ரஜினி வாயைத் திறந்து பேசினால் அது வைரலாவது புதிதல்ல. அரசியல், சினிமா, சொந்த வாழ்க்கை, குட்டிக் கதைகள் என்று எப்போது அவர் பேசினாலும் அது பேசுபொருளாகிறது. இப்போது, ‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதும் வைரலாகியுள்ளது. அந்த விழாவில் தனது குடிப் பழக்கம் பற்றி மிக வெளிப்படையாக பேசியுள்ளார் ரஜினி. தமிழகம் முழுவதும் அனேகமாக எல்லா குடும்பங்களிலும் இன்று மது ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்நிலையில் ரஜினியின் பேச்சு அவரது ரசிகர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையுமா?
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஷங்கர், ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இங்கே.
ரஜினியின் குடிப் பழக்கம் புதிய தகவல் அல்ல. அவரே ஏற்கெனவே நிறைய சொல்லியுள்ளார். இப்போது தன் அனுபவத்தில் இருந்து மற்றவர்களுக்கு ஒரு அட்வைஸாக சொல்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
ரஜினி எப்போதும் எதையும் மூடி மறைத்து வைச்சதில்ல. தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொதுவாழ்க்கையிலும் சரி, பெரும்பாலானவற்றை வெளிப்படையாக பேசியுள்ளார். குறிப்பாக அவருடைய மதுப் பழக்கம், புகைப் பழக்கம் இரண்டையுமே தொடக்கத்தில் இருந்து அவர் மறைச்சு வைச்சிக்கல. இப்போது அந்த குடிப்பழக்கத்தால என்னன்ன இழந்தேன்னு சொல்லி, தன் அனுபவத்தையே மற்றவர்களுக்கு ஒரு அட்வைஸாவும் சொல்லியிருக்கார். உண்மையிலேயே இது மிகப்பெரிய விஷயம்.
பொதுவாக மதுப் பிரியர்களிடம் ஒரு விஷயத்தை நீங்கள் பார்க்கலாம். குடிக்கு அடிமையானதால் செய்ய வேண்டிய காரியங்களை தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். போதை காரணமாக, இப்போ வேண்டாம், அப்புறம் பார்த்துக்கலாம், அப்புறம் பார்த்துக்கலாம் என தள்ளிப் போடத்தான் தோன்றும். அரசியல் பிரவேசம் உட்பட பல காரியங்களை ரஜினியும் தள்ளிப் போட்டுள்ளார். அதற்கு தனது குடிப்பழக்கமும் ஒரு காரணம் என்பதை அவர் மறைமுகமாக சொல்லியுள்ளதாகத்தான் நான் பார்க்கிறேன்.
ரஜினியின் இந்த குடிப்பழக்கம் எப்போது தொடங்கியது?
பள்ளிக்கூட நாட்களிலேயே மோசமான நண்பர்கள் சகவாசத்தால் குடிக்கத் தொடங்கிவிட்டதாக ரஜினியே சொல்லியுள்ளார். புகைப் பழக்கமும் அப்போதே தொடங்கிவிட்டது. சென்னைக்கு வந்து நடிக்கத் தொடங்கிய பிறகும் இந்த பழக்கங்களை அவரால் விட முடியவில்லை. இதில் சிகரெட்டை தனது ஸ்டைலாகவே மாற்றிவிட்டார்.
ரஜினியின் குடிப்பழக்கத்தால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதா?
அவரது குருநாதர் கே. பாலசந்தர் இயக்கிய ‘அவர்கள்’ படப்பிடிப்பிலேயே குடித்து பாலசந்தரிடம் திட்டு வாங்கியுள்ளார். அன்றிலிருந்து அதன்பின்னர் படப்பிடிப்பில் அவர் குடித்ததே இல்லை. அதேநேரம் அதற்கு முன்னரும் சரி பின்னர் இப்போது வரையும் சரி, குடிக்கு அடிமையாக இருந்தாலும், ரஜினியால் படப்பிடிப்பு நின்றதே இல்லை. 1978இல் ரஜினி 21 படங்கள் நடித்தார். ஒரு வருடத்தில் 21 படங்கள் என்பது எந்த நடிகரும் செய்யாதது. அப்போது அவர் குடியின் உச்சத்தில் இருந்தார். அப்போதும் சரி, அவரால் படப்பிடிப்புகள் தடைபட்டதே இல்லை.
இந்த குடிப்பழக்கத்தால் அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் எதாவது வந்ததா?
அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை வந்ததுக்கு காரணமே மதுவும் புகையும்தான். இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து மாற்று சிறுநீரகம் பொறுத்த வேண்டிய அளவுக்கு நிலமை மோசமானது. சிங்கப்பூர் போய் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துதான் மீண்டு வந்தார்.
மதுப்பிரியர்களில் நண்பர்களுடன் குடிப்பது, தனியாக குடிப்பது, வீட்டில் குடிப்பது, பார்ட்டிகளில் குடிப்பது என பல வகையினர் இருக்கிறார்கள். ரஜினி எப்படி?
சென்னையைப் பொறுத்தவரைக்கும் தனியாகத்தான் குடிக்க விரும்புவார். சோழா ஹோட்டலில் இதற்காகவே தனி அறை வைத்திருந்தார். பெங்களூரு போனால் அவரது நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவரது நண்பர் ஒருவரே ஒரு பெரிய பார் ஓனர்தான். ஆங்கே கூடுவார்கள். மும்பை போனாலும் நண்பர்களுடன் மது அருந்துவார்.
ரஜினிக்கு பிடித்த சரக்கு என்ன?
தொடக்கத்தில் சாராயம் குடித்துள்ளார். நடிக்க வந்த பின்னர் உள்ளூர் சரக்குகளை குடித்துள்ளார். ஓரளவு வருமான வரத் தொடங்கியதும் லோக்கல் சரக்குகளை விட்டுவிட்டார். உயர்தர வெளிநாட்டு மதுவகைகள் குடிக்கத் தொடங்கினார். சென்னை கோடம்பாக்கம் சாலையில் உள்ள அருணாச்சலம் ஹோட்டலை வாங்கிய பின்னர் ஒரு நாள், அந்த ஹோட்டலின் மாடியில் நின்று சிகரெட் குடித்த போது, பழைய பிராண்டை விட்டுவிட்டு ட்ரிபிள் பை சிகரெட்டுக்கு மாறினாராம். மதுவிலும் அப்போது VAT 69 என்ற சரக்குக்கு மாறியுள்ளார். அதன்பின்னர் அவருக்கு பிடித்தமான சரக்கு Chivas Regal, Black Label. பகல் நேரங்களில் பியர் விரும்பி குடிப்பதாகவும் சொல்லியுள்ளார்.