் குறைந்த ஆட்டங்களில் அவரை பயன்படுத்த ஆலோசனை சொல்லியிருக்கிறார்.