வியாழனும் வெள்ளியும் மழை அத்தனை இல்லை. அடுத்த இரண்டு, மூன்று நாட்கள் எப்படியிருக்குமோ என்று அச்சத்தில் சென்னை மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல மாவட்டத்தினர் இருக்கிறார்கள்.
அடுத்த மூன்று நாட்கள் எச்சரிக்கையுடன் தான் இருக்க வேண்டும் என்று சென்னை வானிலை மையம் தெரிவிக்கிறது.
”அடுத்த நான்கு நாட்கள், வடதமிழக மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யலாம். இன்றும் நாளையும் டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று கூறுகிறார் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை நிலையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலசந்திரன்.
உண்மையாக பயப்பட வேண்டியது சென்னையும் அது சுற்றியுள்ள மாவட்டங்கள்தாம். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாலசந்திரன், “டிசம்பர் 3-ம் தேதி திருவள்ளூர், சென்னை தொடங்கி கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.
டிச.3-ம் தேதி, திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். டிச.4-ம் தேதி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 80 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.” என்று குறிப்பிடுகிறார். அதாவது சென்னை முதல் கடலூர் வரை மிக கனமழை, பலத்த காற்று அடுத்த மூன்று நாட்களுக்கு.
சரி, நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ன ஆனது?
“தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்குக்கே சுமார் 780 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமார் 940 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 3-ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். பின்னர் இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வடதமிழக கடலோரப் பகுதிகளில் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே, டிசம்பர் 4-ம் தேதி மாலை கரையைக் கடக்கக்கூடும்” என்கிறார் பாலசந்திரன்.