இலங்கையில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. மகிந்த ராஜபக்ச பதவி விலகி ரணில் விக்ரமசிங்க பிரதமரானதும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பின்னரும் நாளுக்கு நாள் நிலமை மேலும் மேலும் மோசமாகிக்கொண்டேதான் வருகிறது. அரசியல் ஸ்திரமின்மை தொடர்கிறது. எனவே, நிறுவனங்கள் மூடப்படுவதும் மக்கள் உணவின்றி தவிப்பதும்கூட தொடர்கிறது. இந்நிலையில், இதை மேலும் மோசமாக்கும் ஒரு காரியத்தை செய்துள்ளது, இலங்கை. ரஷ்யாவின் சர்வதேச பயணிகள் விமானத்தை கொழும்பில் தடுத்து நிறுத்தி வைத்துள்ளது!
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சமீபத்தில், “இலங்கையின் தற்போதைய அன்னியச் செலாவணி கையிருப்பு பூஜ்ஜியம். இந்த பொருளாதார சிக்கலைத் தீர்க்க பல நாடுகளிடமும் உதவி கோரியுள்ளோம். அந்நாடுகளிடம் இருந்து நிதி, கடனுதவி கிடைக்காவிட்டால் இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறிதான். தற்போது கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு அக்டோபர் வரை சமாளிக்க முடியும். உரம் இல்லாததால் விவசாயம் முடங்கியுள்ளது. எனவே, அக்டோபருக்கு பிறகு நிலைமை இன்னும் மோசமடையும். மக்கள் 2 வேளை சாப்பிடும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று தெரிவித்திருந்தார்.
ரணில் குறிப்பிட்ட, இலங்கை நிதி உதவி கோரியுள்ள நாடுகளில் ஒன்று ரஷ்யா. இந்நிலையில்தான், உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யாவுடன் கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கை மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளது உலகளவில் அரசியல் நோக்கர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த ஏரோபுளோட் நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்.யூ-288 என்ற விமானம் ஜூன் 2-ம் தேதி ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருந்து புறப்பட்டு இலங்கை தலைநகர் கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அன்றே அந்த விமானம் 191 பயணிகள், 13 பணியாளர்களுடன் மாஸ்கோ நோக்கி திரும்ப வேண்டும். ஆனால், கொழும்பு வணிக நீதிமன்றம் வழங்கிய ஒரு தடை உத்தரவால் எஸ்.யூ.-288 விமானம் ரஷ்யா திரும்ப அனுமதிக்கப்படாமல் கொழும்பில் தடுத்து நிறுத்தப்பட்டது.
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சேலேஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடட் என்ற நிறுவனம், தங்களுக்கும் ஏரோபுளோட் நிறுவனத்திற்கும் இடையில் வழக்கொன்று உள்ளது என்றும், எனவே எஸ்.யூ.-288 விமானத்தை இலங்கையிலிருந்து வெளியேற தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணையில்தான் கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க, ரஷ்யாவின் எஸ்.யூ.-288 விமானம் ஜூன் 16-ம் தேதி வரை இலங்கையிலிருந்து வெளியேற தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த தடையால் எஸ்.யூ.-288 விமானம் மட்டுமல்ல அதில் பயணம் செய்ய இருந்த 191 பயணிகள் மற்றும் 13 விமான பணியாளர்களுக்கும் இலங்கையை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 191 பயணிகள், 13 பணியாளர்களை தடை விலக்கப்படும்வரை ஹோட்டல்களில் தங்க வைக்கும் வகையில் ஏரோபுளோட் நிறுவனத்திற்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
இந்த காரணங்களை குறிப்பிட்டு, தமது விமானத்திற்கு விதிக்கப்பட்டுள்ள இடைகால தடையுத்தரவை ரத்து செய்யக்கோரி, ரஷ்ய விமான நிறுவனம் மனு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனுவை உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் 8-ம் தேதி விசாரிக்க கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஒரு சர்வதேச விவகாரத்தில் கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் இவ்வளவு பிடிவாதத்துடன் இருக்கிறது என்றால், இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சகமும் ‘நீதிமன்றத்தின் முடிவை எதிர்பார்த்துள்ளோம்’ என்று ரஷ்யாவுக்கு பதிலளித்து ஒதுங்கிக்கொண்டுள்ளது.
சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் ரஷ்யா – இலங்கை இரு தரப்பு ஒப்பந்தங்கள் அடிப்படையில் சர்வதேச விமானங்கள் இலங்கையில் தரையிறங்கவும் வெளியேறவும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க இலங்கை அரசு உறுதி பூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்படி, இலங்கையில் தரையிறக்கப்படும் பிற நாட்டு விமானங்கள் மீண்டும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க இலங்கை சிவில் விமான சேவை சபைக்கு அதிகாரம் உள்ளது. ஆனாலும், இலங்கை வெளிவிவகாரத்துறை இந்த விவகாரத்தில், பட்டும் படாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தால் ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகேவை, ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் அழைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
ஆனாலும், கொழும்பு வணிக மேல் நீதிமன்றம், இலங்கை வெளிவிவகார அமைச்சகம் இரண்டின் பிடிவாதத்தையும் உற்றுப் பார்க்கும்போது ரஷ்யாவுடன் ஒரு மோதலுக்கு இலங்கை தயாராகிவிட்டதோ என்றே யாருக்கும் எண்ணத் தோன்றும்.
இலங்கையின் இந்த நடவடிக்கை அந்நாட்டின் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கும் ஓரு செயல் என்று சர்வதேச கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்குள்ளும் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
எரிபொருள் வாங்குவதற்காக 500 மில்லியன் டாலரை ரஷ்யாவிடம் இலங்கை கடனாக கேட்டிருந்தது. இது இனி நடக்குமா என்பது சந்தேகம்தான். எல்லாவற்றையும்விட முக்கியமானது, இந்தியாவுக்கு வழங்குவது போல், குறைந்த விலையில் எரிபொருளை நேரடியாக இலங்கைக்கு விநியோகிக்க ரஷ்யா ஒப்புதல் தெரிவித்திருந்தது. அதுவும் பாதிக்கப்படும்.
அடுத்த 4 – 6 மாதத்திற்குள் 4 லட்சம் சுற்றுலாப் பயணிகள், ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ளனர் என முன்பதிவு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்சனையை அடுத்து, இலங்கைக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ள ஏரோபுளோட் நிறுவனம், கொழும்பு நகருக்கான விமான பயணச் சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கையும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இதனால், இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும். இலங்கையின் இன்னொரு முக்கிய வருமானமான தேயிலை ஏற்றுமதியும் கூட பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இது பற்றி, இலங்கை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை மனித பேரழிவாக மாற்றுவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள். ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் நாடு மேலும் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்க நேரிடும்” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.