‘தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய டாடா சபாரி கார் விற்பனைக்கு ரூ. 2,70,000’ என்ற அறிவிப்புடன் தன் விபரத்தையும் குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார், யூஸ்டு கார் விற்பனையாளர் புல்லட் ராஜா. ஜெயலலிதா கார் என்பதற்கு ஆதாரமாக ஆர்சி புக் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். ஜெயலலிதா கார் இவ்வளவு குறைந்த விலைக்கா? ஜெயலலிதா நினைவாக, அவரது அரசியல் வாரிசுகள் ஏன் இந்த காரை வாங்க ஆர்வம் காட்டவில்லை?
புல்லட் ராஜாவுடன் பேசினோம். “இந்த காரை நான் பாரதி என்பவரிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன். வாங்கி ஆர்சி புத்தகத்தை பார்த்த பின்புதான் இது ஜெயலலிதா மேடத்தின் கார் என்பது தெரிந்தது.
இந்த காரை எனக்கு விற்ற பாரதி என்பவர் ஜெயலலிதா மேடத்திடம் பணியாற்றியர். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது அவரிடம் இருந்து நேரடியாகவே இந்த காரை பாரதி வாங்கிவிட்டார். ஜெயலலிதா காரை விற்பனை செய்யப் போகிறார் என்று தெரிந்ததும், அவரது நினைவாக வாங்கியுள்ளார்.
இப்போது பாரதிக்கு வயதாகிவிட்டது. எனவே, விற்பனை செய்ய முடிவெடுத்து என்னை அணுகினார். நாங்கள் இதனை மேம்படுத்தி விற்பனை செய்யப் போகிறோம். அதனால்தான், அதற்கான செலவையும் சேர்த்து கூடுதல் விலை வைத்து அறிவித்துள்ளோம்” என்றார்.
புல்லட் ராஜா அறிவிப்பு வெளியானதும் இது பற்றி பலர் சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்தார்கள். ‘ஜெயலலிதா அரசியல் வாரிசுகள் என்று இன்று சொல்லிக்கொள்பவர்களிடம் இல்லாத பணமா? அவர்கள் ஏன் ஜெயலலிதா நினைவாக இந்த காரை வாங்கி வைத்துக்கொள்ளவில்லை’ என்பதுதான் பலரது ஆதங்கமாக இருக்கிறது.
எழுத்தாளர் கீதாப்பிரியன் கார்த்திகேயன் வாசுதேவன் இது தொடர்பாக வெளியிட்டுளள பதிவில், “சொந்த கட்சியிலேயே ஜெயலலிதா காரை வாங்கி நினைவுச் சின்னமாக வைக்க நாதியில்லை பாருங்கள். புரட்சித்தலைவி, இதயதெய்வம் எல்லாம் வெறும் பேச்சுக்குத்தான். விரல்களில் பெரிய மோதிரத்தில், கழுத்து சங்கிலிப் பதக்கங்களில் பத்து பவுனில் அம்மா உருவத்தை பொறித்து வலம் வந்த பயனாளிகள் கூட யாரும் இந்த மகிழுந்தை சீந்தவில்லையே. ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஐந்தாண்டு காலம் கூட புகழ் நிலைக்கவில்லையே.
ஒரு காலத்தில் பெருமைமிகு ரதமாக திகழ்ந்த வாகனம். கருப்புப் பூனைப் படைகள் தொங்கி வந்த வாகனம். மூத்த அமைச்சர்கள் படை போட்டி போட்டு தொங்கி வந்த வாகனம். இந்த வாகனத்தின் டயர்கள் கூட வழிபாட்டுக்குரியதாக இருந்தது என்றால் மிகையில்லை.
அப்பேர் பட்ட சீருந்து இப்படி சீந்துவாரின்றி விற்பனைக்கு மார்கெட் ப்ளேஸிற்கு வந்து விட்ட அவலம். ஜெயலலிதா உயிருடன் இருக்கையில் இந்த காருக்கு எத்தனை மதிப்பு இருந்திருக்க வேண்டும்? அன்று இத்தனை சீப்படும் என யாராவது நினைத்திருப்பார்களா? இன்று அதிகாரம் இருக்கிறது என்று ஆடும் யாருக்கும் இந்த நிலைமைதான் கதி” என்று பதிவிட்டுள்ளார்.
ஆம், ஜெயலலிதா கார் விற்பனை ஒரு வாழ்க்கை தத்துவத்தையும் பலருக்கும் சொல்லியுள்ளது.