பிரபல ஹேர்ஸ்டைலிஸ்டான ஆலிம் ஹகீமுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருப்பது போன்ற புகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் பரவி இருக்கிறது. இதைத்தொடர்ந்து ‘தலைவர் 170’ படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஆலிம் ஹகீம்தான் ஹேர் டிரெஸ்ஸிங் செய்யப்போகிறார் என்ற தகவல் பரவி இருக்கிறது. இந்தியாவின் நம்பர் ஒன் ஹேர்டிரெஸ்ஸராக கருதப்படும் ஆலிம் ஹகீம், ‘தலைவர் 170’ படத்தில் இணைந்திருப்பது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
யார் இந்த ஆலிம் ஹகீம்?
விராட் கோலி, மகேந்திர சிங் தோனி மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரது ஹேர்ஸ்டைலை வடிவமைக்கும் இந்தியாவின் நம்பர் 1 ஹேர்ஸ்டைலிஸ்ட்தான் ஆலிம் ஹகீம். இவர் ஹகீம்ஸ் ஆலிம் சலூன் செயின் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
மும்பை நகரில் 1974-ம் ஆண்டு பிறந்தவர் ஆலிம் ஹகீம். இவரது அப்பா ஒரு சிறந்த முடிதிருத்துநராக இருந்தார். அந்த காலத்திலேயே அவர் அமிதாப் பச்சனுக்கு முடி வெட்டியவர். ஆனால் பிரபலமாக இருந்தாலும் பணம் சம்பாதிக்கவில்லை. ஆலிமுக்கு 9 வயதாக இருந்தபோதே அவரது அப்பா இறந்துபோக குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறு வயதிலேயே தனது அம்மாவின் மேற்பார்வையில் முடிதிருத்தும் தொழிலை செய்யத் தொடங்கினார் ஆலிம். முடிதிருத்தும் தொழிலைச் செய்துகொண்டே படிப்பையும் தொடர்ந்த அவர், ஒரு கட்டத்தில் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டு முழுக்க முழுக்க முடிதிருத்தும் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்.
தன் சிறுவயது போராட்டங்களைப் பற்றி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ள ஆலிம், “என் அப்பா இறந்தபோது அவரது வங்கிக்கணக்கில் மொத்தமே 13 ரூபாய்தான் இருந்தது. இதனால் எங்கள் குடும்பம் வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டது. மிகவும் கஷ்டப்பட்டு கல்லூரி வரை படித்தேன்.
கல்லூரியில் படிக்கும்போது எனது கனவு, என் அப்பாவைப் போன்று ஒரு சிறந்த முடிதிருத்துநராக வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. இதை என் நண்பர்களிடம் சொன்னபோது அவர்கள் சிரித்தனர். முடி திருத்துவதை ஒரு கேவலமான தொழிலாக பார்த்தனர். ஆனால் நான் என் கனவை மாற்றிக்கொள்ளவில்லை. கல்லூரியில் முதலாமாண்டு முடித்த உடனேயே, படிப்பை விட்டு முழுநேரமாக முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட திட்டமிட்டேன். என் அப்பாவின் பெயரையும் என் பெயரையும் இணைத்து ஹக்கீம்ஸ் ஆலிம் என்ற சலூனை தொடங்கினேன்” என்கிறார்.
ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட அலீமின் சலூன், காலப்போக்கில் மும்பையில் பெயர்பெற்ற சலூனாக மாறியது. நகரில் உள்ள இளைஞர்கள் பலரும் அவரிடம் முடிவெட்டிக்கொள்ள விரும்பினர். இதைத்தொடர்ந்து பாலிவுட்டிலும் அவரது புகழ் பரவியது. இன்று இவரது சலூனில் ஒருவர் முடிவெட்டிக்கொள்ள 2,400 ரூபாய் செலவாகும் (ஆலிம் கையால் முடிவெட்டிக் கொள்ள வேண்டுமென்றால் இன்னும் அதிகம் செலவாகும்.) ஆலீமின் இப்போதைய சொத்து மதிப்பு 22 மில்லியன் டாலர்கள்.
ஷாகித் கபூர், பிரபாஸ், சஞ்சய் த்த், அர்ஜுன் கபூர் போன்ற பல பாலிவுட் நட்சத்திரங்களுக்கும், தோனி, விராட் கோலி போன்ற கிரிக்கெட் பிரபலங்களுக்கும் அவர் ஹேர் டிரெஸ்ஸராக இருக்கிறார். பாஹுபலி படத்தில் பிரபாஸுக்கு ஹேர்ஸ்டைல் செய்ததுடன், ரோபோ படத்தில் ரஜினிக்கு இவர் ஹேர் ஸடைல் செய்துள்ளார். இப்போது ‘தலைவர் 170’ படத்துக்கும் ரஜினிக்கான ஹேர்ஸ்டைலை பார்த்துக்கொள்கிறார்.