க. சுபாஷிணி
உலகில் இன்று எந்த இனமுமே கலப்பில்லாத ‘தூய்மையான’ இனமில்லை; அனைத்துமே கலப்பில் உருவானவைதான். அடிக்கோடிட்டு நாம் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான இந்த உண்மையை சொல்கிறது, David Reich எழுதிய ‘Who We Are and How We Got Here’.
உலகின் பல பகுதிகளில் நடத்தப்படுகின்ற அகழாய்வுகள், பல மனித கூட்டங்கள், அதாவது மாறுபட்ட மரபணுக்கூறுகள் கொண்ட மனிதக் கூட்டங்கள் இந்த உலகில் வாழ்ந்திருக்கின்றன என்பதற்குச் சான்றுகளை அளித்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் ஸ்பெயினில் (Atapuerca, Spain) ஒரு மனித எலும்புக்கூடு 1994இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது 12 லட்சம் – 8 லட்சம் ஆண்டுகள் முந்தைய காலகட்டமாக இருக்கும் என்று கணித்திருக்கின்றார்கள்.
இதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் இது வேறெந்த வகை மனித இனத்தோடும் பொருந்தாதால் தனியாக வகைப்படுத்தியுள்ளனர். இதற்கு Homo antecessor எனப் பெயரிடப்பட்டது. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த மனிதக் கூட்டம் தன் உடலில் கொண்டிருக்கின்ற டிஎன்ஏ கூறுகள், இன்று நவீன மனிதர் உடற்கூறுகளையும் நீயாண்டர்தால் வகை மனித உடற் கூறுகளையும் கொண்டிருக்கிறது.
இதுவரை உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த எலும்புக் கூடுகள் தொடர்பான ஆய்வுகள், தொல் மனித இனங்கள் ஆப்பிரிக்காவில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் இடம்பெயர்ந்த நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. இன்றைக்கு ஏறக்குறைய 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தொன்மையான மனிதக் கூட்டங்களில் ஒன்றான ஹோமோ எரக்டசின் ஒரு கூட்டம் ஆப்பிரிக்காவிலிருந்து இடப்பெயர்ச்சி செய்து இன்றைய ஆப்பிரிக்கா, இன்றைய ஆசியா, ஐரோப்பிய பகுதிகளுக்கு விரிவடைந்துள்ளது.
ஆப்பிரிக்காவிற்கு வெளியே இன்று கிடைக்கின்ற மிகப் பழமையானதாகக் கருதப்படுகின்ற ஹோமோ எரக்டஸ் எலும்புக்கூடு இன்றைய ஜியோர்ஜியாவில் டிமானிசி (Dmanisi) தொல்லியல் களம் உள்ள பகுதியில் கிடைத்துள்ளது. இது 1.8 மில்லியன் ஆண்டுகள் பழமையானது எனக் கணக்கிடப்படுகின்றது. இதே காலகட்டத்தில் இந்தோனீசியாவின் ஜாவா தீவில் கிடைத்த எலும்புக்கூடும் இதே மனித வகையைச் சார்ந்தது தான்.
இந்தியாவில் அத்திரம்பாக்கம் பகுதியில் 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தொல்லியல் அகழாய்வில் டாக்டர். சாந்தி பப்பு அவர்களது ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் எச்சமும் 1இலிருந்து 1.7 மில்லியன் ஆண்டுகள் கால பழமை கொண்டது என கண்டறியப்பட்டது. இதுவும் ஹோமோ எரக்டஸ் வகை.
ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் பகுதியில் 1907ஆம் ஆண்டில் கிடைத்த பெரிய மண்டை ஓட்டுடன் கிடைத்த ஒரு எலும்புக்கூடும் இதே வகையைச் சேர்ந்தது என்றும் அது 600,000 ஆண்டுகள் பழமையானது என்றும் அறிகின்றோம்.
அதற்கு அடுத்து, பெரிய இடப்பெயர்ச்சி என்பது இன்று நவீன மனிதர்களும் அவர்களோடு சேர்ந்து பேசப்படுகின்ற மாறுபட்ட வகை மனித இனமும் தோன்றியதற்கான வித்தினை அமைத்த ஒரு இடப்பெயர்ச்சி காலகட்டமாகும். இது நிகழ்ந்தது இன்றையில் இருந்து 1.4 மில்லியனிலிருந்து 0.9 மில்லியன் ஆண்டுகள் முந்தைய காலகட்டமாகும்.
இதற்கு அடுத்ததாக மூன்றாவது மிகப்பெரிய இடப்பெயர்ச்சி என்பது இன்றைக்கு ஏறக்குறைய 7,70,000 லிருந்து 550,000 ஆண்டுகள் முந்தைய காலகட்டத்தில் நிகழ்ந்ததாகும். இது தொன்மையான மனிதக் கூட்டம், நவீன மனித கூட்டம் மற்றும் நியாண்டர்தால் வகை மனிதர்கள், டேனிசோவியன் வகை மனிதர்கள் எனப் பிரிந்து தனித்துவத்துடன் உருவாகக் காரணமாக அமைந்தது.
இன்றைக்குக் கிடைத்திருக்கின்ற தொல்சான்றுகளில் உடல் ரீதியாக மிகப் பழமையான தொன்மையான நவீன மனிதரின் (சேப்பியன் வகை) உடல் என்பது ஆப்பிரிக்காவின் மொரோக்கோ நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஏறக்குறைய 300,000 ஆண்டுகள் பழமையான மனித எலும்புக் கூடாகும்.
ஆகவே, இச்சான்றுகளின் அடிப்படையில் மனித குலத் தோற்றத்திற்கு மையப் புள்ளியாக அமைந்தது ஆப்பிரிக்கா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நவீன மனிதர் கூட்டம் ஆப்பிரிக்காவிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்திருந்தாலும் கூட நவீன மனிதக் கூட்டம் கடந்த 60,000 ஆண்டுகள் காலகட்டத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து வெளிவந்த இடப்பெயர்ச்சி இன்றைக்கு உலகின் பல பகுதிகளில் வாழ்கின்ற மனிதர்களின் மூதாதையர்களின் ஆரம்ப நிலையைக் காட்டுவதாக அமைகின்றது. இதுவே இன்று உலகம் முழுவதும் பரவி வாழ்கின்ற நவீன மனிதர்களுக்கு (ஹோமோ சேப்பியன்) மிக நெருக்கமான ஒரு இடப்பெயர்ச்சியாகவும் அமைகிறது.
இந்தப் புதிய இடப்பெயர்ச்சி காலத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிய நவீன மனிதக் கூட்டம் ஏற்கனவே உலகின் பல்வேறு நிலப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த நவீன மனித கூட்டங்கள் மட்டுமின்றி ஹோமோ நியாண்டர்தால், ஹோமோ டெனிசோவியன், ஹோமோ எரெக்டஸ் மற்றும் பெயரிடப்படாத அல்லது ஆய்வுலகம் கண்டறியாத பல்வேறு மனித கூட்டங்களுடன் இனக்கலப்பில் ஈடுபட்டு தன்னுள்ளே புதிய மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொண்டு தொடர்ச்சியாக தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கின்றது.
ஆகவே இதிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் மிக மிகத் தொன்மையான ஆதி மனிதர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வெளிவந்த காலகட்டத்தில் மாற்றங்களை உடற்கூறுகளில் ஏற்படுத்திக் கொண்டு தனித்தனி மாறுபாடுகளுடன் வளர்ச்சி காணத் தொடங்கி தனித்துவத்துடன் அவை பிரிந்தன.
இன்றைக்கு ஏறக்குறைய 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் என்பது ஐரோப்பாவிலும், மத்திய ஆசியாவிலும், ஆசியாவிலும் பல வேறுபட்ட மனிதக் கூட்டங்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்த ஒரு காலகட்டமாகும். அது எப்படி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கால்நடையாகவே அந்தக் காலத்தில் மனிதர்கள் சென்றிருக்கலாம் என நாம் யோசிக்கலாம். ஆனால், மனிதக் கூட்டம் அசாத்தியமான திறன் கொண்டது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. வடக்கு ஐரோப்பா பகுதிக்குச் சென்ற மனிதக் கூட்டம் பின் கீழே இறங்கி, தெற்காசியப் பகுதிகளுக்கும் வந்திருக்கின்றன; அங்கு நிலைபெற்று வாழ்ந்திருக்கின்றன.
ஆகவே, மரபியல் கூறுகள் நமக்கு வெளிப்படுத்துகின்ற மனித குலத்தின் இடப்பெயர்ச்சி தொடர்பான தரவுகள் நம்மை மலைக்க வைக்கின்றன; மனிதக் கூட்டத்தின் அசாத்தியமான திறனையும் பார்த்து நம்மை வியக்க வைக்கின்றன.