No menu items!

ஐஎன்எஸ் விக்ராந்த்: மிதக்கும் கடற்படைத் தளம்

ஐஎன்எஸ் விக்ராந்த்: மிதக்கும் கடற்படைத் தளம்

“இது வெறும் ஒரு கப்பல் அல்ல. இந்தியாவின் மிதக்கும் கடற்படை தளம். இன்னும் சொல்லப்போனால் மிதக்கும் நகரம். பாதுகாப்புத் துறையில் நம்மால் தன்னிறைவு பெற முடியும் என்ற நம்பிக்கைக்கு இந்த போர்க்கப்பல் ஒரு உதாரணம்” என்று ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை உச்சி முகர்ந்து பாராட்டியுள்ளார் பிரதமர் மோடி.

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில்தான் இப்படி பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த நிகழ்ச்சியில் மேலும் பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இந்த கப்பலில் பயன்படுத்தும் மின்சாரத்தை வைத்து 5 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கலாம். 2 கால்பந்து மைதானங்களின் பரப்பளவைக் கொண்ட இந்த விமானம்தாங்கிக் கப்பலில் பயன்படுத்தப்பட்டுள்ள கேபிள்களின் நீளம் காசியில் இருந்து கொச்சி வரை நீளும். நம் நாட்டு பொறியளர்களின் கடுமையான உழைப்புக்கும், திறமைக்கும் உதாரணமாக இந்த கப்பல் விளங்கியுள்ளது” என்று பேசியுள்ளார்.

பிரதமரால் இந்த அளவுக்கு புகழப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்தைப் பற்றி மேலும் சில விஷயங்கள்….

முன்பெல்லாம் ரஷ்யா மற்றும் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல்களையே போர்களில் இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில் முதல் முறையாக விக்ராந்த் கப்பலை இந்தியா தயாரித்துள்ளது. இந்த போர்க்கப்பலை தயாரித்ததன் மூலம் இத்தகைய கப்பல்களை தயாரிக்கும் ஆற்றல் வாய்ந்த 5 நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உருவெடுத்துள்ளது.

கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) நிறுவனத்தால் ஐஎன்எஸ் விக்ராந்த் கட்டப்பட்டது.

இந்தியக் கப்பல் படைக்காக 1961-ம் ஆண்டுமுதல் 1997-ம் ஆண்டுவரை பயன்படுத்தப்பட்ட விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த். இங்கிலாந்திடம் இருந்து வாங்கிய இக்கப்பல் 1971-ம் ஆண்டில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரில் முக்கிய பங்கு வகித்தது. அந்த போர்க்கப்பலின் நினைவாக இந்தியாவில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட IAC-1 போர்க் கப்பலுக்கு ஐஎன்எஸ் விக்ராந்த் என பெயரிடப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை உருவாக்க 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

40 ஆயிரம் டன் எடைகொண்ட இந்த போர்க்கப்பல், 34 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை சுமந்து செல்லும் ஆற்றல் வாய்ந்ததாக உள்ளது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட மிக் 29 கே வகை போர் விமானங்கள், கமோவ்-31 வகை ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை இந்த போர்க்கப்பலில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

23 ஆயிரம் டன் ஸ்டீல், 2,500 கிலோமீட்டர் நீள மின்சார கேபிள்கள், 150 கிலோமீட்டர் நீள பைப்லைன்கள், 2,000 வால்வுகள் உள்ளிட்டவை ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை உருவாக்க பயன்படுத்தப்பட்டுள்ளன.

2,300 கம்பார்ட்மென்ட்களைக் கொண்ட இந்த விமானம்தாங்கி கப்பலில் 1,500 கப்பல்படை வீரர்கள் பயணிக்க முடியும்.

இந்த விமானம் தாங்கி கப்பலைக் கட்ட 5 ஆண்டுகள் ஆகியுள்ளன.

இந்த கப்பலை உருவாக்கும் முயற்சியில் சுமார் 50 நிறுவனங்களைச் சேர்ந்த 2,000 பணியாளர்கள் தினந்தோறும் பணியாற்றினர். மறைமுகமாக இந்த கப்பலுக்கான பணிகளில் 40 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்திய கப்பல்படையின் பணியில் ஈடுபடுத்தப்பட்டதும், இந்தியாவின் 2-வது விமானம்தாங்கி கப்பல் என்ற பெருமையையை ஐஎன்எஸ் விக்ராந்த் பெறும். இந்திய கப்பல்படையிடம் ஏற்கெனவே ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கி கப்பல் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...