No menu items!

டைரக்‌ஷன்னா வீட்ல துரத்திடுவாங்க: ’ராக்கெட்ரி’ மாதவன் ஓபன் டாக்

டைரக்‌ஷன்னா வீட்ல துரத்திடுவாங்க: ’ராக்கெட்ரி’ மாதவன் ஓபன் டாக்

‘விக்ரம் வேதா’ படம் வெளியாகி வெற்றிப் பெற்றவுடன் ரிலாக்ஸ் மூடில் இருந்த மாதவனை, நண்பர் ஒருவர் அடுத்த என்ன பண்ண போகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். ‘இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை’ என்ற மாதவனிடம் ‘ஒரு சயின்டிஸ்ட். அவருக்கும் மாலத்தீவைச் சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு. பிரச்னை ஆகுது. கடைசியில் உண்மை தெரியவருது’ என்று அந்த நண்பர் ஒன்லைன் ஒன்றை சொல்ல, மாதவனுக்கு பொறி தட்டியிருக்கிறது.

‘அடடா ஒரு ஜேம்ஸ்பாண்ட் கதைக்கான சமாச்சாரம் இதுல இருக்கே’ என்ற ஆர்வமாகி தொடர்ந்து கேட்டிருக்கிறார். அப்போது அந்த நண்பர் சொன்ன ஒன்லைன் தான் மாதவன் தற்போது இயக்கி நடித்திருக்கும் ‘ராக்கெட்ரி’ படத்தின் விதை.

ராக்கெட், சயின்டிஸ்ட், மாலத்தீவு பெண் என கமர்ஷியல் கதைக்கான கனவோடு போனவருக்கு, தூக்கி வாரி போட்டது இஸ்ரோவைச் சேர்ந்த விஞ்ஞானியான நம்பி நாராயணனின் உண்மைக் கதை.

நம்பி நாராயணைனைச் சந்தித்த பிறகு அடுத்த இரண்டரை வருடங்கள் மாதவன் வேறெந்த படங்களிலும் நடிக்கவில்லை. ஜாலியாக நடிப்பதற்குத பதிலாக, பேப்பர் பேனாவுடன் நம்பி நாராயணனுடன் 7 மாதங்கள் செலவழித்து இருக்கிறார்.

அவ்வளவு நாட்கள் கழித்து ராக்கெட் சயின்ஸ் பற்றிய தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நம்பி நாராயணன். இதை எப்படி விடமுடியுமென, அதையும் உள்வாங்கிக் கொண்டு திரைக்கதையில் ராக்கெட் சயின்ஸை கலந்து இன்னும் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் மாதவன்.

ராக்கெட் எஞ்ஜின் படத்தில் இடம்பெறுவதால், அதை நம்பி நாராயணன் சொல்ல சொல்ல அதைக்கேட்டு ‘ராக்கெட்ரி’ படக்குழுவினர் ராக்கெட் எஞ்ஜினை உருவாக்கி இருக்கிறார்கள். அதேபோல் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டு, எட்டு மொழிகளில் வெளியாகும் வகையில் ராக்கெட்ரியை தயார் செய்திருக்கிறார் மாதவன். இப்படத்தில் நம்பி நாராயணனின் இருபது வயது, முப்பது வயது, அறுபது வயது தோற்றங்களுக்காக எந்தவிதமான ப்ரொதெஸ்ட்களையும் பயன்படுத்தவில்லை.

தனது பல்வரிசையை நிஜமாகவே மாற்றியிருக்கிறார் மாதவன். தலை முடியை வெள்ளையாக காட்டுவதற்காக 14 மணிநேரம் தலைமுடியில் கலர் சேஞ்ச் சொல்யூஷனுடன் தவமிருந்து இருக்கிறார். இந்திய சினிமாவில் இதுவரையில் பார்த்திராத ராக்கெட் சமாச்சாரங்களை அலசியிருக்கிறார்கள்.

இப்படி எக்கசக்க சமாச்சாரங்களை இழுத்துப் போட்டுக் கொண்டிருக்கும் மாதவன் மனம் திறந்து பேசுகையில், ’இதுவரைக்கும் நான் நடிக்கிற வேலையை மட்டும்தான் பார்த்திருக்கேன். ஜாலியா ஷூட்டிங்குக்கு வந்தால் என்ன சீன், என்ன டயலாக்னு கேட்டுட்டு நடிச்சிட்டு போயிடலாம். ஆனால் டைக்ரஷன்னு வந்ததும் பயம் வந்துடுச்சு. கதை திரைக்கதையை எழுதி முடிச்சிருந்தாலும், எப்படி எடுக்கப்போறோம்னு தெரியல. அமெரிக்காவுல இருந்த நண்பர் ஒருந்தர், நீ என்ன எடுக்கணும்னு நினைச்சீங்களோ அதை ஒரு சீன் ஆக எடுத்துப்பாருங்க. அப்புறம் உங்களுக்கே முடியுமா முடியாதான்னு தெரியுன்னு சொன்னார். அப்படிதான் டைரக்‌ஷனையும் ஆரம்பிச்சேன்’

‘ஏறக்குறைய இரண்டரை வருஷம் இந்த ப்ராஜெட்டுலேயே கழிச்சிருக்கேன். நான் டைரக்‌ஷன் பண்ணலாம்னு ஆசைப்பட்டாலும், என் மனைவி வீட்டை விட்டு துரத்திடுவாங்க. முதல்ல ஒரு சொந்த வீடு வேணும். பையன் காலேஜ் படிச்சு முடிக்கணும். அது முக்கியம்னு சொல்லிட்டாங்க’

‘இந்தப் படத்துல ஷாரூக்கான், சூர்யா ரெண்டு பேரும் நடிச்சிருக்காங்க. நான் இந்த கதையைப் பண்றேன்னு சொன்னப்ப, ஷாரூக்கான் வாழ்த்துகள் சொன்னார். நான் இந்த ப்ராஜெக்ட்ல கண்டிப்பா நடிக்கிறேன். ஒரு சீன் இருந்தாலும் ஓகே. இல்ல சும்மா வந்துட்டு போனாலும் சரி. நான் நடிக்கிறேன்னு சொன்னார். நானும் அதை சிரீயஸா எடுத்துக்கல்ல. பொதுவா நாம ஏதாவது பண்ணும்போது நம்மள உற்சாகப்படுத்த இப்படி சொல்றது வழக்கம். அதனால நான் அதை சிரீயஸா எடுத்துக்கல. என் மனைவிதான் அப்படியில்ல. அவங்களுக்கு நன்றியாவது சொல்லுங்க என்றார். ஷாரூக்கான் மேனேஜருக்கு தேங்க்ஸ்னு மெஸேஜ் அனுப்பினேன். ஆனால் அவங்களோ சார் கால்ஷீட் எப்ப வேணும்னு கேட்க சொன்னார்னு சொல்ல, எனக்கு ஷாக். சொன்ன மாதிரி ஷாரூக் வந்தார். அருமையா நடிச்சு கொடுத்தார். இதற்காக ஒரு பைசா கூட அவர் வாங்கல.

சூர்யாவும் அப்படிதான். அவராக முன்வந்து நடிச்சு கொடுத்தார். மும்பைக்கு அவரோட டீம் வந்துட்டாங்க. ப்ளைட் டிக்கெட்டுக்கு கூட காசு வாங்கல.’’ என்று நன்றி தெரிவிக்கும் வகையில் புன்னகைக்கிறார் மாதவன்.

படம் : ஆர்.கோபால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...