No menu items!

மிரட்டும் கடிக்கும் தெரு நாய்கள்: தீர்வு என்ன?

மிரட்டும் கடிக்கும் தெரு நாய்கள்: தீர்வு என்ன?

அண்மையில் சென்னை திருவொற்றியூரின் பரபரப்பான சாலை ஒன்றில் நின்று கொண்டிருந்த தெரு நாய் ஒன்று திடீரென அந்த சாலை வழியே செல்பவர்களை எல்லாம் துரத்தி துரத்தி கடிக்க ஆரம்பித்தது. 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேரை ஒரு மணி நேரத்தில் அந்த நாய் கடித்தது. வயதானவர்கள் பலர் நாய்க்கு பயந்து ஓடியதில் தரையில் விழுந்து காயமடைந்தார்கள். இதனையடுத்து பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்டது. தற்போது, அந்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நாய் கடித்த 29 பேருக்கும் தடுப்பூசி போட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சென்னை சம்பவம் நடந்து சில நாட்களில் ஈரோடு மாவட்டம் புஞ்சம்புளியம்பட்டி பகுதியில் வீட்டில் புகுந்த தெருநாய் ஒன்று 65 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடித்துக் குதறியது. பின்னர் வெளியே வந்த அந்த நாய், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்துக் குதறியது. இதில் பாதிக்கப்பட்ட 65 வயது பெண் உட்பட ஏழு பேர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் சிவகங்கையில் காரைக்குடி கல்லூரி சாலையில் வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்ததில் பெண் உட்பட ஐந்து பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவை சில உதாரணங்கள்தான். இப்படியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்க் கடி சமபவங்கள் சமீப மாதங்களில் அதிகரித்துள்ளன. நாய் கடியால் மரணம் நிகழவும் வாய்ப்புள்ளது என்பதால் இது பொதுமக்களிடையே, குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாய் கடித்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன?

இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த, தொற்று நோய் சிறப்பு மருத்துவர் சுரேஷ் குமார், “வெறிபிடித்த தெருநாய்கள் கடிப்பதால், இறப்பை ஏற்படுத்தும் தீவிர தொற்று நோயான ரேபிஸ் பரவ வாய்ப்புள்ளது. அணில், முயல் இரண்டு தவிர காடுகளில் வாழும் நரி, ஓனாய், வவ்வால்கள் போன்ற வனவிலங்குகள் மற்றும் நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகள் உட்பட அனைத்து விலங்குகள் உடலில் வழக்கமாக வாழும் இந்த ரேபிஸ் வைரஸ், அந்த விலங்குகள் நேரடியாக கடிப்பதாலோ அல்லது அந்த விலங்குகளால் கடிபட்ட விலங்கள் கடிப்பதாலோ எச்சில் வழியே பரவுகின்றன. மனிதர்களுக்கு பெரும்பாலும் நாய் கடிகள் மூலமே பரவுகின்றன.

எச்சில் வழியாக பரவி ரத்தத்தில் கலக்கும் இந்த வைரஸ், மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து, பின் மூளையையும் நேரடியாக பாதிப்பதால் மரணம் விளைகிறது. நம் உடலில் நாய் கடித்த இடம், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றைப் பொறுத்து, ஒரு வாரத்தில் இருந்து இதன் பாதிப்புகள் தெரிய ஆரம்பிக்கும். சிலரைப் பொறுத்தவரைக்கும் 5 ஆண்டுகள் வரை செயல்படாமல் இருந்துவிட்டு அதன் பின்னர் கூட தாக்கலாம்.

ரேபிஸ் வைரஸின் அறிகுறிகள் இன்குபேஷன், புரோட்ரோம், நியுரோலாஜிக்கல், கோமா மற்றும் மரணம் என 5 நிலைகளாக பிரிக்கப்படுகிறது. வைரஸ் பரவுதல் முதல் அறிகுறிகள் தென்படும் நிலை இன்குபேஷன் எனப்படுகிறது. இந்த நிலை, நோய் பரவும் விதத்தைப் பொறுத்து ஒரு வாரத்தில் இருந்து ஒரு வருடம் வரை மனிதருக்கு மனிதர் வேறுபடும். அறிகுறிகள் தென்படத் தொடங்கும் ஆரம்ப நிலை புரோட்ரோம் எனப்படுகிறது. அந்த நிலையின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, பசியின்மை, காயம் ஏற்பட்ட இடத்தில் கூச்ச உணர்வு, உணர்வின்மை, வலி போன்றவை ஏற்படலாம்.

அறிகுறிகள் முற்றிய நிலை நியூராலாஜிக்கல் எனப்படுகிறது. இந்த நிலையின்போது வைரஸ் மூளையழற்சியை ஏற்படுத்தி, மத்திய நரம்பு மண்டலம் மற்றும் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அந்த சமயத்தில் கவலை, குழப்பம், மயக்கம், பிரம்மை, ஹைட்ரோஃபோபியா (தண்ணீரால் பயம்), தூக்கமின்மை, தசை வலிகள், விழுங்குவதில் சிரமம், ஏரோஃபோபியா (காற்றால் பயம்) போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

மூன்றாம் நிலையை கடப்பவர்கள் அடுத்த 10 நாட்களில், பக்கவாதம் அல்லது கோமா என்ற நிலையை அடைந்து மரணம் ஏற்படும். வைரஸ், நாய் கடித்த பாகத்தில் இருந்து நரம்பு மண்டலத்தைக் கடந்து மூளையை அடைந்துவிட்டால் அதன்பின்னர் அவரை காப்பாற்றுவது கடினம்” என்கிறார், டாக்டர் சுரேஷ் குமார்.

உலகிலேயே இந்தியாவில் தான் தெரு நாய்கள் அதிகம். இந்தியாவில் மட்டும், ஒரு வருடத்திற்கு 20,000 பேர் வெறிநாய்க் கடியால் ராபிஸ் தொற்று ஏற்பட்டு இறந்து போகிறார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள். இது உலக புள்ளி விவரத்தோடு ஒப்பிடும் போது மூன்று மடங்கு அதிகம். இதில், கொடுமை என்னவெனில் நாய் கடியால் இறப்பவர்களில் குழந்தைகளின் எண்ணிக்கைதான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

‘வெறிநாய் கடித்தவர்கள் உடனே தடுப்பூசிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். நாய் கடித்த அன்றே முதல் ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும்; பின்னர், 7 ஆம் நாள், 21ஆம் நாள், 28 ஆம் நாள் மற்றும் அதிகபட்சமாக 90 ஆம் நாள் என 5 தவணைகளாக இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

அதிகாலை நடைப்பயிற்சி செல்வோர், பணி முடிந்து பின்னிரவு வீடு திரும்புவோர் போன்ற நாய் கடி அபாயத்தில் உள்ளவர்கள் முதலிலேயே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதன்மூலம் நாய் கடித்தாலும் ரேபிஸ் வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும்” என்கிறார், டாக்டர் சுரேஷ் குமார்.

இதுபோல் நாய்களுக்கும் அரசால் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காகவே, சென்னை மாநகராட்சியில் 16 நாய்பிடி வாகனங்கள் உள்ளன; ஒரு வாகனத்திற்கு ஐந்து பணியாளர்கள் உள்ளனர். ‘கடந்த வருடம் 16 ஆயிரம் நாய்கள் பிடிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது; இந்தாண்டில் இதுவரை 17,813 நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், 13,486 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று மாநகராட்சி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தற்போது நாய் கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, “சென்னை முழுவதும் உள்ள நாய்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். தெரு நாய்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்படும். வெறிநாய் இருப்பதை அறிந்தால் மக்கள் உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் அளிக்க வேண்டும்” என்று தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தெருநாய்கள் கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் ஒரு பக்கம் இருக்க, தெருநாய்கள் கூட்டமாக சூழ்ந்து கொண்டு துரத்தி துரத்தி கடிக்கப் பாயும்போது, உயிருக்கு பயந்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதும், அதில் பலர் தடுமாறி விழுந்து காயமடைவதும் தொடர்கதையாகி உள்ளது. தெருநாய்கள், குப்பை தொட்டிகள், சாலையோரங்களில் கூட்டமாக சுற்றி திரிவதுடன், அடிக்கடி சண்டையிட்டு சாலையில் குறுக்கே பாய்வதாலும் விபத்துகள் ஏற்படுகிறது.

தீர்வு என்ன?

சில ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் தெரு நாய்கள் எண்ணிக்கை, அவற்றை பிடித்துக்கொண்டு போய் கொல்வதன் மூலம் கட்டுக்குள் வைக்கப்பட்டது. இந்நிலையில், ‘தெருநாய்களை கொல்லவே கூடாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பின்னர்தான் நாய்கள் எண்ணிக்கை இப்படி கட்டுக்கடங்காமல் பெருகிவிட்டது என்கிறார்கள்.

நாய்கள் ஒருமுறை கருத்தரித்தால் குறைந்தது 5க்கும் மேற்பட்ட குட்டிகளையாவது ஈன்றெடுக்கும். எனவே, தெருநாய்கள் கருத்தரிப்பதை கட்டுப்படுத்த தவறினால் நாய்கள் சில மாதங்களில் பல மடங்கு பெருகிவிடும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு பெருகி வரும் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு மண்டலத்திற்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தெரு நாய்களை பிடித்து வாகனங்கள் மூலம் திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட பேசின் பாலம் மற்றும் கண்ணம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லும். அங்கு, கால்நடை உதவி மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பிறகு நாய் மீண்டும் அதே பகுதியில் விடப்படும்.

ஆனால், “மாநகராட்சியின் இந்த நடவடிக்கை கேட்பதற்கே நகைப்பாக இருக்கிறது. சென்னை மாநகராட்சி முழுவதும், நாய் பிடிப்பதற்கு பதிமூன்று வாகனங்கள் இருக்கின்றன. வாகனத்துக்கு ஐந்து ஊழியர்கள் வீதம் இருக்கிறார்கள். ஒரு பகுதியில் உள்ள நாய்களைக் கையாளவே இவை போதாது. அதிலும், பலர் திறன் குறைந்த, பயிற்சியளிக்கப்படாத ஊழியர்கள். அவர்கள் அந்த நாய்களை கையாளும் விதமே நம்மை பதட்டத்துக்கு உள்ளாக்கும்.

ஒரு பெண் நாய், ஆறே மாதத்தில் ஒரு நாய்ப் பண்ணையையே உருவாக்கும் வல்லமை கொண்டது. இரண்டு வருடங்களில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு எண்ணிக்கையில் அவை வளர்ந்து நிற்கும். கருத்தடையை இதற்கு ஒரு வழிமுறையாகப் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், கருத்தடை செய்யப்பட்ட ஒரு தெருநாய், திமிங்கிலம் போல ஊதிப் பெருத்து நடக்க முடியாமல் அலைகிறது எங்கள் தெருவில். இது என்ன மாதிரி பின்விளைவு என்று தெரியவில்லை?” என்கிறார், வீட்டில் நாய் வளர்ப்பவரும் எழுத்தாளருமான கார்ல் மார்க்ஸ் கணபதி.

தொடர்ந்து, “எப்படி யோசித்துப் பார்த்தாலும், தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு அவை கொல்லப்படவேண்டும் என்பது மட்டுமே இந்த பிரச்சினைக்கு சாத்தியமுள்ள தீர்வாக படுகிறது. இப்போதே இதை செய்யவில்லை என்றால் பிரச்சினையின் தீவிரம் இன்னும் அதிகமாகும்.

முன்பெல்லாம் தெரு நாய்கள் என்றால், அவை ஒரு வீட்டினரால் அல்லது சுற்றத்தில் சில வீடுகளால் பராமரிக்கப்படுபவையாக இருக்கும். அந்த சுற்றுப் புறத்திலேயே அவை திரியும். மனிதர்களுடன் இணக்கமாக இருக்கும். தெரு நாய்களாக இருந்தாலும், அவற்றிற்கும் மனிதர்களுக்குமான தொடர்பு அறுந்து போகாமல் இருக்கும். ஒவ்வொரு தெரு நாய்க்கும், இவர்தான் உரிமையாளர் அல்லது கேர் டேக்கர் என்பது போன்ற ஒரு குடும்பம் உண்டு. தெருவில் செல்பவர்களை அது துரத்தினால், ச்சூ என்று அவர்கள் குரல் எழுப்பினால் போதும் அப்படியே சாந்தமடைந்து விடும்.

ஆனால், இன்றைய தெருநாய்கள் யாராலும் பராமரிக்கப்படாத அதன் முழு அர்த்தத்தில் தெரு நாய்களே. அவை தங்களது உணவுக்கு பெரும்பாலும் உணவுக் கழிவுகளையே நம்பியிருக்கின்றன. மாமிசக் கழிவுகளை உண்ணும் நாய்கள் சரும நோய்க்கு ஆளாகின்றன.

நாய் அடிப்படையில் மிகவும் ஸ்நேகமான விலங்கு. மேலும் மனிதர்களை சார்ந்தே வாழும் பண்பு கொண்டது. ஆனால், அதன் மீதான புறக்கணிப்பு, தாக்குதல், நோய்த் தொற்று போன்றவை அவற்றை மனித விரோதியாக மாற்றிவிடுகின்றன. இன்றைக்கு தெருவில் அலையும் தொண்ணூறு சதவிகித நாய்கள் ஆபத்தானவையே. சந்தேகமே இல்லை.

ஆனால், விலங்கு ஆர்வலர்கள் இந்தப் பிரச்சினையின் ஒரு பகுதியை மட்டும் பார்க்கிறார்கள். நாயைப் பராமரிப்பது என்பது, அதற்கு உணவிடுவது மட்டும் அல்ல. அதன் மீது பிணைப்பை உருவாக்கிக் கொள்வது. அதற்கு இன்று வாய்ப்பில்லை. அதற்கு யாருக்கும் நேரமில்லை, ஆர்வமில்லை” என்கிறார் கார்ல் மார்க்ஸ் கணபதி.

எழுத்தாளர் நியாண்டர் செல்வனும் தெருநாய்களை கொலை செய்வதே இந்த பிரச்சினை ஒரே தீர்வாக இருக்க முடியும் என்கிறார்.

ஆனால், ”தெருநாய்களை கொல்வது வேறு புதிய பிரச்சினைகளை உருவாக்கும்” என்கிறார், விலங்கு ஆர்வலர் நந்தன் ஸ்ரீதரன்.

மேலும், “தெருநாய்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் எலிகள் பெருகிவிடும். நாய்களின் வாழிடங்களை எலிகள் ஆக்கிரமித்துக் கொள்ளும். அது கற்பனை பண்ண முடியாத வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.  தெருநாய்கள் மனிதனுக்கு நன்மையளிப்பவைதான். இதன் வேலையே மனிதன் சாப்பிட்டுப்போடும் மிச்சத்தை தின்று சுத்தப்படுத்துவது தான். எனவே, தெரு நாய்களிடமிருந்து, மக்களைப் பாதுகாக்க நாய்களுக்கு தடுப்பூசி (Canine Contraceptive Vaccine) கொடுக்கப்பட வேண்டும். அது தான் ஒரே வழி” என்கிறார் நந்தன் ஸ்ரீதரன்.

ஆனால், “தெருநாய்கள் பல மடங்கு பல்கி பெருகியுள்ள நிலையில் எல்லாவற்றையும் பிடித்து தடுப்பூசி போடுவது சாத்தியமல்ல” என்கிறார் நியாண்டர் செல்வன்.

தொடர்ந்து, “1980களிலும் 1990களிலும் தெருநாய்கள் இருந்தன. அப்போது தெருநாய்கள் எண்ணிக்கை கூடினால் பிடித்துக்கொண்டு போய் கொன்றுவிடுவார்கள். அதனால் அவற்றின் தொகை யாருக்கும் பிரச்சனை இல்லாமல் கட்டுக்குள் வைக்கப்பட்டது. உலகெங்கும் இப்படித்தான் வனவாழ் விலங்குகள், நகர்ப்புற விலங்குகளின் எண்ணிக்கை ‘Culling’ எனும் முறை மூலம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது. அங்கெல்லாம் பெடா உள்ளிட்ட எந்த அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது கிடையாது. அமெரிக்காவில் பெடா அமைப்பே நாய்கள், பூனைகளுக்கான ஷெல்டர்களை (Kill shelters) நடத்துகிறது. அதில் தத்து எடுக்கபடாத நாய்கள், பூனைகள் கருணைக்கொலை செய்யப்படுகின்றன.

‘நாயை கொல்லவே கூடாது. கருத்தடை தான் பண்ணவேண்டும்’ என்பது விலங்குகளின் இயல்பை புரிந்துகொள்ளாத உத்தரவு. நாய்களுக்கு நகர்புறங்களில் என்ன இயற்கையான உணவு கிடைக்கிறது? அவை இயல்பில் அசைவம். அவை பெருநகரங்களில் எதை வேட்டையாடும்? எதை உண்ணும்? உணவுக்கு வழியின்றி ஒரு எல்லைக்கு மேல் வெறிபிடித்து சின்ன நாயை பெரிய நாய் கொன்று தின்ன ஆரம்பிக்கும். மனிதர்கள், கோழிகள், ஆடு, மாடு என எதையும் விட்டுவைக்காது. எனவே, தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்க அவற்றை பழைய முறைப்படி கொல்வதே சிறந்த வழி” என்கிறார், நியாண்டர் செல்வன்.

ஆனால், அதற்கு நீதிபதிகள் அனுமதிப்பார்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...