நேற்று நடந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா அரசியல் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
மே மாதம் 26-ம் தேதி திட்டங்களை துவக்கி வைப்பதற்காக சென்னை வந்திருந்தார் பிரதமர் மோடி. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருவது அதுவே முதல் முறை. அந்த விழாவில் நடந்த சில சம்பவங்கள் அப்போது சர்ச்சையானது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரைச் சொன்னபோதெல்லாம் அரங்கில் எழுந்த ஆரவாரமிக்க கைத்தட்டல் பாஜகவினரை எரிச்சலடையச் செய்தது. வேண்டுமென்றே திமுகவினர் செய்தது என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
முதல்வரின் பேச்சும் பாஜகவினரை கோபப்பட வைத்தது. கச்சத்தீவு மீட்பு, வராத ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இவற்றையெல்லாம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் என்றால் என்ன என்பது குறித்து விளக்கங்களும் அளித்தார். பிரதமருக்கு திராவிட மாடல் குறித்து கிளாஸ் எடுத்துவிட்டார் முதல்வர் என்று திமுகவினர் கொண்டாட பாஜகவினர் கடுப்பானார்கள்.
“பிரதமரை மேடையில் அமரவைத்துவிட்டு, ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். பிரதமரை மேடையில் அமரவைத்துவிட்டு, என்ன விளையாட்டு காட்டுகிறீர்களா? தமிழ்நாட்டில் இதுவரை பிரதமரை மதித்திருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் நடந்துகொண்ட விதம் ஒரு கரும்புள்ளி” என்று குறிப்பிட்டார் அண்ணாமலை. ‘தமிழக முதல்வர் நடந்துக் கொண்டதைக் குறித்து வெட்கப்படுகிறேன்’ என்று தனது ட்விட்டர் பதிவில் எழுதினார்.
அடுத்த நாள் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை ‘திமுகவும் பாஜகவும் 360 டிகிரி கோணத்தில் எதிரெதிர் நிலையில் இருக்கிறோம்’ என்றார். இதையும் வேடிக்கைப் பொருளாக மாற்றினர் திமுக ஆதரவாளர்கள். 360 டிகிரி எதிர்கோணம் அல்ல, 180 டிகிரிதான் எதிர் கோணம் என்று கிண்டலடித்தார்கள்.
திமுக – பாஜக மோதல் உஷ்ணமானது.
ஆனால் நேற்று நடந்த செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா இந்தக் கருத்துக்களை பின் தள்ளியிருக்கிறது.
மேடையில் பிரதமர் மோடியும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். ’பிரதமர் நிகழ்ச்சிக்கு வந்தது பெருமை, நானே நேரில் சென்று அழைக்கலாம் என்றிருந்தேன்’ என்றெல்லாம் முதல்வர் குறிப்பிட்டது பாஜகவை நெருங்குகிறது என்ற பிம்பத்தை கட்டமைத்தது.
நிலுவைக் கடன்களைப் பற்றி பேசவில்லை, திராவிட மாடல் குறித்து விளக்கம் தரவில்லை, ஒன்றிய அரசு என்று சொல்லவில்லை என்று ஏகப்பட்ட கிண்டல்கள், கேலிகள், விமர்சனங்கள்.
வழக்கத்துக்கு மாறாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டினார். ‘முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில், செயலில் முதல்வராக நடந்துகொண்டார். ஒரு தமிழனாக நாம் பெருமைப்பட்டோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுவும் சந்தேகங்களை எழுப்பியது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – பாஜக கூட்டணி உறுதி. மத்திய மந்திரிசபையில் இணைய திமுக முயற்சிக்கிறது என்ற அரசியல் ஆரூடம் நேற்று வலுப்பெற்றது.
நேற்றைய விழாவில் அரசியலே இல்லையா? முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் பேசவில்லையா?
பேசியிருக்கிறார், ஆனால் மறைமுகமாக. தமிழர்களின் சிறப்பை உணர்த்தும் கமல்ஹாசனின் குரலில் நடத்தப்பட்ட ஒலி,ஒளி நிகழ்ச்சி ஒரு அரசியல்தான். தமிழர்களின் சதுரங்க சாதனைகளை குறிப்பிட்டது மறைமுக அரசியல்தான். அரசுப் பள்ளி மாணவர்களை முன்னிலைப்படுத்தியதும் திராவிட அரசியல்தான்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தோளைத் தொட்டு சிரித்துப் பேசிய பிரதமர் மோடி இந்த விழாவில் அரசியல் செய்யவில்லையா?
செய்திருக்கிறார். அவரது உரையில் தமிழ்நாட்டு அரசைப் பாராட்டவில்லை. தமிழ்நாடு அரசு குறித்து எந்த குறிப்பும் இல்லை. நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு பாராட்டுகள் என்று பொத்தாம் பொதுவாக அவர் குறிப்பிட்டதே அரசியல்தான்.
இன்று அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா. பிரதமரும் முதல்வரும் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் முதல்வர் பேசியதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
இந்த விழாவில் முதல்வர் திராவிட மாடல் குறித்து இரண்டு முறை பேசியிருக்கிறார். நேற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை ஒன்றிய இணை அமைச்சர் என்றே குறிப்பிட்டார். இன்றும் அப்படியே குறிப்பிட்டார்.
இவையெல்லாம் மறைமுக அரசியலே.
சரி பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்குமா? அதற்கான வாய்ப்புகள் உள்ளதா? இரண்டு கட்சிகளும் நெருங்குகின்றனவா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அடிப்படையாக ஒரு கேள்வி இருக்கிறது.
இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் அவர்களுக்கு அரசியல் ரீதியாக வெற்றிகள் கிடைக்குமா?
தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகள் பாஜகவை எதிர்த்து கொள்கை ரீதியாக அரசியல் செய்த திமுக திடீரென்று பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் மக்கள் வாக்களிப்பது சந்தேகம்தான்.
இதற்கு பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்திருக்கிறதே என்று கூறலாம். 1999 – 2004 வரை பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது திமுக. ஆனால் அந்தக் காலக் கட்டம் வேறு. சமூக ஊடகங்கள் இல்லாத காலம். பாஜக மீது இத்தனை தமிழ்நாட்டில் வெறுப்புகள் ஊற்றப்படாத காலம். ஆனால் இன்றைய சூழல் வேறு. திராவிட மாடல் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரே மாடல் – அது மோடி மாடல் – என்று நடைபோடும் பாஜகவுடன் கை கோர்ப்பது திமுகவுக்கு பொருந்தாது.
இதேதான் பாஜகவுக்கும். திமுகவை கடுமையாக எதிர்த்த நிலையில் 2024ல் கூட்டணி அமைப்பது எந்த விதத்திலும் அவர்களுக்கு உதவாது.
இது இரண்டுக் கட்சிகளுக்குமே தெரியும். புரியும்.
வழக்குகள் இருக்கின்றன, சொத்துகளை காப்பாற்ற வேண்டியிருக்கிறது என்றெல்லாம் கூறப்படுகிறது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. இந்த எட்டு வருடங்களில் திமுகவினர் மீது எடுக்க முடியாத நடவடிக்கைகளையா அடுத்த இரண்டு ஆண்டுகளில் எடுத்துவிட முடியும்?