கணக்குப் பாடம் கசக்கும் என்பது பொதுவான உலக விதி. ஆனால் பிரதமரே கணக்குப் பாட கசப்பு குறித்து பேசும் அளவுக்கு கசப்பு அதிகரித்திருக்கிறது என்பது புதிய விஷயம்.
பேசியது நமது பிரதமர் மோடி அல்ல, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக். காரணம் இங்கிலாந்தில் கணக்குப் பாடம் கற்பவர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே போவது.
”எனக்கு கணக்கு வரவே வராது என்றும் கணக்கா ஆளை விடுப்பா என்று சொல்வதும் ஜோக் அல்ல. எனக்கு படிக்கத் தெரியாது என்று ஒருவர் சொன்னால் அது எப்படி ஜோக் இல்லையோ அது போல் கணக்குத் தெரியாது என்பது ஜோக் இல்லை. கணக்கு எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். இங்கிலாந்து மக்களுக்கு கணக்கு தெரியாததனால் வருடம்தோறும் பல கோடிகளை இழந்து வருகிறோம். கணக்கு எதிர்ப்பு மனநிலை இங்கிலாந்து மக்களிடம் இருக்கிறது. இது மாற வேண்டும்’ என்று கணக்குப் படிப்பின் அவசியத்தை குறித்து நேற்று பேசியிருக்கிறார்.
இங்கிலாந்து கல்வி முறைப்படி பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் 16 வயது வரை கணிதம் படிக்க வேண்டும். அதன்பிறகு கணக்குப் பாடம் கட்டாயம் இல்லை. ஆனால் இப்போது ரிஷி சுனாக் ஆட்சியில் கணக்குப் பாடத்தை 18 வயதுவரை கட்டாயமாக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
அதற்கு காரணம் இருக்கிறது.
இங்கிலாந்து நாட்டில் 80 லட்சம் மக்களுக்கு கணக்கு தெரியவில்லை. அவர்களின் கணித அறிவு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் அறிவின் அளவே இருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. யுகேயின் மொத்த மக்கள் தொகை சுமார் 7 கோடி.
”கணக்கு பயன்படாத இடமே இல்லை. ஆனால் கணக்கை தள்ளி வைக்கிறோம். ஒரு சினிமா எடுக்க வேண்டுமென்றால், ஒரு நிறுவனம் நடத்த வேண்டுமென்றால், ஒரு பொருளை வடிவமைக்க வேண்டுமென்றால்… இப்படி எல்லாவற்றுக்கும் கணக்கு அடிப்படையாக தேவைபடுகிறது. ஆனால் கணக்குப் பாடத்தை கற்க மறுக்கிறோம்’ என்று வருத்தப்பட்டிருக்கிறார் சுனாக்.
மாணவர்களை கணக்குப் பாடத்தைப் படிக்க வைப்பதற்காக நான்கு செயல் திட்டங்களையும் சுனாக் அறிமுகப்படுத்தியிருக்கிறார். கணிதத்தைப் பற்றிய பார்வையை மாற்றுவது, கணிதத்துக்காக வல்லுநர் குழு அமைப்பது, கணித குழுக்கள் அமைத்து ஆசிரியர்களுக்கு உதவுவது, கணிதத்தில் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்துவது..என தனது திட்டங்களை கூறியிருக்கிறார் இங்கிலாந்து பிரதமர்.
”கணக்கு தெரிந்தால் ஒவ்வொருவரும் தங்கள் சம்பாதிப்பதைவிட 1900 பவுண்டுகள் கூடுதலாக சம்பாதிக்க முடியும். நமது குழந்தைகள் அடிப்படை கணிதத்தை நன்கு கற்றால் அவர்களால் எந்த பணியையும் செய்ய முடியும் ‘ என்று கணக்கை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் சுனாக்.