No menu items!

4, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு சரியா?  

4, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு சரியா?  

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் ஆணைப்படி 4, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாளை பின்பற்றி தேர்வு நடைபெறுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏன் எதிர்ப்பு?

‘அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இயக்கம்’ ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரியிடம் கேட்டோம்.

“இவ்வாறான தேர்வு நடைமுறை தமிழ்நாட்டின் தொடக்கக் கல்வித் துறையில் இதுவரை இல்லாத ஒன்றாகும். தற்போது வரை ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் அந்தந்தப் பள்ளிகள் அளவிலேயே நடைபெற்று வந்தன. அந்தந்த வகுப்புகளுக்கான பாடப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் மற்றும் பாடப்பொருள் சார்ந்த வினாக்களைக் கொண்டு வகுப்பு ஆசிரியர்களே வினாக்கள் தயாரித்து தேர்வுகள் நடத்துவார்கள். இந்நடைமுறை மாணவர்களின் திறனை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களே மதிப்பீடு செய்யும் முறையாக அமைந்திருந்தது. இதைத்தான் இப்போது மாற்றி இருக்கிறார்கள்.

su. uma mageswari
சு. உமா மகேஸ்வரி

தேசியக் கல்விக் கொள்கை 2020இன் முன்னோட்டமாக முந்தைய ஆட்சி காலத்தில் 13.09.2019இல் ஒரு அரசாணை வந்தது. அதில் 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வலியுறுத்தப்பட்டிருந்தது. இக்கொள்கை தவறானது, ஏற்க இயலாதது என நாட்டின் புகழ்பெற்ற கல்வியாளர்கள், அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தும் அதைப் பொருட்படுத்தாமல் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசு தீவிரமாக இருந்தது.  ஆனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்து குரல் எழுப்ப, எதிர்ப்பு வலுக்கவே அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது.

அன்று அதனை எதிர்த்தவர்கள்தான் இன்று ஆளுங்கட்சி… ஆனால், ஆச்சரியமாக இந்த கல்வியாண்டிலேயே அதுவும் 4, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டுத் தேர்வையே பொதுத் தேர்வு போல் நடத்துகின்றனர்.

குருவித் தலையில் பனங்காய்கள் வைத்த கதைதான். போதுமான அளவு ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் தற்போது மாணவர்களுக்கு கற்பித்தல் பணி முழுமையாக நடைபெறவில்லை என்றுதான் கூறவேண்டும். மேலும், வாக்காளர் சேர்க்கை – நீக்கம், சுகாதாரத் துறைப் பணிகள் என கற்பித்தல் அல்லாத பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேறு ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். இதனாலும் எங்கேயும் பாடங்களை முழுமையாக நடத்தி முடித்திருக்க மாட்டார்கள்.

இன்னொரு பக்கம், இரண்டு ஆண்டுகள் கொரோனா காலகட்டம் முடிந்து இந்த கல்வியாண்டில்தான் மாணவர்கள் முழு நேர நேரடி வகுப்புக்கு வந்துள்ளார்கள். அதுவும் 4ஆம் வகுப்பு மாணவர்கள் 1ஆம் வகுப்புக்குப் பின்னர் இப்போதுதான் பள்ளியை பார்க்கிறார்கள். அவர்கள் இன்னும் முழுமையாக தயாராகி இருக்க மாட்டார்கள். அதற்குள் நான்கு பக்க கேள்வித் தாளை அவர்களிடம் கொடுத்து, படித்து விடையளிக்கும்படி கூறுவது அதிகப்படியானது. மாணவர்களுக்கு தேவையான கால அவகாசத்தை அளிக்காமல் பொதுத்தேர்வு என்னும் பெயரில் கல்வி குறித்த அச்சத்தை அவர்களிடையே கூட்டும் செயலாகத்தான் இது இருக்கும்.

கல்வி உரிமைச் சட்டம் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்க வேண்டும்  என்று கூறுகிறது. எனவே, இந்த தேர்வு முடிவுகளை வைத்து யாரையும் ‘பெயில்’ ஆக்க மாட்டார்கள். நிச்சயம் ‘ஆல் பாஸ்’தான். ஆனாலும், 10, 11, 12ஆம் வகுப்புகளைப் போலவே  4, 5ஆம்  வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்தும் முடிவு குழந்தைகளுக்குப் பெரிய பாரமாகவே இருக்கும்.

மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் கொண்டு 4, 5ஆம் வகுப்புகளுக்கு போட்டித் தேர்வு நடத்துவது போல செய்வது, பிஞ்சு மனங்களில் தேர்வு பயத்தையும் படிப்பின் மீது தீராத மனக்கசப்பையும்தான் ஏற்படுத்தும். அது இடைநிற்றலை அதிகரிக்கும். சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ளோரின் முதலும் கடைசியுமான புகலிடமாக அரசுப் பள்ளிகளே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை என்பது கிட்டத்தட்ட நீட் போல்தான். ஆசிரியர்களை நம்பாமல் அவர்களைக் கண்காணிக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது எல்லாவற்றையும் பார்க்கும்போது நீட் தேர்வு மாதிரிதான் நடைமுறையிலும் உள்ளது. நீட் வேண்டாம் என்று சட்டம் இயற்றி போராடிக்கொண்டு இருக்கும் ஒரு அரசு, குழந்தைகளுக்கு நீட் மாதிரியான ஒரு பொதுத் தேர்வை நடத்தவேண்டிய தேவை என்ன?

ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020ஐ கடுமையாக எதிர்க்கும் தற்போதைய திமுக அரசு, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க நிபுணர் குழுவை அமைத்து, அதற்கான பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளது. இச்சூழலில் தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள பொதுத் தேர்வு முறையை 4, 5 வகுப்புகளுக்கு கல்வியாண்டின் முதல் பருவத் தேர்விலேயே  மாநில பள்ளிக் கல்வித்துறை கொண்டு வருவது என்பது முற்றிலும் முரண்பாடாக உள்ளது. இது துறை அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் தெரிந்துதான் நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது” என்கிறார் உமா மகேஸ்வரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...