No menu items!

வசூலைக் குவிக்கும் விக்ரம் – கமல் ஹேப்பி

வசூலைக் குவிக்கும் விக்ரம் – கமல் ஹேப்பி

கமல்ஹாஸன், நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் மீடியாவின் ஸ்பாட் லைட்டுக்குள் வந்திருக்கிறார். காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘விக்ரம்’

அரசியலில் கமலின் மக்கள் நீதி மய்யம் பெரும் வரவேற்பைப் பெற தவறியிருந்தாலும், சினிமாவில் அவரின் ’விக்ரம்’ ‘பாக்ஸ் ஆபிஸ் நிதி மய்யத்தில்’ பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

2018-ல் வெளிவந்த ’விஸ்வரூபம் -2’ படத்திற்கு பிறகு 4 ஆண்டுகள் கமலுக்கு மிக நீண்ட இடைவெளி ஏற்பட்டது. தற்போது 232-வது திரைப்படமாக ’விக்ரம்’ ஜூன் 3-ம் தேதி வெளியானது.

கமல் நடித்த ‘இந்தியன்’ மற்றும் ‘தசாவதாரம்’ ஆகிய 2 படங்கள் அவரது சினிமா பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களாக பார்க்கப்படுகின்றன. இவை இரண்டையும் ‘விக்ரம்’ வெகுவிரைவில் முந்திவிடும் என்கிறார்கள்.. இதனால் கமல் மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்கிறார்கள்.

’விக்ரம்’ படத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட்’ வெளியிட, மளமளவென திரையரங்குகளின் எண்ணிக்கை உயர்ந்தது. ஏறக்குறைய 700-800 திரையரங்குகளில் இப்படம் வெளியாகி இருக்கிறது. கமல் நடித்த படங்களிலேயே மிக அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பஹத் ஃபாசில், விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என நட்சத்திர கூட்டணி இருந்ததால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதனால் கேரளாவிலும் 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு களைக்கட்டியது. அதேபோல் தெலுங்கு பேசும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஏறக்குறைய 400 திரையரங்குகளில் இப்படம் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கிலும் மிகப்பெரிய ஒபனிங்கை பெற்றிருக்கிறது ‘விக்ரம்’. கன்னடத்தில் 200-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் திரையிடப்பட்டிருப்பதால் நாளொன்றுக்கு 1100-க்கும் அதிகமான காட்சிகளுடன் ‘விக்ரம்’ கம்பீரமாக திரையிடப்பட்டு வருகிறது

இதனால் பான் – இந்தியா என்கிற கான்செப்ட்டில் இதுவரை ட்ரெண்டை உருவாக்கிய தெலுங்குப் படமான ‘ஆர் ஆர் ஆர்’ அடுத்து கன்னடப்படமான ‘கேஜிஎஃப்-2’ ஆகிய இரு படங்களுடன் மல்லுக்கட்டுகிறது தமிழ்ப்படமான ‘விக்ரம்’

திரையரங்குகளில் வெளியான அன்றே 32 கோடி ரூபாயை விக்ரம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் 21 கோடி ரூபாய் தமிழகத்தில் இருந்து மட்டும் வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் 5 கோடியும், கர்நாடகாவில் 3.4 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 1.9 கோடியும் வசூலானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக படம் வெளியாகும் நாளில் அதிக முன்பதிவு இருக்கும். படம் வெளியாகி அதன் விமர்சனங்கள் வெளியானதும் சில நேரங்களில் முன்பதிவு சட்டென்று குறையும். ஆனால் விக்ரம் படத்திற்கு இரண்டாம் நாளும் முன்பதிவு அதிகரித்து இருக்கிறது.

இப்படத்தின் வெற்றியால் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும், தமிழ் திரைப்பட ரசிகர்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜை கொண்டாடி வருகின்றனர். வழக்கமாக கமல் படங்களில் கதையின் கருவைத் தாண்டி அறிவுஜீவித்தனமாக நிறைய விஷயங்கள் புகுத்தப்பட்டு இருக்கும். ஆனால் இப்படத்தில் அப்படி எதுவும் இல்லை. கமல் அதிக தலையிட்டு இருக்க மாட்டார். அதனால்தான் இப்படியொரு கமர்ஷியல் படத்தை கொடுக்க முடிந்திருக்கிறது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இப்படத்தில் கமலுக்கு ஜோடி இல்லை. டூயட் இல்லை. வயதைக் குறைத்து காட்டும் மேக்கப், விக் சமாச்சாரங்கள் எதுவுமில்லை. 1987-ல் ப்ளாக் ஸ்குவாட்டின் கமாண்டர் தற்போது எப்படி இருப்பாரோ அதே வயதிற்கான தோற்றம், மானரிஸம், சென்டிமெண்ட்டை மட்டுமே வைத்திருப்பது விக்ரம் கதாபாத்திரத்திற்கான பலம்.

இதைப் பார்த்து ரஜினியும் இப்படி நடிக்கலாமே என்ற கமெண்ட்டையும் திரையரங்குகளில் கேட்க முடிந்தது.

இந்த வார இறுதியில் ‘விக்ரம்’ படத்தின் தோராய வசூலைத் தாண்டி, உண்மையான வசூல் நிலவரத்தைத் தெரிந்து கொள்ள முடியும். அநேகமாக கமலுக்கு இந்த ஆண்டு செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பமாக இருப்பது உறுதி. அதேபோல் இந்தாண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலைக் குவித்திருக்கும் படமாகவும் அமைய வாய்ப்புகள் அதிகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...