’பரோட்டா’ சூரியை இன்றைக்கு நடிகர் சூரி என அடையாளம் காட்டியிருக்கும் படம் வெற்றிமாறன் இயக்கிய ’விடுதலை’.
சூரி கதாபாத்திரத்தை வைத்து ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் வெளிவந்திருந்தாலும், இரண்டாம் பாகத்தில் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதியின் ஆதிக்கம்தான் அதிகமிருக்கும். மேலும் இதில்தான் ’வாத்தியார்’ கதாபாத்திரத்தின் வாழ்க்கை, வலி, வேதனை என அனைத்தும் இருக்கிறது என்கிறது வெற்றிமாறன் வட்டாரம்.
’விடுதலை’ முதல் பாகத்தில் காட்டிய வேட்டைக்குப் பின்னணி என்ன, ஏன் வாத்தியாரை போலீஸ் தேடுகிறது என்பதற்கான களத்தைப் பதிவு செய்ய இருக்கிறார் வெற்றிமாறன்.
மேலும் வாத்தியார் கதாபாத்திரத்திற்கு துணையும் இருக்கிறதாம். அந்த கதாபாத்திரம் மிகவும் கனமான கதாபாத்திரம் என்பதால், அதில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பெரும் யோசனையில் இருந்திருக்கிறார் வெற்றிமாறன்.
ஆனால் அந்த யோசனை இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது என்கிறார்கள். வெற்றிமாறன் தனுஷை வைத்து இயக்கிய ‘அசுரன்’ படத்தில் நடித்த மஞ்சு வாரியரை ‘விடுதலை -2’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.
மஞ்சு வாரியர் நடிக்க இருப்பது தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக எந்நேரத்திலும் வெளி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லிப் -லாக் எல்லாம் முடியாது
விஜய் ஆண்டனி நடித்த ‘கொலை’ படத்தில் நாயகியாக தமிழில் அறிமுகமாகி இருப்பவர் மீனாட்சி செளத்ரி.
மீனாட்சி செளத்ரியின் ஆந்திராவைச் சேர்ந்தவர். இவர் நடிகையாக அவதாரமெடுப்பதற்கு முன்பாக மருத்துவ படிப்பை முடித்த டாக்டர்.
டாக்டராக இருந்தாலும், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் ஸ்டெதஸ்கோப்பை ஒரு ஓரமாக தூக்கி வைத்துவிட்டு, கேமராவுக்கு முன்னால் நடிக்க வந்துவிட்டார்.
ஹீரோயின் பஞ்சத்தினால் தத்தளிக்கும் தமிழ் சினிமாவில், மீனாட்சியைப் பார்த்துவிட்டு, கதை சொல்ல கிளம்பியிருக்கிறார்கள். கதை சொல்ல வந்தவர்களிடம், மீனாட்சி செளத்ரி ஒரு பட்டியலை நீட்டியிருக்கிறாராம்.
குழப்பத்தோடு வாங்கிப் பார்த்தவர்களுக்கு, அதிர்ச்சி.
லிப் லாக் காட்சிகளில் நடிக்க மாட்டேன். நெருக்கமான காட்சிகள் எனக்கு செளகரியமாக இல்லை. கதைக்கு மிக மிக அவசியமென்றால் மட்டுமே முத்தக்காட்சிகளோ அல்லது நெருக்கமான காட்சிகளோ ஓ.கே. இல்லையென்றால் என்னை வற்புறுத்தாதீர்கள் என்கிறாராம்.
முத்தக்காட்சி, நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால் நான் வேண்டாமென விட்டுவிட்ட படங்கள் ஏழெட்டு தேறும் என்று சொல்லும் மீனாட்சி செளத்ரிக்கு அவரது பாலிஸிதான் ரொம்ப முக்கியம் என்கிறார்.
தூள் கிளப்பும் சிறிய படங்கள்!
கோவிட்டின் கோரத்தாண்டவத்திற்குப் பிறகு திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்திருக்கிறது. தங்களுக்கு பிடித்த கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள் வெளியானால் மட்டுமே திரையரங்குகளில் கூட்டத்தைப் பார்க்க முடிகிறது.
இந்நிலையில் சிறியப்படங்கள் ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுக்க ஆரம்பித்திருக்கின்றன.
உதாரணத்திற்கு தமிழில் ‘குட் நைட்’ மற்றும் ‘போர்தொழில்’ என இரண்டுப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பு.
இதேபோல் தெலுங்கிலும் விஜய் தேவரக்கொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்திருக்கும் ‘பேபி’ படம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் பல கோடி லாபம் ஈட்டியிருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் தெரிவிக்கிறது.
ஏற்கனவே மலையாளப்படங்களில் சின்னப்படங்கள் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் விடுப்பட்ட ஒரே சினிமா கன்னட சினிமா.
’சார்லி’, ’கேஜிஎஃப்’, ’காந்தாரா’ என கன்னடப்படங்கள் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றன. ஆனால் இந்தப்படங்களுக்கு அடுத்து வெளிவந்த படங்கள் எதுவும் ரசிகர்களை கவர்ந்திழுக்கவில்லை. அதற்கு மாறாக பெரும் பட்ஜெட்டில் வெளிவந்த ‘கப்ஜா’, ‘விக்ராந்த் ரோனா’ வந்த வேகத்திலேயே திரையரங்குகளில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டன.
இப்படியொரு கவலைக்கிடமான சூழலில் இருக்கும் கன்னட சினிமாவை இப்போது உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது சமீபத்தில் வெளி வந்திருக்கும் சின்ன பட்ஜெட் படமான ‘Hostel Hudugaru Bekadiddare’.
இந்தப்படம் ஒரு கல்லூரி ஹாஸ்டலில் நடக்கும் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் த்ரில்லர்.