கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நிலையில், அதற்கு முந்தைய தேர்தல் யுத்தமாக காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் இந்த தேர்தலைப் பார்க்கின்றன.
தென் மாநிலங்களில் தாங்கள் நேரடியாக ஆட்சியில் உள்ள ஒரே மாநிலமான கர்நாடகத்தில் ஆட்சியைத் தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை எப்படியும் கைப்பற்ற வேண்டும் என்ற வெறியுடன் காங்கிரஸ் கட்சியும், இரண்டையும் வெற்றிகொண்டு ஆட்சியமைக்கும் எண்ணத்துடன் மதசார்பற்ற ஜனதா தளமும் களத்தில் இறங்க, கர்நாடகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
224 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது பாரதிய ஜனதா கட்சி. காங்கிரஸ் 223 தொகுதிகளில் போட்டிப் போடுகிறது. ஒரு இடத்தை சர்வோதையா கட்சிக்கு கொடுத்திருக்கிறது. மதசார்பற்ற ஜனதா தளம் 207 இடங்களில் போட்டியிடுகிறது.
கர்நாடகா தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 207 இடங்களில் போட்டியிடுகிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 133 இடங்களில் போட்டியிடுகிறது.
பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக 19 பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி, அத்துடன் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 6 Road Showக்களையும் நடத்தியிருக்கிறார். இதற்கு கொஞ்சமும் குறையாமல் 12 நாட்கள் கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளார் ராகுல் காந்தி.
இப்படி இரு பிரிவினரும் தீவிர பிரச்சாரத்தில் இருக்க, வெற்றி வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பது கணிக்க முடியாததாக இருக்கிறது. பல்வேறு செய்தி நிறுவனங்களும், தொலைக்காட்சிகளும் கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ள நிலையில் ஒவ்வொரு கருத்துக் கணிப்பும் வெவ்வேறு முடிவுகளைத் தருகின்றன.
ஏபிபி நியூஸ் – சி வோட்டர் இணைந்து நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி 110 முதல் 122 தொகுதிகள் வரையும், பாஜக 73 முதல் 85 தொகுதிகள் வரையும், மதசார்பற்ற ஜனதா தளம் 21 முதல் 29 தொகுதிகள் வரையும் கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது.
இந்தியா டிவியும் சிஎன்எக்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 105 தொகுதிகளையும், பாஜக 85 தொகுதிகளையும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் 32 தொகுதிகளையும் என்று கணக்கு காட்டுகிறது.
இந்தியா டுடேவும் சி வோட்டரும் இணைந்து நடத்திய மற்றொரு கருத்துக் கணிப்பிலும் காங்கிரஸ் கட்சிதான் முதல் இடத்தில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி 107 முதல் 119 இடங்கள் வரை ஜெயிக்கும் என்று கணித்துள்ள இந்த சர்வே, பாஜகவுக்கு 74 முதல் 86 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கிறது.
எடிடிவி நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் முதல்வர் பதவிக்கு ஏற்றவராக சித்தராமையாவை பெரும்பாலான மக்கள் கருதுவதாகவும் சொல்கிறது.
மேலே சொன்ன கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்க, ஜீடிவி நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் இதற்கு நேர் மாறாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்கிறது. இந்த கருத்துக் கணிப்பின்படி பாஜகவுக்கு 103 முதல் 115 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 79 முதல் 91 இடங்களும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 26 முதல் 36 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தேவகவுடாவின் மதசார்ப்பற்ற ஜனதா தளம் இந்த தேர்தலில் முக்கிய இடம் வகிக்கும் என்பதையும் இந்த கருத்துக் கணிப்புகள் சொல்லத் தவறவில்லை. கடந்த தேர்தலுக்கு பிறகு தொங்கு சட்டமன்றம் அமைந்த நிலையில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வராக காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. அதேபோன்ற நிலை இப்போதும் ஏற்படலாம் என்று அக்கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.