சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கிவிட்டது. இந்த புத்தகக் காட்சியில் அதிகம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படும் டாப் 10 நூல்கள் எவை? அனைத்து பதிப்பக நூல்களையும் விற்பனை செய்யும் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் தரும் பட்டியல் இங்கே…
என்றும் தமிழர் தலைவர்
தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை திசை திருப்பிய பெரியாரை விரிவாகவும் ஆழமாகவும் அறிமுகப்படுத்தும் நூல். ‘இந்து தமிழ் திசை’ வெளியீடு. 864 பக்கங்கள், விலை ரூ. 600.00
மகா கவிதை – வைரமுத்து
இதுவரை எந்த இதழிலும் வெளிவராத கவிஞர் வைரமுத்துவின் புத்தம் புதிய கவிதைகள் தொகுப்பு. நிலம் – நீர் – தீ – வளி – வெளி எனும் ஐம்பூதங்களையும் ஆராய்ந்து படைத்தது. வைரமுத்துவின் 39ஆம் நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா லிட்ரேச்சர் வெளியீடு. விலை ரூ. 500
ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை – ஆர். பாலகிருஷ்ணன்
சிந்துவெளிப் பண்பாட்டுக்கும் திராவிட மொழி பேசும் தொல் தமிழர்களின் வரலாற்றுக்கும் இடையிலான தொடர்புகளை நிறுவுகிறது இந்த நூல். புவி தகவல் அமைப்பு என்ற நவீன தொழில்நுட்பம் உதவியுடன் இடப்பெயர்களை ஆராய்ந்து, தொல் தமிழர்களின் புலம்பெயர்வுகள் இதில் நிறுவப்படுகிறது. கொஞ்சம் பெரிய புத்தகம்தான். ஆனால், படித்து முடிக்கும்போது நம் பார்வையையே மாற்றிவிடக்கூடியது. விலை ரூ. 3350
நீர்வழிப் படூஉம் – தேவிபாரதி
இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். குடிநாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியையும், அவனுடன் சமூகம் கொள்ளும் உறவையும் சித்தரிக்கிறது இந்நாவல். நற்றினை பதிப்பகம் வெளியீடு. விலை ரூ. 220
சொல் வழிப் பயணம் – பவா செல்லத்துரை
பிக்பாஸ் புகழ், பிரபல கதை சொல்லி பவா. செல்லத்துரை ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடராக எழுதியது. விகடன் வெளியீடு. விலை 280
இந்த ஐந்து நூல்கள் தவிர கபிலன் வைரமுத்துவின் ‘ஆகோள்’, மு.து. பிரபாகரனின் ‘அடையாற்றுக்கரை’, கவிஞர் கொற்றவை மொழிபெயர்த்த ரங்கநாயகம்மாவின் ‘குழந்தைகளுக்கான பொருளாதாரம்’, ஈழ எழுத்தாளர் அகரமுதல்வனின் ‘கடவுள் பிசாசு நிலம்’, பா. ராகவனின் ‘கனை ஏவு காலம்’ ஆகியவையும் இந்த புத்தகக் காட்சியை கலக்கப் போகும் நூல்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.