உலகளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருதுகளில், நோபல் பரிசுக்கு அடுத்ததாக உயர்ந்ததாக கருதப்படுவது புக்கர் விருது. இந்த விருது இந்த ஆண்டு இலங்கை எழுத்தாளரான ஷெஹான் கருணாதிலகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் இயக்கங்களுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு போரின் பின்னணியில் எழுதப்பட்ட செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மாயிடா (The Seven Moons of Maali Almeida) என்ற நாவலுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
புக்கர் பரிசு 1969 முதல் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த நாவல் அல்லது சிறுகதைகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது 50000 பிரிட்டிஷ் பவுண்ட்கள் கொண்டது. இந்தியாவில் இருந்து அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி, கிரண் தேசாய், அரவிந்த் அடிகா ஆகியோருக்கு இவ்விருது கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பிறந்த மைக்கேல் ஒண்டாச்சி முப்பது வருடங்களுக்கு முன்னர் புக்கர் விருது பெற்றுள்ளார். என்றாலும், அவர் கனடியப் பிரஜையாகவே கணிக்கப்படுகிறார். இதனால், ஷெஹான் கருணாதிலகேவே புக்கர் விருது பெறும் முதல் இலங்கை எழுத்தாளராக இன்று கொண்டாடப்படுகிறார்.
இம்முறை 169 படைப்புகள் புக்கர் பரிசுப் போட்டிக்கு வந்துள்ளன. இவற்றில் முப்பது படைப்புகள் இரண்டாம் சுற்றுக்கும், ஆறு இறுதிச் சுற்றுக்கும் தேர்வாகியுள்ளன. இறுதிச் சுற்றில் அனைத்து நடுவர்களின் ஒரே தேர்வாக இருந்தது ஷெஹான் கருணாதிலகேவின் செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மாயிடா நாவலாகவே இருந்தது.
1975ஆம் ஆண்டு இலங்கையின் காலியில் பிறந்த கருணாதிலகவின் குழந்தைப் பருவம் கொழும்பில் கழிந்தது. பின்னர் நியூசிலாந்தில் படித்தார். லண்டன், ஆம்ஸ்டர்டாம் மற்றும் சிங்கப்பூரில் பணிபுரிந்துள்ளார். விளம்பர நகல் எழுத்தாளராக பணிபுரிந்த கருணாதிலக இன்டிபென்டன்ட் ஸ்கொயர் என்ற இசைக்குழுவில் கிட்டார் வாசித்துள்ளார். தற்போது 47 வயதாகும் ஷெஹான் கருணாதிலக இலங்கையில் வசிக்கிறார். இலங்கையின் தலைசிறந்த தற்கால எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
நாவல்களைத் தவிர, ராக் பாடல்கள், திரைக்கதைகள் மற்றும் பயணக் கதைகளையும் கருணாதிலக எழுதியுள்ளார். இவரது பாடல்கள், வசனங்கள் மற்றும் கதைகள் ரோலிங் ஸ்டோன், GQ, நேஷனல் ஜியோகிராஃபிக் ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளன.
கருணாதிலகாவின் முதல் படைப்பான ‘தி பெயிண்டர்’ 2000-ம் ஆண்டில் கையெழுத்துப் பிரதி நிலையில் கிரேஷியன் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், அது நூலாக வெளியாகவில்லை. 2010-ல் ஷெஹானின் முதல் நாவல் ‘சைனாமேன்: தி லெஜண்ட் ஆஃப் பிரதீப் மேத்யூ’ வெளியானது. இலங்கை வரலாற்றை கிரிக்கெட் பின்னணியில் விவரிக்கிறது இந்நாவல்.
இதில் 1980-களில் காணாமல் போன இலங்கை கிரிக்கெட் வீரரைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு பத்திரிகையாளரின் தேடலில் கதையை நகர்த்திச் செல்கிறார். இது 2011ஆம் ஆண்டு காமன்வெல்த் பரிசை வென்றது. மேலும், பிபிசி மற்றும் தி ரீடிங் ஏஜென்சியின் ‘பிக் ஜூபிலி ரீட்’ ஆகியவற்றுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நூல் எல்லா காலத்திலும் இரண்டாவது சிறந்த கிரிக்கெட் புத்தகமாக விஸ்டனால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது புக்கர் விருது வென்றுள்ள ‘தி செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மேடா’ இவரது இரண்டாவது நாவல். 1990-களில் தமிழ் இயக்கங்களுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு போர்தான் இதன் களம். போரின் பின்னணியில் ஒரு புகைப்படக் கலைஞரின் கதையைச் சொல்லும் நாவல் இது.
இந்நாவலை புக்கர் விருதுக்கு தேர்வு செய்த குழுவினர், “இந்த நாவல் இலங்கை உள்நாட்டுப் போர் பற்றி பரந்த கற்பனை மற்றும் கருத்துக்களை கொண்டுள்ளது. தந்திரமான, கோபமான நகைச்சுவை கொண்டது” என்று தெரிவித்துள்ளனர்.
தேர்வுக் குழுவின் தலைவரான நீல் மெக்ரிகோர், “உலகின் இருண்ட இதயம் என்று ஆசிரியரால் விவரிக்கப்படும் வாழ்க்கை, வாசகர்களை ஒரு ரோலர்கோஸ்டர் பயணத்தில் அழைத்துச் செல்லும் புத்தகம் இது. இதில் வாசகர்கள் ஆச்சரியம், மகிழ்ச்சி, மென்மை, அன்பு மற்றும் விசுவாசத்தைக் காணலாம்” என்று கூறியுள்ளார்.