No menu items!

விடை பெறுகிறாரா தினேஷ் கார்த்திக்?

விடை பெறுகிறாரா தினேஷ் கார்த்திக்?

இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்த வீரர் தினேஷ் கார்த்திக். தோனிக்கு முன்பே 2004-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட்டில் நுழைந்த தினேஷ் கார்த்திக், கடந்த 18 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார். அவரது இடத்தில் வேறு வீரர் இத்தனை ஆண்டுகள் ஆடியிருந்தால் பல சாதனைகளைப் படைத்திருப்பார். ஆனால் தினேஷ் கார்த்திக்கின் பெயருக்குப் பின்னால் அத்தனை பெரிய அளவில் சாதனைகள் இல்லை. இந்திய அணியில் இருந்து அடிக்கடி அவர் நீக்கப்பட்டதே இதற்கு காரணம்.

இப்போதுகூட அதுதான் மீண்டும் நடந்திருக்கிறது. இந்திய அணியின் ஃபினிஷர் என்று மகுடம் சூட்டப்பட்டு, உலகக் கோப்பைக்கு அனுப்பப்பட்ட தினேஷ் கார்த்திக், இந்த உலகக் கோப்பை முடியும் முன்னரே அடுத்த தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு வேண்டுமானால் இது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் தினேஷ் கார்த்திக்குக்கு இது சர்வ சாதா‘ரணம்’. அவர் சந்தித்த சவால்களும், ஏமாற்றங்களும் அப்படி. தினேஷ் கார்த்திக்கின் அப்பா கிருஷ்ணகுமார், ஓஎன்ஜிசியில் பணியாற்றினார். அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால், தனது மகனின் கிரிக்கெட் ஆர்வங்களுக்கு துணையாக இருந்தார்.

வீட்டு வளாகத்திலேயே ஒரு கிரிக்கெட் பிட்ச்சை அமைத்துக் கொடுத்தார். தந்தையின் இந்த உதவியால், அவர் பெருமைப்படும் அளவுக்கு தனது கிரிக்கெட் திறனை மேம்படுத்தினார் தினேஷ் கார்த்திக். கிரிக்கெட்டில் மாவட்ட அணி, மாநில அணி என்று முன்னேறியவர் 2004-ம் ஆண்டில் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

கீப்பிங் திறமையுடன் பேட்டிங்கிலும் நல்ல திறமை இருப்பதால் இந்திய அணியில் அவர் நிலைத்து நிற்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே தோனி எனும் கிரிக்கெட் சூறாவளி இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமானது. அதனால் தினேஷ் கார்த்திக்கின் பயணத்துக்கு தடை வந்தது. அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இடையில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில சிக்கல்கள் ஏற்பட தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் கிராஃப் இறங்கியது.

ஒருகட்டத்தில் வர்ணனையாளராக உருவெடுத்தார் தினேஷ் கார்த்திக். கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை டெஸ்ட் போட்டிக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோத, இப்போட்டியில் வர்ணனையாளராக பணியாற்றினார். ஆனால் அதைத் தொடர்ந்து நடந்த ஐபிஎல் தொடர், அவரது கிரிக்கெட் வாழ்க்கையை திருப்பிப் போட்டது.

கடந்த ஐபிஎல் போட்டியில் 5.5 கோடி ரூபாய்க்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக வாங்கப்பட்ட தினேஷ் கார்த்திக், இந்த ஐபிஎல்லில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரராக உருவெடுத்துள்ளார். இந்த தொடரில் கடைசி 5 ஓவர்களில் மட்டுமே பொதுவாக ஆடி வரும் தினேஷ் கார்த்திக், இந்த தொடரில் எடுத்த மொத்த ரன்கள் என்னவோ 274-தான். ஆனால், இந்த ரன்களை 200 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அவர் அடித்தார் என்பதுதான் மிரளவைக்கும் விஷயம்.

இந்த ஸ்டிரைக் ரேட்தான் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் பிடித்துக் கொடுத்தது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இதுவரை நடந்த முதல் 3 போட்டிகளில் ரிஷப் பந்த்தை தாண்டி அவருக்கு இடம் கிடைத்தது.

இந்த 3 போட்டிகளிலும் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தாலும், பேட்டிங்கில் அவர் சரியாக சோபிக்காதது மீண்டும் அவருக்கு சோதனையை ஏற்படுத்தியது. ஆரம்பம் முதலே அடித்து ஆடும் தன்மை கொண்ட ரிஷப் பந்த் அணியில் இருக்கும்போது, கடைசி 5 ஓவர்களில் மட்டும் சிறப்பாக பேட்டிங் செய்யும் தினேஷ் கார்த்திக் அணிக்கு தேவையா என்ற குரல்கள் எழுந்தன.

இந்த சூழலில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆடும் இந்திய அணியை நேற்று தேர்வாளர்கள் அறிவித்துள்ளனர். ஹர்த்திக் பாண்டியாவை கேப்டனாகவும், ரிஷப் பந்த்தை துணைக் கேப்டனாகவும் கொண்டுள்ள இந்த அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லை.

இதுபோன்ற சூழலில் எல்லாம் மீண்டு வருவது தினேஷ் கார்த்திக்கின் வழக்கம். ஆனால் இம்முறை மீண்டும் அணிக்குள் அவரால் நுழைய முடியுமா என்று தெரியவில்லை. காரணம் இப்போது அவரது வயது 37. இது இனியும் காத்திருப்பதற்கான வயதல்ல.

தினேஷ் கார்த்திக் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள தேர்வுக்குழு தலைவர் சேதன் சர்மா, “தினேஷ் கார்த்திக் ஒரு சிறந்த வீரர் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. முக்கிய வீரர்கள் பலரும் உலகக் கோப்பையில் விளையாடி உள்ளதால், வீரர்களின் பளுவைக் குறைவும் வகையில் அடுத்த தொடருக்கான அணியைத் தேர்வு செய்துள்ளோம். தினேஷ் கார்த்திக் எப்போதும் எங்கள் பட்டியலில் இருப்பார். இப்போதைய சூழலில் புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக இந்த அணியைத் தேர்வு செய்துள்ளோம்” என்றார்.

அவர் இப்படி கூறினாலும் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் என இளம் விக்கெட் கீப்பர்கள் வெளியில் காத்திருக்கும் சூழலில், தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் இடம் கிடைப்பது சந்தேகம்தான். எனவே தினேஷ் கார்த்திக்கைப் பொறுத்தவரை, அவர் ஏற்கெனவே தனது கடைசி சர்வதேச டி20 தொடரில் ஆடுவதாகவே தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...