ஷங்கர் தமிழ் திரையுலகின் மந்திரப் பெயர்… ஒரு காலத்தில்.
ஷங்கர் ஒரு இடத்துக்கு வருகிறார் என்றால் அந்த இடமே பரபரப்பாகும். ஜீன்ஸ் ஷர்ட்டில் ஸ்டைலாக வந்து போவார். இன்று செய்தியாளர்களை சந்திக்க அஞ்சி பின் வாசல் வழியே ஒளிந்து வாடகை காரில் தப்பி ஓடுகிறார்.
என்ன ஆனது ஷங்கருக்கு?
ஜெண்டில்மேன் திரைப்படம் எடுக்கும்போது இத்தனை பிரமாண்டமாய் அந்த 30 வயது இளைஞன் வருவான் என்று எதிர்பார்க்கவில்லை.
கே.டி.குஞ்சுமோன் தயாரித்து ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன் மிகப் பெரிய வெற்றி.
அதற்கடுத்து மீண்டும் குஞ்சுமோன் – ஷங்கர்- ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி. பிரபுதேவா, நக்மா நடித்த காதலன் மிகப் பெரிய வெற்றி.
காதலனின் வெற்றி ஷங்கரை தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான இயக்குநராக உயர்த்தியது.
அடுத்து கமல்ஹாசனுன் இந்தியன். ஷங்கருக்கு அடுத்த பிரமாண்ட வெற்றி. இந்தியன் தாத்தா இந்தியா முழுவதும் பேசப்பட்டார்.
அடுத்து ஐஸ்வர்யாராய் – பிரசாந்துடன் காதல் கலந்த ஜாலி திரைப்படம். ஏழு உலக அதிசயங்களை ஒரே பாடலில் காட்டி பிரமாண்ட இயக்குநர் என்ற பட்டத்தைப் பெற்றார்.
ஒரு நாள் முதல்வர் என்ற ஒன்லைனில் கற்பனைகளை பறக்கவிட்டு முதல்வனை உருவாக்கினார். அர்ஜுன் – மனீஷா கொய்ராலா நடித்த முதல்வர் மற்றொரு சூப்பர் ஹிட். முதல்வன் இந்தியிலும் நாயக் என்று ரீமேக் செய்யப்பட்டது.
ஷங்கர் இந்தியா முழுவதும் புகழப்படும் இயக்குநராக மாறினார். அவர் படத்தில் நடிக்க நட்சத்திரங்கள் போட்டியிட்டனர். எத்தனை கோடி செலவழிந்தாலும் பரவாயில்லை என்று அவர் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஒடி வந்தார்கள்.
ஷங்கரின் முதல் சறுக்கல் பாய்ஸ் திரைப்படத்தில் நடந்தது. ஹாலிவுட் ஸ்டைலில் டீன் ஏஜ் மியுசிக்கல் படத்தை முயன்றார். ஆபாசம் என்று கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது பாய்ஸ். ரஹ்மானின் அதிரடியான இசை இருந்தும் படம் வெற்றி பெறவில்லை.
அந்த சமயத்தில் எஸ் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்கள் தயாரிக்க துவங்கினார் ஷங்கர். அங்கும் அவர் தொட்டதெல்லாம் பொன்னாகியது. காதல், இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி, வெயில் என தொடர்ந்து அவர் தயாரித்த திரைப்படங்கள் பிரமாதமான வெற்றிகளைப் பெற்றது.
பாய்ஸ் தோல்வி குறித்து கவலைப்படாத ஷங்கர் அடுத்து அந்நியன் படத்தை இயக்கி சிக்சர் அடித்தார். ரெமோவாகவும் அம்பியாகவும் அந்நியனாகவும் விக்ரம் ஸ்பிலிட் பெர்சனாலிட்டி கதாநாயகனாக நடிக்க படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை முதல் முறையாக ரஹ்மானிடமிருந்து மாறினார். ஹாரிஸ் இசையிலும் பாடல்கள் பட்டையைக் கிளப்பின.
ஷங்கர் இயக்கிய 9வது படம் அவர் வாழ்க்கையில் மிக முக்கியமான படம். சிவாஜி. சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் முறையாக ஷங்கர் இயக்கத்தில். கல்வித் தந்தைகளின் அரசியலைப் பேசிய இந்தப் படமும் மிகப் பெரிய ஹிட்.
10வது படமும் ரஜினியுடன் தான். இந்த முறை மிக மிகப் பிரமாண்டமாக. சிட்டி ரோபாவாக ரஜினி நடித்த எந்திரனும் சூப்பர் ஹிட்.
அதற்கடுத்து நண்பன் என்ற ரீமேக் திரைப்படம். அமீர் கானின் த்ரீ இடியட்ஸ் படத்தை தழுவி எடுக்கப்பட்டது. முதல் முறையாக விஜய்யுடன் இணைந்தார். படம் சிறப்பான வெற்றி.
அடுத்து அவரது முயற்சியான ஐ திரைப்படம்தான் ஷங்கரின் இறங்கு முகத்துக்கு முதல் படியாக அமைந்தது.
விக்ரம் கதாநாயகனாகவும் எமி ஜாக்சன் நாயகியாகவும் நடித்த இந்த திரைப்படம் 2012 துவக்கப்பட்டு 2015ல் முடிந்தது. சுமார் மூன்று வருடங்கள் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் ஷங்கர் மேஜிக் மிஸ்ஸிங் என்பதே பொதுவான கருத்தாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து அடுத்து எந்திரன் பாகம் இரண்டை 2.0 என்று படமெடுக்க தொடங்கினார் ஷங்கர். மீண்டும் ரஜினி – ஷங்கர் கூட்டணி. கூடவே இந்தி நட்சத்திரம் அக்ஷய் குமார். 2015ல் துவங்கிய இந்தப் படம் 2018ல் வெளிவந்தது. மீண்டும் மூன்று வருட உழைப்பு. இந்தியா முழுவதிலும் சுமார் 7000 தியேட்டர்களிலிலும் வெளிநாடுகளில் 2000 தியேட்டர்களிலும் வெளியானது. ஷங்கர் மேஜிக் மிஸ்ஸிங் என்றே மீண்டும் விமர்சனங்கள்.
2.0 வெளியாகி சுமார் 4 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த நான்கு ஆண்டுகளில் ஷங்கர் இரண்டு படங்களை ஒப்புக் கொண்டார். இந்தியன் 2, ராம்சரனின் தெலுங்கு படம். இதில் இந்தியன் 2 பாதியில் நிற்கிறது. ராம்சரன் திரைப்படமும் வேகமெடுக்கவில்லை.
பிரமாண்டம் என்றாலே ஷங்கர் என்ற பிம்பம் 2015ல் ராஜமவுலியின் பாகுபலி வந்த போது லேசாக சிதைத்தது. அதனைத் தொடர்ந்து பாகுபலி இரண்டாம் பாகம் 2017ல் வெளி வந்து பிரமாண்ட வெற்றி பெற்றது. இரண்டு பாகுபலிகளும் ஷங்கரின் பிரமாண்ட சிங்காசனத்தை அசைத்துவிட்டன.
தமிழின் மிகச் சிறந்த கமர்ஷியல் இயக்குநராக வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருந்த ஷங்கரால் ஏன் இப்போது படங்கள் எடுக்க சிரமப்படுகிறார் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகிறது.
2008ல் எழுத்தாளர் சுஜாதாவின் மறைவு ஷங்கருக்கு மிகப் பெரிய இழப்பு. ஜெண்டில்மேன், காதலன் படங்களில் அவர் பாலகுமாரனுடன் பணியாற்றியிருந்தாலும் அவருக்கு நெருக்கமான கதாசிரியராக ஆலோசனை தருபவராக சுஜாதா இருந்தார். ஜெண்டில்மேன் முடிந்து அவர் காதலன் திரைப்படம் எடுத்துக் கொண்டிருந்த 1995 காலக் கட்டத்திலேயே சுஜாதாவை சந்திக்க அவரது வீட்டுக்கு வருவார். அந்த சந்திப்புகளில் உருவானதுதான் இந்தியன். அதனைத் தொடர்ந்து இருவரும் நெருக்கமானார்கள். அவரது திரைப்படங்களுக்கு சுஜாதா ஒரு பலமாக மாறினார். சுஜாதாவால் ஷங்கருடன் தயக்கமின்றி விவாதிக்க முடிந்தது. எதிர்க் கருத்துக்களை கூற முடிந்தது. திரைக்கதையை மெருகேற்ற முடிந்தது. சுஜாதாவின் மறைவுக்குப் பிறகு அவரது இடத்துக்கு ஷங்கரால் இன்னொருவரை கண்டுபிடிக்க இயலவில்லை.
ஷங்கரின் ஆரம்பக் காலங்களில் அவருடன் கற்பனா சக்தி மிக்க உதவி இயக்குநர்கள் இருந்தார்கள். பாலஜி சக்திவேல், காந்தி கிருஷ்ணா, வசந்தபாலன் போன்றவர்கள் இருந்தார்கள். அவர்கள் ஷங்கருடன் சமமாக வாதிடக் கூடியவர்கள். ஆனால், அதன்பிறகு ஷங்கருக்கு அவரது கருத்தை மறுத்து பேசும் உதவியாளர்கள் கிடைக்கவில்லை.
பாகுபலி, கேஜிஎஃப், புஷ்பா போன்ற பிரமாண்ட திரைப்படங்கள் வந்தப் பிறகு ஷங்கரின் பிரமாண்டம் பழைய பெருமையாக மாறிவிட்டது.
கமல்ஹாசனை வைத்து எடுத்துக் கொண்டிருந்த இந்தியன் 2 திரைப்படமும் பல தடங்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டது மிகப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது.
அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் படம் பாதியில் நின்றது. நீதிமன்றம் வரை வழக்கும் சென்றது. ஷங்கர் படம் பாதியில் இது போன்ற பிரச்சினைகளால் நிற்பது இதுதான் முதல் முறை.
இந்தியன் 2 சிக்கல்களால் அந்தப் படத்தை இடையில் நிறுத்திவிட்டு தெலுங்கு நட்சத்திரம் ராம்சரன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்புக் கொண்டார் ஷங்கர். கார்த்திக் சுப்புராஜ் கதைக்கு ஷங்கர் திரைக்கதை எழுதியிருக்கிறார். இந்தப் படத்தை ஏப்ரல் 2023ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் படம் முடியுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.
இப்படி ஷங்கரின் திரை வாழ்க்கை சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கும்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் சிக்கல்களை சந்தித்து வருகிறது.
அவரது மூத்த மகள் அதிதி மருத்துவம் படித்தவர். அவர் நடிகையாக உருவெடுத்ததை ஷங்கர் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால், மகளின் ஆர்வத்துக்கு தடை போட முடியாததால் அதிதி இப்போது திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இரண்டாவது மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. தொழிலதிபர் தாமோதரனின் மகன் கிரிக்கெட் ஆட்டக்காரர் ரோஹித்தை திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமணம் மகிழ்ச்சியாக இல்லை. திருமணம் நடந்த சில மாதங்களிலேயே ரோஹித் ஒரு பாலியல் குற்றச்சாட்டில் சிக்க திருமண வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டது.
கொரோனோ காலத்தில் திருமணம் நடைபெற்றதால் அதிகம் பேரை ஷங்கரால் கூப்பிட முடியவில்லை. அதனால் இந்த வருடம் மே மாதம் 1ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அந்த வரவேற்பும் நடைபெறவில்லை. ரத்து செய்யப்பட்டது. காரணம் மாப்பிள்ளை மீது இருக்கும் பாலியல் வன்முறை புகார்.
இந்த சிக்கலைத் தொடர்ந்து மற்றொரு தலைவலி ஷங்கரை இப்போது தொடர்கிறது. சட்ட விரோத பணப் பறிமாற்றம் தொடர்பாக அவரை அமலாக்கத் துறை விசாரித்திருக்கிறது.
அமலாக்கத் துறை விசாரணைக்கு வாடகை காரில் வந்த ஷங்கர் முன் வாசலில் செய்தியாளர்கள் நிற்கிறார்கள் என்று அறிந்ததும் பின் வாசல் வழியே யாருக்கும் தெரியாமல் சென்றிருக்கிறார்.
ரோல்ஸ் ராய்ஸ் காரில் பந்தாவாக விழாக்களுக்கு வந்து சென்றவர் இன்று பின் வாசல் வழியே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
விரைவில் ஷங்கர் இந்தப் பிரச்சினைகளிலிருந்து மீண்டு ஜெண்டில்மேனாக ரசிகர்களின் காதலனாக இயக்குநர்களில் முதல்வனாக நாடு போற்றும் இந்தியனாக வருவதற்கு வாழ்த்துக்கள். விரைவில் ஷங்கர் 2.0வை எதிர்பார்க்கிறோம்.