தங்கள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் அட்வான்ஸாக சில நூறு ரூபாய்களைக் கேட்டாலே முகத்தை திருப்பிக்கொள்ளும் முதலாளிகளைத்தான் அதிகம் பார்த்திருப்போம். இப்படிப்பட்ட முதலாளிகளுக்கு மத்தியில் தன்னிடம் ஆரம்ப காலம் முதல் தன்னுடன் இணைந்து பணியாற்றிய நண்பருக்கு 1,500 கோடி ரூபாய் சொத்தை பரிசாக கொடுத்திருக்கிறார் முகேஷ் அம்பானி.
அம்பானியின் சிறுவயது தோழரும், அவரது நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவருமான மனோஜ் மோடிதான் இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசைப் பெற்ற அதிர்ஷ்டசாலி. மும்பையின் காஸ்ட்லியான பகுதிகளில் ஒன்றான நேப்பியன் சீ ரோட் பகுதியில் அமைந்திருக்கும் 22 மாடி கட்டிடத்தைத்தான் அவருக்கு பரிசாக வழங்கியிருக்கிறார் முகேஷ் அம்பானி. அதன் மதிப்பு 1500 கோடி ரூபாய்.
நேப்பியன் சீ ரோட் பகுதியில் ஒருவர் பிளாட் வாங்கவேண்டுமானால் கட்டிடத்தின் தகுதிக்கும் ஆடம்பரத்துக்கும் ஏற்ப சதுரடிக்கு 45,100 ரூபாய் முதல் 70,600 ரூபாய் வரை கொடுக்க வேண்டும். அந்த அளவுக்கு காஸ்ட்லியான பகுதியில் முகேஷ் அம்பானி கொடுத்துள்ள 2 மாடி கட்டிடத்தின் மொத்த நிலப்பரப்பு 8 ஆயிரம் சதுரடி. அங்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள 22 மாடி கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 1.70 லட்சம் சதுரடி.
இதில் முதல் 7 மாடிகள் கார் பார்க்கிங்குக்காகவே ஒதுக்கப்பட்டிருக்கிறது. கட்டிடத்துக்கான அறைகலன்கள் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. டலாடி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம் பார்த்துப் பார்த்து வடிவமைத்து கட்டிக்கொடுத்த அடுக்கு மாடி கட்டிடத்தைத்தான் பரிசாக கொடுத்துள்ளார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானி மும்பை பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் டெக்னாலஜி படித்த காலத்தில் அவருடன் படித்தவர்தான் மனோஜ் மோடி. 1980-களில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இவர், அந்தக் காலத்திலேயே முகேஷின் அப்பா திருபாய் அம்பானியின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்திருக்கிறார் முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கும் இடையே பாகப்பிரிவினை ஏற்பட்ட பிறகு முகேஷ் அம்பானி பக்கம், அவரது வலது கரமாக நின்று செயலாற்றி இருக்கிறார் மனோஜ் மோடி. ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த வாரிசுகளான ஆகாஷ் மற்றும் இஷா அம்பானிக்கும் பக்க பலமாக இருந்து வருகிறார்.
வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக கெட்டிக்காரத்தனமாக வாதாடும் ஆற்றல் வாய்ந்தவராக மனோஜ் மோடி இருக்கிறார். அவரது பேச்சாற்றலால் ரிலையன்ஸ் நிறுவனம் பல வெற்றிகரமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.