சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களின் எதிர்ப்பை மீறி, கனக சபையின் மீது ஏறி வழிபட பொதுமக்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளது சர்ச்சையாகி உள்ளது. இந்த களேபரங்களின் போது தீட்சிதர் ஒருவர் பூணூல் அறுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நான்கு நாட்களாக என்னதான் நடக்கிறது?
கனக சபை என்பது என்ன?
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து சபைகள் இருக்கின்றன. அதில் ஒரு சபையின் பெயர்தான் கனக சபை. கனகம் என்றால் தங்கம் என்றும் சபை என்றால் அவை என்றும் பொருள். தங்கத்தால் ஆன அவை என்ற பொருளில் கனக சபை என்கிறார்கள். இது சிற்றம்பல மேடை என்றும் அழைக்கப்படுகிறது. இது 18 தூண்களும் 9 வாசல்களும் கொண்டது.
சிதம்பரம் கோவிலில் இருக்கும் மற்ற நான்கு சபைகள்… ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ராஜ சபை, உற்சவர்கள் எல்லாம் இருக்கக்கூடிய தேவ சபை, நிறுத்த சபை மற்றும் நடராஜர் இருக்கக்கூடிய திருச்சிற்றம்பலம் எனச் சொல்லப்படும் திருச்சபை. இதில் திருச்சபைக்கு நேராக இருக்கக்கூடிய மேடைதான் கனக சபை. இது நடராஜர் நடனம் புரியும் சபை.
சிதம்பரம் கனக சபை உட்பட நடராஜர் திருநடனம் புரியும் சபைகள் மொத்தம் ஐந்து. மற்ற நான்கு… திருவாலங்காடு ரத்தின சபை, மதுரை ரஜத சபை (வெள்ளி சபை), திருநெல்வேலி தாமிர சபை, திருக்குற்றாலம் சித்திர சபை.
சிதம்பரம் கோவில் திருச்சபையில் ஆறு அடி உயர பீடம் அமைக்கப்பட்டு அதன் மேல்தான் நடராஜர் சிலை உள்ளது. இதனால், கனக சபையில் ஏறி தரிசனம் செய்தால்தான் நடராஜரை முழுமையாகவும் நேரடியாகவும் பார்க்க முடியும். கனக சபைக்கும் நடராஜர் சிலை இருக்கும் திருச்சபைக்கும் இடையே ஐந்து படிகள் உள்ளன. இந்த ஐந்து படிகளும் மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.
கனக சபையில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்வது பழங்காலத்தில் இருந்தே வழக்கமாக இருந்துள்ளது. கனக சபையில் நடராஜர் சிலையை வைத்து பூஜைகள் செய்யும் வழக்கமும் இருந்துள்ளது. எனவே, சிதம்பரம் கோவிலில் திருச்சபைக்கு அடுத்தபடியாக கனக சபை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த கனக சபையில் ஏறி பக்தர்கள் வழிபடுவதற்கும் தேவாரப் பாடல்கள் பாடுவதற்கும் தீட்சிதர்கள் தடை ஏற்படுத்துவதும், அதற்கு எதிராக பக்தர்களும் தமிழ் ஆர்வலர்களும் போராட்டம் நடத்துவதும், பக்தர்களுக்கு ஆதரவாக அரசு தலையிடுவதும் என கடந்த சில ஆண்டுகளாகவே இந்த கனக சபை சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
இப்போது நடந்தது என்ன?
சிதம்பரம் நடராஜர் கோவிலில் புகழ்பெற்ற ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17-06-23 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவிலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் கனக சபை மீது பொதுமக்கள் ஏறி வழிபடத் தடை விதித்துள்ளதாக தீட்சிதர்கள் கனக சபை வாயிலில் அறிவிப்பு பலகையை வைத்தனர். இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்ற ஆண்டும் இதுபோலவே கனக சபை மீது ஏறி பக்தர்கள் வழிபட தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அப்போது பக்தர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்னும் அடிப்படையில், கனக சபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம் என 2022 மே மாதம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்பதை தினமும் கண்காணிக்க இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளையும் அரசு நியமித்தது.
இந்நிலையில், இந்த ஆண்டும் கனக சபை மீது ஏறி 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பக்தர்கள் இந்து சமய அறநிலையத் துறையில் புகார் தெரிவித்தனர். பக்தர்கள் புகாரை அடுத்து, ‘கனக சபையில் வழிபட பொதுமக்களுக்கு தடை விதித்து தீட்சிதர்கள் அறிவிப்பு பலகைகள் வைத்தது தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரானது’ எனக் கூறி, இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை அம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா தலைமையில் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் அறிவிப்பு பலகையை அகற்ற சென்றனர். அப்போது அதிகாரிகளை தீட்சிதர்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அறிவிப்பு பலகையை அகற்றாமல் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் திரும்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் சிவராம தீட்சிதர், “நாங்கள் தீட்சிதர்களின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்து, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அனுமதி பெற்றுதான் அறிவிப்பு பலகை வைத்திருக்கிறோம். அதை எடுக்க வேண்டும் என்றால் தீட்சிதர்களின் பொதுக்குழு கூட்டத்தில் தான் முடிவு செய்ய வேண்டும். பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதியே போர்டு வைக்கப்பட்டது. பக்தர்களின் நலன் கருதி அபிஷேகத்தின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் படிக்கட்டுகளில் அமரக்கூடாது எனவும் போர்டு வைக்க உள்ளோம்” என்றார்.
ஆனால், இதனை மறுத்துள்ள இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சரண்யா, “அறிவிப்பு பலகை வைக்க இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் அனுமதி பெறவில்லை. தீட்சிதர்கள் பொய் சொல்லுகிறார்கள்” என்கிறார்.
இந்நிலையில், பக்தர்கள் கனக சபையில் ஏறி வழிபட அனுமதிக்க வேண்டும் என்று, கடந்த செவ்வாய்க்கிழமை (27-06-23) மாலை 5 மணிக்கு காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர்கள் கனக சபை வாயிலில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது பாரதிய ஜனதா கட்சியினர், அவர்களுக்கு எதிராக ‘ஒம் முருகா, சிவ, சிவா’ என கோஷங்களை எழுப்பினார்கள். இதனால், கோவிலில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
அன்று மீண்டும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், அரசு ஆணையை நிறைவேற்றும் வகையில், காவல்துறை உதவியுடன், கனக சபையின் மற்றொரு வாசல் வழியாக பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தனர். அப்போது தீட்சிதர்கள் அவர்களை ஏற விடாமல் தடுத்து கீழே தள்ளி விட்டனர். மேலும், தீட்சிதர்கள் கனக சபையை பூட்டிவிட்டு கீழே வந்து காவல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பைச் சேர்ந்த சிவனடியார்கள், மறுநாள் (28-06-23) காலை கனக சபை மேடையில் தேவாரம், திருவாசம் ஓதி வழிபடுவதாக அறிவித்தனர். இதன் காரணமாக கோவிலில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் சிவனடியார்கள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் மீண்டும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். 28-06-23 (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு சிதம்பரம் கீழ் சன்னதி வழியாக தேவார, திருவாசகப் பதிகங்கள் ஓதி சிவ வாத்தியங்களுடன் தெய்வத்தமிழ்ப் பேரவையைச் சேர்ந்த இருபதிற்கும் மேற்பட்டவர்கள் கோவிலுக்கு சென்றனர். பின்னர் காவல்துறை பாதுகாப்போடு கனக சபை மேடையில் நின்று தேவாரம் திருவாசகம் பாடினர்.
அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள், “தரிசனம் மட்டுமே செய்ய வேண்டும்; இங்கு பாடக்கூடாது. வேண்டுமானால் மனதிற்குள்ளேயே பாடுங்கள்” என சிவனடியார்களை தடுத்தனர். ஆனால், சிவனடியார்கள் தேவர திருவாசக பதிகங்கள் பாடியபடியே வழிபட்டனர். இதனால் அங்கு மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. ஆனாலும், தொடர்ந்து கனக சபையில் பொதுமக்கள், பக்தர்கள் ஏறி வழி பட அனுமதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.
தீட்சிதர் பூணூல் அறுக்கப்பட்டதா?
இந்த விவகாரம் தொடர்பாக தீட்சிதர்கள் குழு செயலர் சிவராம் தீட்சிதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீட்சிதர்கள் அனைவரும் அமைதியாக பூஜை வழிபாட்டு முறைகளை மட்டுமே செய்து வருகின்றோம். இந்நிலையில், நடராஜர் கோவிலில் கடந்த 24ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் விரும்பத் தகாத செயல்களால் மிகவும் மன வேதனையில் உள்ளோம். கோவிலில் வழிபாட்டு முறைகளுக்கு இடையூறு செய்யும் வகையில் காவல்துறையினர் மூலம் இந்து சமய அறநிலையத் துறையினர் அச்சுறுத்துகின்றனர். இது சட்டவிரோத நடவடிக்கையாகும்.
தடையை மீறி காவல் துறையினர் உதவியுடன் இந்து அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் கனக சபையில் ஏறியுள்ளது ஆகம விதிக்கு எதிரானது. மேலும், இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் காவல் துறையினர் தள்ளி விட்டதில், கனக சபையில் பூஜையில் இருந்த கற்பக கணேச தீட்சிதர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடைகள் ஈரமாகி பூணூல் அறுக்கப்பட்டுள்ளது. தற்போது எங்களது நிலை பாதுகாப்பற்றதாக உள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் கோயிலுக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
‘தீட்சிதர் பூணூல் அறுக்கப்பட்டது’ என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், “அரசாணையை நிறைவேற்றும் வகையில் அமைதியான முறையில் கனக சபையில் ஏறி வழிபாடு செய்து விட்டு உடனே கீழே இறங்கி விட்டோம். அதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் கூச்சலில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது தீட்சிதர்கள் மீது காவல்துறையினர் மற்றும் அறநிலையத் துறையினர் சுண்டு விரல் கூட படவில்லை. அவர்கள் கூறுவது தவறானது. சம்பந்தப்பட்ட தீட்சிதர் அமர்ந்த இடத்தில் வீடியோ பதிவுகள் உள்ளது. அவரை தள்ளிவிட்ட காட்சிகள் இருந்தால் தீட்சிதர்கள் அதனை வெளியிட வேண்டும்.
கனக சபையில் போலீஸாரும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் ஏறி வழிபட்டதால் தீட்டுபட்டுவிட்டதாக, அவர் உடுத்தி இருந்த உடைகளை மாற்றி விட்டு புது துணியை போட்டுக் கொண்டு மீண்டும் அவர் நல்ல நிலையில் பூஜைக்கு சென்று விட்டார் என்பதுதான் உண்மை” என்று தெரிவித்துள்ளனர்.
திமுக – பாஜக சவால்: ஜெயிக்கப்போவது யார்?
இந்த விவகாரம் தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “தெய்வம் எப்படி பக்தர்களுக்கு தீங்கு விளைவிக்காதோ அதேபோல் அர்ச்சகர்கள் என்று கூறப்படும் தீட்சிதர்களும் தீங்கு விளைவிக்க கூடாது. ஆனால், எவையெல்லாம் சட்ட விரோதமோ அதை ஒருசில தீட்சிதர்கள் கையில் எடுத்துகொள்கிறார்கள். தாங்கள் வைத்தது தான் சட்டம் என்பது போல் தீட்சிதர்கள் சிதம்பரம் கோவிலை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், பக்தர்களின் நலனுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கையில் இருந்து எந்நாளும் அரசு பின் வாங்கபோவதில்லை. பக்தர்களின் சுதந்திரமான இறை வழிபாட்டிற்கு அனைத்து உதவிகளையும் சட்டப்படி இந்து சமய அறநிலைத்துறையும் தமிழக அரசும் செய்யும்.
பக்தர்கள் அனைவரும் சிதம்பரம் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை தான் நிர்வாகிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதன் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆவணங்களைத் திரட்டும் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையோ, “சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருடாவருடம் ஆனித் திருமஞ்சனம் விழா முடிந்து நான்கு நாட்களுக்கு கனகசபை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாது. ஆனித் திருமஞ்சனம் விழாவின் போது, கோவில் நகைகள் அனைத்தும் தில்லை நடராஜருக்கு அலங்காரமாக அணிவிக்கப்படுவதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக, நான்கு நாட்கள், கனகசபை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தொடர்ச்சியாக நிர்வாக இடைஞ்சல் ஏற்படுத்தி, கோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாக அதிகாரம் தீட்சிதர்களுக்கு மட்டுமே உள்ளது என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலை, தமிழக அரசு கட்டுப்படுத்த நினைப்பது பக்தர்களை மட்டும் அல்ல, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
இந்து சமயத்தின் புனிதமான எந்தக் கோட்பாட்டின் மீதும் நம்பிக்கை இல்லாத, நாத்திகத்தைப் பரப்பி, இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாகத் திகழும் திமுக, சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பிரச்சினைகள் முடிந்து சுமூக நிலைக்கு சிதம்பரம் திரும்பியிருந்தாலும், மீண்டும் அங்கு சிக்கல் உருவாகும் என்பதையே, அமைச்சர், பாஜக தலைவர் அறிக்கைகள் சொல்கிறது. மட்டுமல்ல, சிதம்பரம் நடராஜர் கோயிலின் கடந்தகால வரலாறும் இதையே சொல்கிறது.
The Chidambaram temoke was declared a Minority shrine and management is under only dikshitars.HRCE has no business to do or say anything there and is contempt of Court.The 4 day restriction has nothing to do with Tamil or devaram singing.It was for crowd control.Persecutubg a small minority is a shane and you distort the facts like a paid media