“மணிப்பூர் என்றால் ‘Land of Gems’ என்று பொருள். அதன் மலைப்பகுதியில் பிளாட்டினம், நிக்கல், தாமிரம்…. ஏன் நவரத்தினங்களும் புதையுண்டு கிடக்கிறதாம். ஜியாலாஜிகல் சர்வே ஆப் இந்தியா ஆய்வுகள் நிறைய செய்திருக்கிறது. விலைமதிக்க முடியாத கனிம வளங்கள் புதைந்து கிடக்கும் இந்த மலைப்பகுதியில்தான் குக்கி பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். அங்கே நடக்கும் கலவரத்தின் பின்னே இந்த கனிம வளங்கள் பற்றிய பின்னணிகளும் இருக்கலாம்” என்று ஆரம்பித்தார் நண்பரான அரசியல் பிரமுகர்.
…. அந்த வீடியோ! அதை பற்றி பேசவும், சிந்திக்கவும் உள்ளம் நடுங்குகிறது. வீடியோ பற்றி பேச நாஎழாமல் அசாத்திய மௌனம் நிலவியது அங்கே.
இந்திய திருநாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் இந்த கொடூரம்!
‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்’ மகாகவி அன்றே கண்ணீர் சிந்தியிருக்கிறார். ‘இரவில் வாங்கினோம் சுதந்திரம். இன்னும் விடியவே இல்லை’ என்று பேர் தெரியாதஒரு இளம் கவியஞர் புலம்பல். உண்மைதானோ!
“சுந்திரம் என்பதன் பொருள் சாதாரணமானதல்ல. அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை புரிய வைக்கவே அரசியல் சட்டம். ஆள்வோர் முதல் கடைசி குடிமகன் வரை ‘சுதந்திரம்’ என்பதன் பொருளை புரிந்து கொண்டால்தான் இது சுந்திரநாடு” என்றார் அந்த முதிய அரசியல்வாதி.
‘தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா! இப்பயிரை கண்ணீரால் காத்தோம். கருக திருவுளமோ’ என்று பாரதியின் பாடலை அவர் முணுமுணுத்தார்… வேதனையோடு.
வாச்சாத்தி கொடுமையை நினைவூட்டினார் பதிலுக்கு ஒருவர்.
“ஆம்… வாச்சாத்தி என்ன…. வேங்கைவயல் கிராமத்தில் குடிதண்ணீர் தொட்டியில் கெட்டதை சேர்த்தார்களே அதுவும் சரி… இன்னும் நடக்கிற எந்த அநீதிகளும்… சாத்தான்குளத்தில் தந்தை, மகனை போலீஸ் அடித்து கொன்றார்களே அதுவும் சரி… எல்லாமே சுதந்திர நாட்டில் நடக்கக்கூடாத விபரீதங்கள். மக்கள் உரிமை காலில் மீதிபடும் நிகழ்ச்சிகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு… வேன் மீது ஏறி நின்று துப்பாக்கிச்சூடு நடத்தும் கோரக் காட்சி… ஓ! என்ன கொடூரம்… ‘சுதந்திர நாட்டில்’ நடக்கலாமா இப்படி… சுதந்திர பயிர் கருகிப்போக விடுகிறோமா என்பதற்கு இவையெல்லாம் சாட்சியம் சொல்கிறதே” விம்மினார் அருகில் இருந்த இலக்கியவாதி நண்பர்.
“மணிப்பூரில் நடப்பது என்ன என்ற முழு செய்தியும் புரியும்படி இருக்கிறதா. மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களைத் தவிர வேறு யாரும் அந்த பகுதியில் நிலம் வாங்க முடியாது. இப்போதுள்ள சட்டம் அதைத்தான் கூறுகிறது. குக்கி, நாகா இன மக்கள் அவர்கள். சமவெளியில் வாழும் மெய்தி இன மக்கள் அங்கே நிலம் வாங்க வழியில்லை. மெய்தி இனமக்களையும் பழங்குடி மக்களாக அறிவித்தால் அவர்களும் அங்கே நிலம் வாங்க முடியும். அப்படி ஒரு நிலை உருவாகிறது என்ற செய்தி பரவுகிறது” என்று சொன்னார் அரசியல்வாதி. அவர்கள் வாங்கினால் அவர்களிடமிருந்து கைமாறும். தனியார்களால் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்படும் என்ற பயம் பரவி இருக்கிறது. இதுதான் காரணமா என்றார் அவர்.
“எல்லாவற்றையும் விட நாடாளுமன்றத்தில் இதுபற்றி வெளிப்படையான விவாதம் நடந்தால் என்ன? சுதந்திரமாக மக்களின் சார்பாக குரல்கள் ஒலிக்க வேண்டிய இடமல்லவா அது. அங்கே எழுப்பும் சந்தேக குரல்களுக்கு பதில் அளிக்க வேண்டியவர் பிரதமர்தானே! மிகச் சிறந்த பேச்சாளரான, பதிலடி தருவதில் வல்லவரான நம் பிரதமர் – பதில் தராமல் – மன்றத்துக்கு வராமல் ஒதுங்குவதும் நாட்டின் சுதந்திரம் ஒதுக்கப்படுவது போல் இல்லையா? பிரதமரை பேச வைப்பதற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறதே. நாடாளுமன்ற விவாதங்கள்தான் இந்த ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பு” என்றார் அவர்.
பிரதமர் நேரு மீது அடிக்கடி பிஜேபி தலைவர்கள் தாக்குதல்கள் நடத்துகிறார்கள். ஆனால் பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் வராத நாளே கிடையாது. பைல்கள் நிரம்பிய ஒரு பெட்டியை கையில் பிடித்தவாறு வருவார் என்று ஈ.வெ.கி. சம்பத் அந்த காட்சியை பற்றி அடிக்கடி மேடையில் பேசுவார்.
பிரதமர் நேருவை நேரடியாக தாக்கி கடுமையாக விமர்சனம் செய்து கிருபளானி, டாக்டர் லோகியா பலமுறை பேசியிருக்கிறார்கள். நேரு அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பார். ஒருமுறை மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா தென்னாடு புறக்கணிப்பது பற்றி பேசியதை நேரு உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார். அவை முடிந்ததும் டிடிகே-யை அழைத்து அண்ணாவை இரவு விருந்துக்கு அழைத்து வருமாறு கூறினார். ஆனால் அண்ணா உடனடியாக சென்னை திரும்ப வேண்டியதாக இருந்ததால் அந்த சந்திப்பு நடைபெறவில்லை.
2012ல் இது போன்ற ஒரு பெரும் கலவரம் வடகிழக்கு மாநிலமான அசாமில் நடந்தது. போடோ பகுதிகளில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் கலவரம் நடந்த பகுதிகளுக்குச் சென்றார். பார்வையிட்டார். அங்கு நடந்த கலவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார் மன்மோகன் சிங்.
ஆகஸ்டு 15 அன்று படிகள் மீது ஏறி நாட்டு மக்களின் சுதந்திரத்தின் அடையாளமான மூவண்ண தேசக்கொடி ஏற்றப்படுகிறது. இந்திய மக்கள் முழு சுதந்திரம் அடைய இன்னும் பல படிகள் ஏறவேண்டியிருக்கிறதே.
ஜனநாயக நெறிமுறைகளுக்கு அபாயமணி(ப்பூர்) ஒலிப்பதாக நடந்தவைகளை எடுத்து கொள்ள தோன்றுகிறது. “நாட்டின் புனித நதிகளில் நீர் கரைபுரண்டு ஓடி மக்கள் வளமோடு வாழவேண்டும்… ஒரு சாதாரண குடிமகனின் கண்களில் இருந்து எந்த வகையிலும் ஒரு சொட்டு கண்ணீர்கூட வரக்கூடாது” என்றார் இலக்கியவாதி.