Can’t wait for the new season and the new ‘role’. Stay tuned.
-இப்படி ஒரு பதிவை நேற்று தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார் தல தோனி. இந்த பதிவுதான் இன்று கிரிக்கெட் உலகின் ஹாட் டாபிக். தோனியின் இந்த பதிவைத் தொடர்ந்து அவர் இந்த ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு ஒரு வீரராக ஆடுவாரா அல்லது வழிகாட்டியாக ஒதுங்கிவிடுவாரா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
யாரும் எதிர்பாராத விஷயத்தை, எதிர்பாராத நேரத்தில் செய்வது தோனியின் ஸ்டைல். 2014-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சத்தில் இருந்தபோது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் தோனி. ஆனால் அதே நேரத்தில் ஒருநாள் போட்டிகளில் அவர் ஓய்வை அறிவிப்பார் என்று எல்லோரும் நினைத்த நேரத்தில் அதை அறிவிக்கவில்லை.
2019-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்துக்குப் பின்னர் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்போது அவர் அந்த முடிவை அறிவிக்கவில்லை. அப்போட்டி முடிந்து 2 ஆண்டுகள் ஆன பிறகு, திடீரென ஒருநாள் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனால் அவர் எப்போது என்ன செய்வார் என்பதை யாராலும் கணிக்க முடியாது.
ஐபிஎல்லைப் பொறுத்தவரை 2021-ம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கும்போது, அதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்ற வதந்தி வரும். ஆனால் கடைசி ஆட்டத்துக்கு பிறகு, இது உங்களுக்கு கடைசி ஐபிஎல் கிரிக்கெட் தொடரா என்று செய்தியாளர் கேட்க, “நிச்சயமாக இல்லை” என்ற வார்த்தையை உதிர்த்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பார் தோனி.
கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை வென்றபோதுகூட, அது தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி, “சென்னை ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு ஏதாவது கைமாறு செய்ய விரும்புகிறேன். அவர்களுக்காக இன்னும் ஓராண்டாவது ஐபிஎல் தொடரில் ஆட விரும்புகிறேன். என கால் முட்டியில் ஒரு அறுவைச் சிகிச்சை செய்யவேண்டி உள்ளது. அந்த அறுவை சிகிச்சை முடிந்த பிறகு என் உடல் கிரிக்கெட் ஆட ஒத்துழைக்கிறதா என்பதைப் பொறுத்து நவம்பர் மாதம் என் முடிவை அறிவிக்கிறேன்” என்றார்.
ஆனால் சொன்னபடி நவம்பர் மாதம் எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. அதேநேரத்தில் சில பேட்டிகளில் தான் சென்னை அணிக்காக மீண்டும் ஆடுவேன் என்று சூசகமாக தெரிவித்தார்.
இப்போது ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது பயிற்சிகளை தொடங்கி இருக்கிறது. ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீர்ர்கள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். இந்த சூழலில்தான் தோனி நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில், “Can’t wait for the new season and the new ‘role’. Stay tuned.” என்று பதிவிட்டுள்ளார்.
இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு, குறிப்பாக சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிய ரோல் என்றால் ஒரு வீரராக இல்லாமல், அணி வீர்ர்களின் வழிகாட்டியாக தோனி செயல்படுவாரோ என்ற எண்ணம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அணியின் வழிகாட்டியாக செயல்படுவது தோனிக்கு புதிதல்ல. ஏற்கெனவே ஏற்கெனவே கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வழிகாட்டியாக தோனி செயல்பட்டுள்ளார். அதுபோல் இந்த ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வழிகாட்டியாக அவர் செயல்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.