சென்னை புத்தகக் காட்சி தொடங்கிவிட்டது. இந்நிலையில், இந்த புத்தகக் காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக, கடும் வார்த்தைகளில் எழுத்தாளர் சாரு நிவேதிதா முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஃபேஸ்புக்கில் சாரு நிவேதிதா பகிர்ந்துள்ள அந்த கடிதம் இங்கே…
‘மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். மிகுந்த கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
சென்னையில் நடக்கும் பிரம்மாண்டமான புத்தக விழாவில் நடப்பவை எதுவும் நியாயமாக இல்லை. சென்னை புத்தக விழாவே ஒருசில லும்பன்கள் கையில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிப்பது போல் தெரிகிறது. சில உதாரணங்கள் தருகிறேன்.
ஐந்தாறு ஆண்டுகளாக செயல்பட்டு, ஆயிரம் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பகத்துக்கு புத்தக விழா நிர்வாகத்தினால் ஒரு ஸ்டால் தரப்படுகிறது. ஆரம்பித்து ஒரே ஆண்டு ஆகி, ஐம்பது புத்தகங்களே பதிப்பித்திருக்கும் பதிப்பகத்துக்கு இரண்டு ஸ்டால் தரப்படுகிறது. இப்படிப்பட்ட நியாயமற்ற ஒதுக்கீடு எந்த அடிப்படையில் நடக்கிறது என்று தாங்கள் ஒரு விசாரணைக் குழு அமைத்துக் கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும்.
இது மட்டும் அல்லாமல் ஏகப்பட்ட குளறுபடிகளோடுதான் சென்னை புத்தக விழா நடந்து வருகிறது.
இந்த ஆட்சியில், இதுவரையில் இல்லாத வகையில் தமிழக அரசு எழுத்தாளர்கள் மீது கவனம் கொண்டிருக்கிறது. எழுத்தாளர்களுக்கு வீடு தர வேண்டும் என்று நான்தான் பத்திரிகையில் எழுதினேன். ஒரே வாரத்தில் தாங்கள் அது குறித்து நடவடிக்கை எடுத்து கனவு இல்லம் திட்டத்தை அறிவித்தீர்கள். அதன் மூலம் பல எழுத்தாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள். அரசு உருவாக்கும் அறிஞர் குழுக்களில் இப்போது எழுத்தாளர்கள் இடம் பெறுகிறார்கள். நூலகக் குழுத் தலைவராக கவிஞர் மனுஷ்ய புத்திரன் பதவி அளிக்கப்பட்டிருக்கிறார். இப்படி முதல் முறையாக தமிழக அரசு சமகால இலக்கியத்தின் பக்கமும் எழுத்தாளர்கள் பக்கமும் அக்கறை காண்பித்து வருகின்றது. அதற்காக தமிழக அரசுக்கும், தங்களுக்கும் என் நன்றியும் பாராட்டுகளும்…
இப்படிப்பட்ட ஒரு சிறப்பான சூழலில் எழுத்தாளர்களுக்கும், எழுத்தாளர்களின் படைப்புகளை பதிப்பிக்கும் பதிப்பகங்களுக்கும் எதிரான வகையில் இயங்குகிறது சென்னை புத்தக விழா அமைப்பு.
இது பற்றிய என் நியாயமான கவலையைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இலக்கியத்தின் மீது தீவிர ஆர்வமுள்ள தங்கம் தென்னரசு, கவிஞர் மனுஷ்ய புத்திரன் போன்றவர்களைக் கொண்டு ஒரு சீராய்வுக் குழு அமைத்து சென்னை புத்தக விழா நடைமுறைகளை சீரமைப்பதற்குத் தாங்கள் ஆவன செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை புத்தக விழாவுக்காக அரசு புத்தக விழா நிர்வாகத்துக்கு (பப்பாஸி) ஆண்டு தோறும் எழுபத்தைந்து லட்சம் ரூபாய் தருகிறது. இந்தப் பணத்துக்கு என்ன செலவு என்று யாருக்குமே தெரியாது. இந்தப் பணம் எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்பதைக் கண்காணிக்கும் உரிமை அரசுக்கு இருக்கிறது.
சமீபத்தில் வெள்ள நிவாரண உதவித் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டபோது ஒரு கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது. அதில் உங்களிடம் கார் இருக்கிறதா, வெள்ளம் வீட்டுக்குள் வந்ததா என்பது போன்ற பல முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டன. என்னால் இத்தனை பொய் சொல்ல முடியாது என்று சொல்லி உதவித் தொகையை வாங்க மறுத்து விட்டாள் என் மனைவி. மூவாயிரம் ரூபாய்க்கே இத்தனை கண்காணிப்பு இருக்கும்போது 75 லட்சத்துக்கு எத்தனை கண்காணிப்பு இருக்க வேண்டும்?
அரசுப் பணம் 75 லட்சமும் சரியானபடி செலவாகவில்லை; இலக்கியத்துக்கும் எழுத்துக்கும் பதிப்பகத்துக்கும் அந்தப் பணம் போய்ச் சேரவில்லை. தாங்கள்தான் கவனிக்க வேண்டும்” என்று சாரு நிவேதிதா தெரிவித்துள்ளார்.