சர்வதேச தூக்க தினம் மார்ச் 15-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ‘தூங்காதே தம்பி தூங்காதே…’ என்பதுபோன்ற பாடல்கள் தூக்கத்தை கண்டிக்கும் வகையில் இருந்தாலும், சரியான தூக்கமும் மனிதனுக்கு முக்கிய தேவை என்கிறார்கள் மருத்துவர்கள்.
நாளின்றுக்கு சராசரியாக 7 மணிநேர தூக்கமாவது இல்லாமல் இருந்தால் மன அழுத்தம், சர்க்கரை நோய் என பல நோய்கள் தாக்க வாய்ப்புகள் உண்டு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச தூக்க தினத்தை முன்னிட்டு, தூக்கத்தைப் பற்றிய சில முக்கிய செய்திகளைப் பார்ப்போம்.
எவ்வளவு நேரம் தூங்கவேண்டும்?
ஒவ்வொரு வயதிலும் ஒருவர் எவ்வளவு நேரம் தூங்கினால் அது உடலுக்கு நல்லது என்று மருத்துவர்கள் ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கிறார்கள். அதன்படி 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தினமும் 12 மணிநேரம் முதல் 16 மணிநேரம் வரை உறங்க வேண்டும். 1 முதல் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தினமும் 11 மணிநேரம் முதல் 14 மணிநேரம் வரை உறங்க வேண்டும்.
3 வயது முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தினமும் 10 முதல் 13 மணி நேரம் வரை உறங்கவேண்டும். 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 9 முதல் 12 மணிநேரம் வரை உறங்க வேண்டும். 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 8 முதல் 10 மணி நேரம் வரை உறங்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்கவேண்டும்.
இந்தியர்களை பாதிக்கும் தூக்கமின்மை:
இந்தியர்களிடையே தூக்கமின்மை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலத்துக்குப் பிறகு இந்தியர்களின் தூக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது. இந்தியர்களில் 30 சதவீதம் பேர் மிகக் குறைவான நேரமே தூங்குவதாக கடந்த வருடம் LocalCircles என்ற அமைப்பு நடத்திய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடெங்கிலும் உள்ள 309 மாவட்டங்களில் 39 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்றவர்களில் 21 சதவீதம் பேர் தாங்கள் தினமும் சராசரியாக 4 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக தெரிவித்துள்ளனர். 2 சதவீதம் பேர் மட்டுமே 8 மணிநேரம் முதல் 10 மணிநேரம் வரை தூங்குவதாக தெரிவித்துள்ளனர். அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவது, கொசுத் தொல்லை ஆகியவை தங்கள் தூக்கத்தை கெடுப்பதாக பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
துணையுடன் படுத்தால் தூக்கம் வரும்
ஒருவர் தனது படுக்கையில் தனியாக படுத்து தூங்கும்போது நன்றாக தூக்கம் வருகிறதா அல்லது மனைவி, நண்பன், குழந்தை என்று ஏதாவது ஒரு துணையுடன் சேர்ந்து படுத்து தூங்கும்போது நன்றாக தூக்கம் வருகிறதா என்ற ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியது.
இதில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கல் தனியாக படுப்பதைவிட துணையுடன் படுக்கும்போதுதான் நன்றாக தூக்கம் வருகிறது என்று தெரிவித்துள்ளனர். தனியாக படுத்து தூங்குபவர்களைவிட துணையுடன் படுத்து தூங்குபவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருப்பதாகவும், அவர்கள் நீண்ட நேரம் தூங்குவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் ஒருவர் யாருடன் சேர்ந்து தூங்குகிறாரோ, அவருடனான உறவு நெருக்கமாவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிகமாக தூங்கும் நெதர்லாந்து மக்கள்
உலகிலேயே மிக அதிகமாக தூங்குவது நெதர்லாந்து மக்கள்தான் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த 77.05 சதவீதம் மக்கள் தினமும் 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்குவதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. நெதர்லாந்துக்கு அடுத்த இடத்தில் டென்மார்க் நாடு உள்ளது. அந்நாட்டில் 76.17சதவீதம் மக்கள் நிம்மதியான தூக்கத்தை பெறுகிறார்கள். இப்பட்டியலில் சுவீடன் நாட்டுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. அந்நாட்டின் 75.18 சதவீத மக்கள் தினசரி குறைந்தது 7 மணிநேரமாவது தூங்குகிறார்களாம்.
குறைவாக தூங்கும் கத்தார்
மக்கள் மிகக் குறைவான நேரம் தூங்கும் நாடுகளின் பட்டியலில் கத்தார் முதல் இடத்தில் இருக்கிறது. அந்நாட்டு மக்களில் 42.64 சதவீதம் பேர்தான் தினசரி 7 மணிநேரமாவது தூங்குகிறார்களாம். இந்த பட்டியலில் 43.42 சதவீத்த்துடன் ஈரான் மக்கள் 2-வது இடத்திலும், 45.45 சதவீத்த்துடன் தென் கொரிய மக்கள் 3-வது இடத்திலும் உள்ளனர்.