No menu items!

ராஷ்மிகா – ராக்கெட் வளர்ச்சி!

ராஷ்மிகா – ராக்கெட் வளர்ச்சி!

Google Search-ல் கடும் ட்ராஃபிக்கை உண்டாக்கி லைம் லைட்டை தன் வசம் திருப்ப செய்தவர்.

16 முதல் 60 வயதுள்ளவர்களின் மொபைல் ஃபோனில் இன்ஸ்டாக்ராம், ஃபேஸ்புக் ரீல்ஸ், யூட்யூப் ஷார்ட்ஸில் பல நூறு முறை ஆக்ரமித்தவர்.

பார்பி பொம்மை போன்ற உடல்வாகும், அதை வசீகரமாய் காட்டும் ஆடைகளாலும் வீக்லி வைரல் லிஸ்ட்டில் அடிக்கடி இடம் பிடிப்பவர்.

கண்ணசைவில், இடையசைவில் கிறங்கடித்து கமர்ஷியல் ஹீரோக்களை தனது கால்ஷீட் கேட்க தூண்டிக் கொண்டிருப்பவர்.

இப்படி பில்டப்களை கொடுக்கும் போதே உங்களுக்குப் புரிந்திருக்கும்

‘வெந்து தணிந்தது காடு. ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா மந்தானாவுக்கு ஒ போடு’ என யூ ட்யூப் புகழ் ’கூல்’ சுரேஷ் பாணியில் ஒபனிங் கொடுத்துவிட்டு விஷயத்திற்கு வருவோம்.

மிகக் குறுகிய காலக்கட்டத்தில் அதாவது வெறும் ஆறே ஆண்டுகளில் ராஷ்மிகா மந்தானா, இந்திய சினிமாவில் பரபரப்பான ஒரு நடிகையாக கொண்டாடப்படுகிறார். அதிகம் சம்பளம் நடிகைகளில் ஒருவராக முக்கியத்துவம் பெற்றிருக்கிறார். கார்பொரேட்களின் ஆதர்ச ப்ராண்ட் அம்பாசிடர் ஆகியிருக்கிறார். ஒரு வசீகரமான தொழிலதிபராகவும் வெற்றிக்களத்தில் இறங்கி இருக்கிறார்.

ராஷ்மிகா மந்தானாவுக்கு இது எப்படி சாத்தியமானது?

ராஷ்மிகாவுக்கு 20 வயதான போது கன்னட சினிமா உலகமான சாண்டல்வுட்டில் ‘கிங்க் பார்ட்டி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 2016-ல் வெளியான இப்படம் தடாலடி ஹிட். அப்போதே அவரை ‘கர்நாடகாவின் க்ரஷ்’ என கன்னட சினிமா ரசிகர்கள் கொண்டாடினார்கள். அடுத்து கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமாருடன் ’அன்ஜானி புத்ரா’ படத்தில் ஜோடி சேர்ந்தார். இந்தப் படமும் பாக்ஸ் ஆபீஸில் தூள் கிளப்பியது.

கொஞ்ச நாட்களில் கன்னட சினிமாவிலிருந்து, தெலுங்கு சினிமா உலகமான டோலிவுட்டுக்கு தனது ஜாகையை மாற்றினார். பான் – இந்தியா என்கிற மிகப்பெரும் சினிமா மார்கெட் உருவாவதற்கு முன்பாக இவர் 2018-ல் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ‘கீதா கோவிந்தம்’, இளைஞர்களின் மத்தியில் ராஷ்மிகாவை தவிர்க்க முடியாத க்ரஷ் ஆக மாற்றியது. ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா ஜோடி ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்படும் ஆன் – ஸ்கிரீன் ஜோடியாக வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து பாக்ஸ் ஆபீஸ் கணக்கை மனதில் வைத்து இவர்கள் இருவரையும் வைத்து ‘டியர் காம்ரேட்’ படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரத்தில் நடித்ததால், படத்தின் வெற்றியினால் கிடைக்கும் கமர்ஷியல் அறுவடையை ராஷ்மிகா தட்டிச்சென்றார்.

இதனால் ராஷ்மிகா மந்தானா கன்னட சினிமாவுக்கு மட்டும் சொந்தமில்லை, இந்திய சினிமாவுக்கே கிடைத்த நட்சத்திர தேவதை என அவருக்கு ‘Crushmika’ என புதுப்பட்டம் கொடுத்த அழகு பார்த்தார்கள் சினிமா ப்ரியர்கள்.

குறிப்பாக 2020-ல் தெலுங்கு சினிமாவின் இளவரசர் மகேஷ் பாபுவுடன் நடித்த ‘சாரிலேரு நீக்கெவரு’ படம் இவரை அனைத்து வயது சினிமா ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

ஒட்டுமொத்த சினிமாவும் கோவிட்டினால் கோமா நிலைக்குப் போக, ராஷ்மிகா பெயர் மட்டும் செய்திகளில் அடிப்பட்டு கொண்டிருந்தது. கோவிட்டின் கோரத்தாண்டவத்தினால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ல் சினிமா ஒரளவுக்கு கோமாவிலிருந்து மீண்டு எழுந்தது.

அந்நேரத்தில் அல்லு அர்ஜூன் உடன் நடித்த ‘புஷ்பா’ வெளியானது. இப்படத்தின் இயக்குநர் சுகுமார், புஷ்பா திரையரங்குகளில்தான் வெளியாக வேண்டும் என விடாப்பிடியாக இருந்தார். ஒடிடி-யில் புதிய படங்கள் வெளியான சூழலில் சுகுமாரின் பிடிவாதம் சரியா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் சுகுமார் எடுத்த முடிவு ‘புஷ்பா’ படத்திற்கு மட்டுமில்லாமல் ராஷ்மிகாவுக்கும் ஒரு பக்காவான திருப்புமுனையாக அமைந்தது.

‘புஷ்பா’ சூப்பர் டூப்பர் ஹிட். திரையரங்குகளை அடுத்து ஒடிடி-யிலும் வெளியாக பான் – இந்தியா மார்க்கெட்டிலும் அதிர்வை உருவாக்கியது.’சாமி.. சாமி..’ பாடல் சமூக ஊடங்களில் வைரல் ஆனது.

ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் அதை அசால்ட்டாக வெளிப்படுத்திய ராஷ்மிகா நடிப்பும், ரசிகர்களைக் கிறங்கடிக்கத்தது. டோலிவுட்டை தாண்டி பான் – இந்திய சினிமா மார்க்கெட்டிலும் ராஷ்மிகாவின் பெயர் அடிக்கடி முணுமுணுக்கப்படும் பெயரானது. விளைவு ’National Crush’ ஆக வைரல் நாயகியாகி இருக்கிறார் ராஷ்மிகா மந்தானா.

இங்கே இருந்து ராஷ்மிகா மந்தானாவின் சினிமா கேரியர் க்ராஃப் விறுவிறுவென எகிறத் தொடங்கியது.

தற்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கில்லி விஜயுடன் ‘வாரிசு’, ஹிந்தியில் ’அர்ஜூன் ரெட்டி’ பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூருடன் இணையும் ‘அனிமல்’, இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள உறவை மாற்றியமைக்கும் வகையிலான ஒரு மிஷனில் கம்பீரமான நாயகியாக சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ஜோடி சேரும் ‘மிஷன் மஞ்சு’, ’குயின்’ பட இயக்குநர் விகாஷ் பஹல் இயக்கத்தில் அப்பா மகள் இடையே நடக்கும் எமோஷன்லான கதையில் அமிதாப் பச்சனுக்கு மகளாக நடிக்கும் ‘குட் பை’ என ராஷ்மிகாவின் கால்ஷீட் டைரி செம டைட்டாகி இருக்கிறது. இந்தப்படங்களுடன் ‘புஷ்பா – 2’ படமும் தயாராக உள்ளது.

ஹிந்தியில் ராஷ்மிகாவின் வளர்ச்சி ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் படங்களைப் போல கொஞ்சம் புரியாத புதிராகதான் இருக்கிறது. ராஷ்மிகா நடித்த ஹிந்திப் படங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. ஆனால் இவருக்கு மவுசு அதிரிபுதிரியாக அதிகரித்து கொண்டே போகிறது.

ராஷ்மிகா வளர்ச்சியில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இவர் தேர்ந்தெடுத்த படங்கள் அல்லது இவரைத் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்த ஹீரோக்கள் அனைவருமே மிகப் பெரும் ரசிகர் பட்டாளத்தை தங்கள் வசம் வைத்திருப்பவர்கள். இந்த படங்களை ராஷ்மிகா முடிவெடுத்தாரா இல்லை யதேச்சையாக அமைந்ததா என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இவருக்கு மவுசு அதிகரிக்க இந்தப் படங்கள் கை கொடுத்திருக்கின்றன.

ராஷ்மிகாவை இயக்குநர்கள், நடிகர்களுக்கு பிடிக்க காரணம் நிஜ வாழ்க்கையில் அவரது குறும்புத்தனமான சேட்டைகளும், முகப்பாவனைகளும், ஒரு டீன் ஏஜ் பெண்ணைப் போல் இருக்கும் உடல்மொழியும்தான்.

அடுத்து பெரிய நடிகர்கள் என்றால் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் அவர் மீது ’எனக்கு க்ரஷ்.. இவர் மேல் ரொம்ப மரியாதை.. என் மனசுக்குப் பிடிச்ச ஹீரோவுடன் நடிப்பது கனவா இல்லை நிஜமான்னு தெரியல’ என்று பேட்டிகளாக கொடுத்து சம்பந்தப்பட்ட ஹீரோக்களை திணறடிப்பார்.

மேலும் குறும்புத்தனமான வீடியோக்களை தனது இன்ஸ்டாக்ராமில் தொடர்ந்து ரீல்களாக ஏற்றிக்கொண்டே இருப்பார். இது அவருக்கு மிகப்பெரும் ஃபாலோயர்களை பெற்று தந்திருப்பதோடு, அவரைப் பற்றி பேசுவதற்கான வாய்ப்புகளை பல தளங்களில் உருவாக்கி கொண்டே இருக்கின்றன.

இப்படியாக தனக்கென ஒரு பாணியை வைத்திருப்பதால் ராஷ்மிகாவின் வளர்ச்சி பெட்ரோல் விலை உயர்வை விட நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து கொண்டே இருக்கிறது.

ரசிகர்களும், விமர்சகர்களும் பல கோணங்களில் ராஷ்மிகாவையும், அவரது வளர்ச்சியையும் பற்றிய ஆய்வுகளில் தீவிரமாக இருக்க ராஷ்மிகாவோ, ‘’இந்த மவுசு, வரவேற்பு, புகழ் எல்லாம் என்னோட தொழில் மூலமாக கிடைச்சிருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒண்ணு இருக்கும். சினிமாவுல தொடர்ந்து நடிக்கணும்னா உங்களைப் பத்தி எழுதுறதை ஏத்துக்கணும். அதுதான் ஒரே வழி. என்னைப் பத்தின கிசுகிசு ரசிகளை உற்சாகப்படுத்தும், சந்தோஷமாக புன்னகைக்க வைக்கும் என்றால், அந்த கிசுகிசுக்களைப் பத்தி எனக்கு கவலையில்ல. என்னுடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தவே நான் இங்கே இருக்கேன். அது நடந்தா எனக்கு சந்தோஷம்தான்’ என்று இமய மலை யாத்திரைக்கு டிக்கெட் போட்ட இளம் துறவியைப் போல கருத்து சொல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...