இந்திய கிரிக்கெட்டின் புதிய சென்சேஷனாக மாறியிருக்கிறார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இப்போதைய சூழலில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு வீரருக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என்றால் அந்த வீர்ர் ஜெய்ஸ்வாலாகத்தான் இருப்பார். அந்த அளவுக்கு இந்திய டி20 அணியில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால்.
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் அணியில் இருந்து விலகியிருந்த காலத்தில், இந்தியாவுக்காக 16 போட்டிகளில் ஆடிய ஜெய்ஸ்வால், மொத்தம் 498 ரன்களைக் குவித்துள்ளார். அவர் எடுத்த ரன்களின் எண்ணிக்கையைவிட, 163.81 என்ற அவரது ஸ்டைக் ரேட்தான் இன்று கிரிக்கெட் உலகில் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால், முதல் 6 ஓவர்களிலேயே ஆவேசமாக அடித்து ஆடி ரன்களைக் குவித்து எதிரணியிடம் இருந்து இந்தியாவின் பக்கம் ஆட்டத்தை திருப்பி விடுகிறார்.
ஜெய்ஸ்வால் வருவதற்கு முன்பாக டி20 போட்டிகளில் இந்திய அணி முதல் 6 ஓவர்களைக் கொண்ட பவர் ப்ளேவில் ஒரு ஓவருக்கு சராசரியாக 7 ரன்களைத்தான் எடுத்துவந்தது. ஆனால் ஜெய்ஸ்வாலின் வருகைக்கு பிறகு பவர்ப்ளேவில் ஒரு ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் எடுத்து வருகிறது. குறைந்த பந்துகளில் நிறைய ரன்கள் என்ற ஜெய்ஸ்வாலின் கொள்கையே இதற்கு காரணமாக இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பதோனி என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஜெய்ஸ்வால். 2013-ம் ஆண்டில் 11 வயது சிறுவனாக கிரிக்கெட் கனவுகளுடன் மும்பைக்கு வந்த ஜெய்ஸ்வாலுக்கு, ஆரம்பத்தில் வாழ்க்கை கசப்பாகத்தான் இருந்த்து. முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு சாதாரண டெண்டில்தான் வசித்திருக்கிறார் ஜெய்ஸ்வால். பானி பூரி வியாபாரம் செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். தான் பானி பூரி விற்கும்போது, உடன் பயிற்சி செய்யும் மாணவர்கள் வந்தால் ஒளிந்துகொள்வாராம்.
ஒரு கட்டத்தில் ஜெய்ஸ்வாலின் பயிற்சியாளருக்கு இது தெரியவர, தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியிலேயே தங்கவைத்து அவருக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுத்துள்ளார். அதிலிருந்து ஜெய்ஸ்வாலுக்கு எல்லாமே ஏறுமுகமாக இருந்துள்ளது.
19 வயதுக்கு உடபட்டோருக்கான உலகக் கோப்பையில் ஆடும் இந்திய அணியில் இடம் கிடைக்க, அதிலும் சாதித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து 2020-ல் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2.40 கோடி கொடுத்து ஜெய்ஸ்வாலை வாங்கியிருக்கிறது. வறுமையான வாழ்க்கைச் சூழலில் இருந்து ஒரே நாளில் யுடர்ன் அடித்து செல்வச் செழிப்பில் உயர்ந்திருக்கிறார் ஜெய்ஸ்வால்.
2020-ல் ஐபிஎல்லில் அறிமுகமானாலும், அவர் உச்சம் தொட்ட்து 2023 ஐபிஎல் தொடரில்தான். இத்தொடரில் 14 போட்டிகளில் ஆடிய ஜெய்ஸ்வால் மொத்தம் 625 ரன்களைக் குவிக்க, தேர்வாளர்களின் கவனம் இவர் மீது விழுந்த்து. இதன்பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த ஜெய்ஸ்வால், அதைக் கெட்டியாக பிடித்துக்கொண்டார்.
இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு இப்போது மிகப்பெரிய பஞ்சம் இருக்கிறது. முதல் 6 பேட்ஸ்மேன்களில் ஒருவர்கூட இட்துகை பேட்ஸ்மேன் இல்லை. இது அணியை பாதித்துக்கொண்டிருக்க, அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஜெய்வால் இந்திய அணிக்காக சாதிப்பார் என்று நம்புவோம்.