No menu items!

டி20 உலகக் கோப்பை: ஜெயிக்கும் குதிரைகள்

டி20 உலகக் கோப்பை: ஜெயிக்கும் குதிரைகள்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் கடைசி 4 அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில் இந்த முறை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரை இறுதிச் சுற்றை எட்ட வாய்ப்புள்ள முதல் 4 அணிகளாக இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை கருதப்படுகின்றன. இந்த அணிகளின் நிலை மற்றும் பலங்கள்… பலவீனங்கள்…

இந்தியா:

2007-ம் ஆண்டில் நடந்த முதலாவது டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு, இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. இந்த நிலையில் இம்முறை எப்படியும் கோப்பையை வென்றாக வேண்டும் என்ற லட்சியத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பியுள்ளது இந்திய அணி. இந்த ஆண்டில் அதிக டி20 போட்டிகளில் வென்ற அணி என்ற கெத்தில் இருப்பது இந்தியாவின் தன்னம்பிக்கையை கூட்டுகிறது.

உலகமே பார்த்துப் பொறாமைப்படும் பேட்டிங் வரிசைதான் இந்தியாவின் மிகப்பெரிய பலம். ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்த்திக் பாண்டியா என அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் சொல்லி அடிக்கும் கில்லியாய் இருக்கிறார்கள். இதில் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை என்பதால், அவர் கூடுதல் சிரத்தை எடுத்து ஆடுவார்கள்.

பேட்டிங்கில் எல்லாம் சரியாக சரியாக இருந்தாலும், பந்துவீச்ச்சு கொஞ்சம் உதைக்கிறது. பொதுவாகவே இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசி 5 ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவார்கள். இந்த சூழலில் பும்ரா வேறு காயத்தால் காணாமல் போக, பந்துவீச்சைப் பற்றிய கவலை மேலும் அதிகரித்துள்ளது.

இந்திய பந்துவீச்சாளர்கள் முழு அளவுக்கு இல்லையேனும் ஓராளவுக்காவது கைகொடுத்தால், பேட்ஸ்மேன்களின் உதவியுடன் அரை இறுதியை எட்டலாம்.

இங்கிலாந்து:

இந்தியாவைப் போலவே வலிமையான பேட்டிங் வரிசையைக் கொண்ட மற்றொரு அணி இங்கிலாந்து. ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலான், லியாம் லிவிங்ஸ்டன், மொயின் அலி என்று டி20 போட்டிகளுக்கென்றே அவதாரம் எடுத்த பல அதிரடி பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.

பேட்டிங்குக்கு இணையாக அந்த அணியின் பந்துவீச்சும் வலுவாகவே உள்ளது. ரீஸ் டாப்லே, டேவிட் வில்லி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும், அடில் ரஷித், மொயின் அலி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் சவாலாக இருப்பார்கள்.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களை வென்றதால் அரை இறுதியை நோக்கி இங்கிலாந்து தன்னம்பிக்கையுடன் செல்லும்.

தென் ஆப்பிரிக்கா:

கடந்த ஆண்டு நடந்ந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக ஆடியபோதிலும் ரன் ரேட்டின் அடிப்பையில் அரை இறுதி வாய்ப்பை இழந்த அணி தென் ஆப்பிரிக்கா. அப்போது இழந்ததை இப்போது பிடிக்கவேண்டும் என்ற வெறியுடன் இந்த முறை களம் காண்கிறது.

மற்ற அணிகளெல்லாம் பேட்டிங்கில் நம்பிக்கை வைத்திருக்க, பந்துவீச்சில் நம்பிக்கை கொண்டு உலகக் கோப்பைக்கு வந்துள்ளது தென் ஆப்பிரிக்கா. காஸிகோ ரபாடா, அன்ரிச் நோர்ஜே, வெயின் பார்னெல், லுங்கி நெகிடி என பிரம்மாண்டமான 4 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்திருப்பது அந்த அணியின் கூடுதல் பலம்.

பேட்டிங்கில் பெரிய சக்தியாக யாரும் இல்லாவிட்டாலும், டிகாக், ஹென்ரிக்ஸ், மார்க்ரம், டேவிட் மில்லர் ஆகியோர் ஓரளவு கைகொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு முறையும் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் வரும்போதெல்லாம், அதில் வெல்ல வாய்ப்புள்ள அணிகளின் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் பெயரும் இருக்கும். ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரு முறைகூட அந்த அணியால் கோப்பையை வெல்ல முடிந்ததில்லை.

இந்த முறையாவது அதில் மாற்றம் இருக்குமா என்று பார்ப்போம்.

ஆஸ்திரேலியா:

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற அணி ஆஸ்திரேலியா. அதே கெத்தில் இந்த ஆண்டும் கோப்பையை வெல்லவேண்டும் என்ற ஆவலுடன் உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. கடந்த உலகக் கோப்பை தொடரில் ஆடிய அணியில் இருந்து பெரிய அளவில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. தங்களின் சொந்த மண்ணில் உலகக் கோப்பை தொடர் நடக்க இருப்பது அவர்களுக்கு கூடுதல் பலம்.

பேட்டிங், பந்துவீச்சு ஆகிய 2 துறைகளிலும் சம அளவிலான பலத்துடன் ஆஸ்திரேலிய அணி உள்ளது. பேட்டிங்கில் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ், ஸ்டோயினஸ் ஆகியோரும் பந்துவீச்சில் ஹசல்வுட், பாட் கம்மின்ஸ், ஆடம் சம்பா ஆகியோரும் அந்த அணிக்கு அரணாக உள்ளனர்.

இப்படி இரண்டும் கலந்த கலவையாக உள்ளதால் இந்த உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலிய அணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...