ஆகஸ்ட் 10-ம் தேதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகமான நாள். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், பிரியங்கா மோகன், சிவ்ராஜ் குமார் உள்ளிட்டோர் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் அன்று வெளியாகிறது. தமிழகத்தில் உள்ள மொத்த தியேட்டர்களிலும் ஜெயிலர் படத்தை திரையிட வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர் சங்கம் கேட்டுக்கொள்ளும் அளவுக்கு ஜெயிலருக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. ஆனால் ஆகஸ்ட் 10-ம் தேதி ஜெயிலர் திரைக்கு வருவதில் ஒருவருக்கு மட்டும் விருப்பமில்லை. ஜெயிலர் படத்தின் இயக்குநர்தான் அந்த நபர்.
ஜெயிலர் திரைக்கு வருவதில், அதன் இயக்குநர் நெல்சனுக்கு என்ன கஷ்டம் என்று கேட்கிறீர்களா?…
ஜெயிலர் திரைக்கு வருவதை நினைத்து கஷ்டப்படுவது நெல்சன் அல்ல. மலையாளத்தில் ‘ஜெயிலர் என்ற அதே பெயரில் படம் எடுத்துள்ள இயக்குநரான ‘சக்கீர் மடத்தில்’தான் அந்த இயக்குநர்.
தமிழில் ஜெயிலர் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே, கடந்த 2021-ம் ஆண்டில் மலையாளத்தில் ஜெயிலர் என்ற பெயரில் ஒரு படத்துக்கு பூஜை போட்டிருக்கிறார் சக்கீர் மடத்தில். தியான் ஸ்ரீநிவாசன், மனோஜ் கே.ஜெயன் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தையும் ஆகஸ்ட் 10-ம் தேதிதான் வெளியிட தீர்மானித்துள்ளனர். தனது கட்டுப்பாட்டில் உள்ள சிறையில் இருந்து தப்பித்துப் போகும் 4 குற்றவாளிகளை தேடிப் போகும் ஒரு ஜெயிலரின் கதைதான் இது. கடந்த 2 ஆண்டுகளாக சக்கீர் எடுத்துள்ள படத்துக்கு ரஜினியின் ஜெயிலரால் போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்பதே அவரது வருத்தத்துக்கு காரணம்.
இதுபற்றி கூறியுள்ள சக்கீர் மடத்தில், “நான் 2021-ம் ஆண்டிலேயே ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டேன். ஜெயிலர் என்று முதலில் டைட்டில் வைத்தது நான்தான். அதற்குப் பிறகுதான் ரஜினியின் படத்துக்கு அந்த டைட்டிலை வைத்திருக்கிறார்கள். அப்போதே அதற்கு நான் எனது எதிர்ப்பை தெரிவித்தேன். சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த், நெல்சன் உள்ளிட்டோருக்கு இதுபற்றி கடிதம் எழுதினேன். ஆனால் யாரும் என் எதிர்ப்பை கண்டுகொள்ளவில்லை.
என்னுடைய ஜெயிலர் படத்தை நான் இயக்கியதுடன் தயாரித்தும் இருக்கிறேன். இதற்காக என் வீடு, மற்றும் குடும்பத்துக்கு சொந்தமான நகைகளை அடகு வைத்திருக்கிறேன். 5 கோடி ரூபாயை இந்த படத்துக்காக செலவழித்திருக்கிறேன். இப்போது தமிழ் ஜெயிலர் திரைக்கு வரும் நாளிலேயே என் படத்தையும் வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். அப்படி வெளியிடாவிட்டால், ரஜினியின் படம் வெளியான பிறகு என் படத்துக்கு வரவேற்பு இருக்காது என்று விநியோகஸ்தர்கள் சொன்னதே இதற்கு காரணம்.
ஆனால் ஆகஸ்ட் 10-ம் தேதி ரஜினியின் ஜெயிலர் திரைக்கு வருவதால், என்னுடைய ஜெயிலர் படத்துக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதனால் எனக்கு தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேரு வழியில்லை.
பிறமொழி படங்கள் கேரளாவில் ரிலீஸ் ஆவதால், மலையாள திரையுலகின் கழுத்து நெரிக்கப்படுகிறது. இதைக் கண்டித்து கேரள பிலிம் சேம்பர் முன்பு நான் தனிநபராக போராட திட்டமிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.