தேனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு ஊரில் பிரச்சாரம் செய்துகொண்டு இருந்தபோது பேசிய அனுராதா, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” என்றார். தினகரனின் முகத்தை குக்கரோடு ஒப்பிட்டு அனுராதா கிண்டல் அடித்தது மிகப்பெரிய அளவில் வைரலானது.
இந்த சூழலில் தேனி தொகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம், இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு விளக்கம் அளித்த தினகரன், “நான் அவரோட அத்தை மகன். நீங்கல்லாம் நான் லட்சணமா இருக்கறதா சொல்றதால என் மனைவிக்கு என்மேல பொறாமை அதிகம். அதோட என் முகாம் குண்டா இருக்கறதால அவங்க அப்படி சொல்லி இருக்காங்க” என்றார்.
மோடி வெல்வது பாஜகவுக்கே நல்லதல்ல – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
ஆங்கில இதழ் ஒன்றுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
மோடியால் சிதைக்கப்பட்ட பட்டியல்தான் அதிகம். மாநிலங்களைச் சிதைத்தார், இந்தியப் பொருளாதாரத்தைச் சிதைத்தார், இந்திய அமைதியைக் குலைத்தார். இப்படி சமூக அரசியல் பொருளாதாரத்தின் அனைத்துப் பக்கத்தையும் சிதைத்துவிட்டார். இனி அவர் சிதைக்க ஏதுமில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் சிதைக்க நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இந்தத் தேர்தலில் வென்றால் அவர் செய்வதற்கு இது ஒன்றுதான் பாக்கி இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் மோடி வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கே நல்லதல்ல.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழிசை வெளியிட்ட ‘அக்கா 1825 தேர்தல் அறிக்கை’
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், ‘அக்கா 1825’ என்ற தலைப்பில் தனது தனிப்பட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த தேர்தல் அறிக்கையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது:
சென்னைக்கு கோதாவரி ஆற்றுநீரை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரும்பாக்கம், சித்தாலபாக்கம் உள்ளிட்ட இடங்கள் உள்பட மொத்தம் 25 நீர்நிலைகள் தூர்வாரப்படும்.
மெட்ரோ ரயில்-2 திட்டப் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வடபழனி, திருவான்மியூர், தி.நகர் பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.
ரயில் நிலையங்களில் மோடி உணவகங்கள் அமைக்கப்படும்.
ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறும் பிரதமரின் காப்பீட்டு திட்டம் தகுதி உள்ள அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை
ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 3 இலவச பொது உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும். தென் சென்னை முழுவதும் 18 பொது உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும்.
பொது கழிப்பிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். நடமாடும் கழிப்பிடங்கள் ஏற்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
.