தவெக முதல் மாநில மாட்டில் “ஊழலை 100% ஒழிக்க வேண்டும்” என விஜய் பேசி இருந்தார். இதனை கேள்விக்குட்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் விஜய் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாகக் காரசாரமான விவாதம் நடந்துவருகிறது.
விஜய் என்ன பேசினார்?
விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டில் பேசிய விஜய், “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை நாம் எதிர்க்க வேண்டும். ஊழல் வைரஸ் மாதிரி வாழ்க்கையில் மறைந்து கிடக்கிறது. இந்த கரப்ஷன் இருக்கே.. அது எங்கே ஒளிந்துள்ளது? எப்படி ஒளிந்துள்ளது என்று கண்டே பிடிக்கமுடியாது. 100% ஊழலை ஒழிக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால், ஒழித்துத்தான் ஆகவேண்டும்” என்று பேசியிருந்தார். இந்நிலையில், விஜய்யின் இந்த பேச்சு இப்போது சமூக ஊடகத்தில் பேசுபொருளாகியுள்ளது.
‘பிகில்’, ‘மாஸ்டர்’ சம்பளத்தில் பிளாக் மணியா?
‘பிகில்’ படத்தில் நடித்திருந்த விஜய், அப்போது வாங்கிய சம்பளம் தொடர்பான கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. அப்போது அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்தனர். அது தொடர்பாக ‘மாஸ்டர்’ பட இணை தயாரிப்பாளர் லலித்குமார் வீட்டில் நடந்த சோதனையில் ‘பிகில்’ படத்திற்கு 50 கோடி ‘மாஸ்டர்’ படத்திற்கு 80 கோடி சம்பளம் பெற்றது தெரியவந்தது. உடனே நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பிலிருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் காரில் ஊடகங்களைப் பார்த்ததும் முகத்தை மூடிக் கொண்டார். அது தொடர்பான வீடியோவைப் போட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
‘புலி’ சம்பளத்தில் வரி ஏய்ப்பு?
விஜய் 2015ஆம் ஆண்டு ‘புலி’ படத்திற்காக வாங்கிய சம்பளத்தை கணக்கில் காட்டாமல் 15 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருந்தார் என்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். ஆகவே, வருமானவரித்துறை அதிகாரிகள் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியனர். அதாவது காம்பவுண்டிங் டேக்ஸ் செலுத்திய ஒருவர், அடுத்த முறை மறுபடியும் வரி ஏய்ப்பு செய்தால் அவரை சிறைக்கு அனுப்ப முடியும். இந்த வாய்ப்பு விஜய்க்கு இளம் வயதிலேயே முடிந்துவிட்டது. அதாவது அவர் முன்பே சட்டத்தை மீறியிருந்தார். இதனால் ‘புலி’ பட விவகாரத்தில் சிக்கிய அவர் 2017ஆம் ஆண்டு 1.5 கோடி அபராதம் கட்டினார். விஜய் 5 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக ஐடி அதிகாரிகள் அப்போது தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர் பிடி செல்வக்குமார் வீட்டில் சோதனை நடந்தது. அப்போது அவர் பயந்து போய் பாஜகவில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் எழுதியுள்ள பூதம் என்பவர், “‘புலி’ படத்தில் நடிப்பதற்காக கணக்கில் காட்டப்படாத 15 கோடி ரூபாய் பணத்தை வருமானமாக பெற்றதாக நடிகர் விஜய் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். வருமான வரி சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதை தொடர்ந்து அவர் இந்த வாக்குமூலத்தை அளித்தார். வேறு வழியில்லாமல் அந்த 15 கோடி ரூபாய் பணத்துக்காக வருமான வரியை செலுத்தினார். இருந்தும், வருமானத்தை மறைத்த குற்றத்துக்காக அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அபராதம் காலதாமதாக விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த அபராதத்துக்கு இடைக்கால தடை விதித்தார்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி, தான் வருமானத்தை மறைக்கவில்லை; ஆகவே அபராதம் செல்லாது என்று கூறி நடிகர் விஜய் இந்த வழக்கை தொடுக்கவில்லை. அபராதம் காலம் கடந்து விதிக்கப்பட்டது என்று மட்டுமே கூறியுள்ளார்.
5 கோடி கேஷ்ல வாங்கினா அது கருப்புப்பணமா அப்படீன்னு சில விஜய் ரசிகர்கள் கேக்குறாங்க
Income Tax Act பிரிவு 40A(3) படி, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல ஒரு பிசினஸ் எந்த செலவு செஞ்சாலும் அதை பேங்க் மூலமாத்தான் செய்யணும். இல்லாட்டி அதை செலவு கணக்குல எடுத்துக்க மாட்டாங்க.
தவறு செய்வது மனித இயல்பு. பொது வாழ்க்கைக்குள் நுழையும் நடிகர் விஜய் அதை ஒப்புக்கொள்வதே பெருந்தன்மை” என்று கூறியுள்ளார்.
விஜய்யை சாடிய நீதிமன்றம்
‘பிகில்’, ‘புலி’ விவகாரங்கள் ஒரு பக்கம் இருக்க, கடந்த 2012ஆம் ஆண்டு, இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டி விஜய் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த விவகாரமும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 2021இல் நுழைவு வரியாக ரூ.7,98,075 விஜய் செலுத்தி இருந்தார். பின்னர் வணிக வரித்துறை டிசம்பர் 2005 முதல் செப்டம்பர் 2021 வரை வரி செலுத்தாததற்காக ரூ. 30,23,609 அபராதம் கோரியது. வரி அதிகம் உள்ளதாக விஜய் வழக்குப் போட்டார். மீண்டும் உச்சநீதிமன்றம் போனார். உச்சநீதிமன்றம் வரியைக் கட்ட வேண்டி வலியுறுத்தி இருந்தது. இது தொடர்பாக விஜய் வழக்கறிஞர் குமரேசன், “சென்னை நீதிமன்றம் 20% வரியைக் கட்டவேண்டும் என்றது. உச்சநீதிமன்றம் வரி கட்டிதான் ஆகவேண்டும் என்று சொன்னதால் வரியைக் கட்டினோம்” என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்குத் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருந்தார். 2 வாரத்திற்குள் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்றவர், விஜயை ‘ரீல் ஹீரோ அல்ல ரியல் ஹீரோவாக இருங்கள்’ என்று தீர்ப்பில் அறிவுரை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவற்றை எல்லாம் தாண்டி சமூக வலைத்தளத்தில் இன்னொரு வீடியோவும் இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது. சில ஆண்டுகள் முன்பாக ‘நக்கீரன்’ யூடியூபுக்கு, ‘தலைவா’ படத்தின் இயக்குநர் விஜய்யின் அப்பா ஏ எல் அழகப்பன் ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்தப் படத்திற்கு விஜய்க்கு தான் எவ்வளவு சம்பளம் அளித்தேன் என்பது வெளி உலகத்திற்குத் தெரியாது என்று பேசி இருந்தார்.
இதையெல்லாம் குறிப்பிட்டு, இதுதான் விஜய் ஊழலை ஒழிக்கும் விதமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய் ரசிகர்கள் பதில்
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள விஜய் ரசிகர்கள், “ரோல்ஸ் ராய் கார் விவகாரத்தில் சிலர் கவனிக்கத் தவறிய விசயம் ஒன்று உள்ளது. இந்த கார் இங்கிலாந்து கம்பெனியை சேர்ந்தது. அதிலிருந்து நேரடியாக விஜய் தன் காரை இறக்குமதி செய்யவில்லை. பிஎம்டபுள்யூ தான் அந்தக் காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அதன் கிளை மீனம்பாக்கத்தில் உள்ளது. அதிலிருந்துதான் விஜய் அந்தக் காரை வாங்கி இருந்தார். ஆனால், பலரும் விஜய் நேரடியாகக் காரை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்ததாகச் சொல்கின்றனர். அது தவறான தகவல்.
மேலும் இந்த 2023- 2024 ஆம் ஆண்டுக்கான வருமான வரியைக் கட்டிய நட்சத்திரங்களில் அதிக தொகையை வரியாகச் செலுத்தியவர்கள் பட்டியலில் விஜய் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். அதையும் கணக்கில் எடுத்துப் பேச வேண்டும்” என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.