இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருந்த ஆர்.ஸ்ரீதர், Coaching Beyond என்ற பெயரில் தனது அனுபவங்களை புத்தகங்களாக எழுதியுள்ளார். அதிலிருந்து சில பகுதிகள்…
முன்பே கணித்த தோனி
2014-15ல் அடிலெய்ட் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் நடந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமானால் கடைசி நாளில் 364 ரன்களை எடுக்க வேண்டும் என்ற இலக்கை ஆஸ்திரேலியா நிர்ணயித்தது. கடைசி நாளில் அந்த ஸ்கோரை விரட்டிப் பிடித்து எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று அப்போதைய கேப்டன் கோலி விரும்பினார். ஆனால் தோனிக்கு அதில் உடன்பாடு இல்லை.
விராட் கோலியை அழைத்துப் பேசிய தோனி, ‘வெற்றி பெற வேண்டுமானால் ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 4 ரன்களை அடிக்க வேண்டும். அதற்காக முயன்றால் விக்கெட்களை இழந்து தோற்றுவிடுவோம். உன்னால் நிச்சயம் ரன்களை அடிக்க முடியும். ஆனால் மற்றவர்களால் அடிக்க முடியுமா என்று யோசிக்க வேண்டும். அதனால் ஒரு பேட்ஸ்மேனாக இல்லாமல் கேப்டனாக யோசித்து டிரா செய்ய முயற்சி செய்’ என்றார்.
தோனியின் இந்த கருத்தை கோலி ஏற்கவில்லை. வெற்றியை மனதில் வைத்து ஆடுவோம்’ என்பதில் பிடிவாதமாக இருந்தார் கோலி. தான் நினைத்தபடியே அதிரடியாக பேட்டிங் செய்த அவர் 141 ரன்களைக் குவித்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் கோலி அவுட் ஆனதும் நிலை மாறியது.
வெற்றிக்காக அடித்து ஆடவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். கடைசியில் 48 ரன்களில் இந்தியா தோற்றது. தோனியின் அனுபவ அறிவை கோலி தெரிந்துகொண்டார்.
பயிற்சிக்கு தயங்கிய ரிஷப் பந்த்
சிறு வயதிலேயே இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த். ஆனால் தொடக்கத்தில் அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் விக்கெட் கீப்பிங் முறை நன்றாக இல்லை. குறிப்பாக அஷ்வின், ஜடேஜா ஆகியோர் பந்துகளை வீசினால் ஆதை கலெக்ட் செய்யத் திணறினார். அவருக்கு பயிற்சி கொடுத்தாலும் அவர் அதை சரியாக செய்யவில்லை. என்னிடம் பயிற்சிக்கு வரவே அவர் தயங்கினார். தனது பேட்டிங்கே அணியில் தனக்கு ஸ்திரமான இடத்தை பெற்றுத்தரும் என்று நம்பினார்.
அவரது இந்த நடவடிக்கை எனக்கு கோபத்தைக் கொடுத்தது. நானும் அவரை அழைத்து பயிற்சி கொடுப்பதை நிறுத்தி விட்டேன். அதே காலகட்டத்தில் பந்த்தின் கீப்பிங் மோசமாக இருந்ததால் அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல், சாஹா ஆகியோரை இந்திய கேப்டன்கள் பயன்படுத்த தொடங்கினர். தனக்கு கீப்பிங் வராததால்தான் அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த பந்த், என்னிடம் வந்து கீப்பிங் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு தனது ஸ்டைலை மாற்றினார்.
கடுமையான பயிற்சிகளைச் செய்து பேட்டிங்குடன் கீப்பிங்கிலும் வல்லவராக மாறி அணியில் நிரந்தர இடம் பிடித்தார்.
பீல்டிங் சரியில்லை – வீரர்களை எச்சரித்த தோனி
தோனியை ‘மிஸ்டர் கூல்’ என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் அவர் கோபப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. 2014-ம் ஆண்டு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது.
போட்டி முடிந்ததும் வீரர்கள் மத்தியில் தோனி மிகவும் கோபமாக பேசினார். வீரர்களின் பீல்டிங் திறமை நாளாக நாளாக மோசமாகிக்கொண்டே வருவதாக வருத்தப்பட்ட அவர், பீல்டிங் திறமை இல்லத வீரர்களுக்கு, அவர்கள் எத்தனை பெரிய வீரர்களாக இருந்தாலும் 2015 உலகக் கோப்பையில் ஆட வாய்ப்பு கிடைக்காது என்று எச்சரித்தார்.