No menu items!

எவரெஸ்ட் மசாலா ஆபத்தா? – தடை விதித்த மூன்று நாடுகள்!

எவரெஸ்ட் மசாலா ஆபத்தா? – தடை விதித்த மூன்று நாடுகள்!

இந்திய நகரங்களில் பெரும்பாலான குடும்பங்களில் இன்று மிளகாய், மஞ்சள், தனியா என்று மசாலா பொருட்களை வாங்கி காயவைத்து அரைக்கும் பழக்கம் காணாமல் போய் வருகிறது. சாம்பார் மசாலா, பிஷ் கறி மசாலா, சிக்கன் ப்ரை மசாலா தூள், மஞ்சள் தூள் என்று எல்லாவற்றையும் இன்ஸ்டண்டாக வாங்கி பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துள்ளது. அப்படி மக்கள் அதிகமாக வாங்கும் மசாலா பிராண்டில் ஒன்றான எவரெஸ்ட் மசாலாவுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டிருப்பது பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வாடிலால் பாய் ஷா என்பவரால் 1967-ம் ஆண்டு 200 சதுரடி இடத்தில் தொடங்கபட்ட சிறு நிறுவனம்தான் எவரெஸ்ட் மசாலா. ஆரம்பத்தில் கரம் மசாலா, டீ மசாலா, பால் மசாலா ஆகிய 3 மசாலாக்களைத்தான் இந்த நிறுவனம் தயாரித்தது. இதன் சுவை மக்களுக்கு பிடித்துப் போக கொஞ்சம் கொஞ்சமாக மற்ற வகை மசாலாக்களையும் இந்நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியது.

காலப்போக்கில் இந்தியர்கள் இன்ஸ்டண்ட் மசாலாக்களுக்கு தங்களை பழக்கிக்கொள்ள, எவரெஸ்ட் மசாலாவின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க உள்ள மக்கள் எவரெஸ்ட் மசாலாவை வாங்கி பயன்படுத்தத் தொடங்கினர். இந்தியாவின் சூப்பர் பிராண்ட் என்ற விருதை 8 முறை இந்த நிறுவனம் வென்றது.

அதேபோல் 1919-ம் ஆண்டில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் எம்டிஎச் மசாலா. இந்த நிறுவனம் இன்று 62 வகையான மசாலா பொருட்களை தயாரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த நிறுவனத்தின் மசாலா பொருட்களுக்கு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளது.

எல்லாம் சரியாக சென்றுகொண்டிருந்த நேரத்தில்தான் இந்த 2 நிறுவன்ங்களின் மசாலா பொருட்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் எம்டிஹெச் (MDH) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மூன்று மசாலாப் பொடிகள் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் ஒரு மசாலாப் பொடியின் விற்பனையை ஹாங்காங் தடை செய்தது. இந்த மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு அதிக அளவில் கலந்திருப்பதால் அதற்கு தடை விதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அது என்ன எத்திலின் ஆக்சைட்?

எத்திலீன் ஆக்சைடு என்பது தொழில் துறையில் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரு ரசாயனம். நிறமில்லாத இந்த ரசாயனம் நல்ல வாசனையுடன் இருக்கும். மருத்துவக் கருவிகளை சுத்தம் செய்வதற்கு இதை அதிகம் பயன்படுத்துவார்கள். பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது. உணவுப் பொருட்களில் ஃபங்கஸ் (பூசாணம்) பிடிக்கால பார்த்துக்கொள்ளவும் மிகக் குறைந்த அளவில் அதைச் சிலர் பயன்படுத்துவார்கள்.

இந்த ரசாயனத்தை குறிப்பிட்ட அளவுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. அதனால்தான் அந்த பொருட்களுக்கு ஹாங்காங் முதலில் தடை விதித்த்து.

எம்டிஎச் மசாலா மெட்ராஸ் கறி பவுடர், எம்டிஎச் சாம்பார் மசாலா, எம்டிஎச் கறி பவுடர், எவரெஸ்ட் பிஷ் கறி மசாலா ஆகியவை தடை விதிக்கப்பட்ட முக்கிய மசாலா பொருட்கள்.

எவரெஸ்ட் நிறுவனம் மறுப்பு:

தங்கள் மசாலாப் பொருட்கள் மீதான இந்த குற்றச்சாட்டை எவரெஸ்ட் நிறுவனம் உடனடியாக மறுத்த்த்து. தங்கள் தயாரிப்புகளால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அந்த நிறுவனம் அடித்துச் சொன்னது. ஆனால் மற்றொரு நிறுவனமான எம்டிஎச், இதைப்பற்றி வாயத் திறக்கவில்லை.

இது நடந்த சில நாட்களிலேயே, எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் குழம்பு மசாலாவில் எத்திலின் ஆக்சைட் அதிக அளவில் இருப்பதாக கூறிய சிங்கப்பூர் அரசும் அதைத் திருப்பி அனுப்பி அனுப்பியது. இப்போது நேளத்தின் உணவு பாதுகாப்பு அமைப்பான Nepal’s Department of Food Technology and Quality Control என்ற அமைப்புதான் இப்போது எவரெஸ்ட் மசாலா பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. அத்துடன் நேபாளத்தில் உள்ள கடைகளில் அவற்றை விற்கவும் தடை விதித்துள்ளது.

எவரெஸ்ட் மற்றும் எம்டிஎச் மசாலா பொருட்களில் அதிக அளவு எத்திலின் ஆக்சைட் கலந்திருப்பதாக இப்போது அந்த நாடும் குற்றம் சாட்டியுள்ளது.

“இந்த 2 மாசாலா பொருட்களையும் தீவிரமாக ஆய்வு செய்ய பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பியுள்ளோம். பரிசோதனை முடிவுகள் வரும் வரை இந்த தடை தொடரும்” என்று நேபாளத்தின் உணவுப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் செய்தித் தொடர்பாளரான மோகன் கிருஷ்ண மகராஜன் தெரிவித்துள்ளார்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் எந்த அளவுக்கு எத்திலின் ஆக்சைட் பயன்படுத்தலாம் என்பதில் ஒவ்வொரு நாளும் ஒரு கணக்கு வைத்துள்ளது. அதன்படி இந்தியாவுக்கு சரியாக இருக்கும் அளவு, மற்ற நாடுகளுக்கு ஆபத்தானதாக தெரியலாம். அதன்படி ஹாங்காங், சிங்கப்பூர், நேபாளம் ஆகிய நாடுகள் அவற்றுக்கு தடை விதித்திருக்கலாம் என்று இந்திய அரசுத் தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடையால் இந்தியாவின் மொத்த மசாலா ஏற்றுமதியில் 1 சதவீதம் அளவுக்குதான் பாதிப்பு ஏற்படும் என்றும் அரசு தரப்பு தெரிவிக்கிறது.

ஆனால் பிரச்சினை இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டதா என்பதல்ல. மற்ற நாடுகள் இந்த மசாலாவால் மக்களின் உயிருக்கு ஆபத்து என்று சொல்லும்போது, இந்தியா மட்டும் இந்த அளவை எப்படி ஏற்றுக்கொள்கிறது என்பதுதான்.

மசாலாவில் அதிக அளவுக்கு எத்திலின் ஆக்சைட் கலந்திருப்பதால் இந்தியர்களுக்கும் புற்றுநோய் வர வாய்ப்புகள் இருப்பது உண்மைதானா? அதை தடுக்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...