No menu items!

கேப்டன் – சினிமா விமர்சனம்

கேப்டன் – சினிமா விமர்சனம்

ஒரு ஆர்மி கேப்டன் தன்னோட டீமை சேர்ந்த ராணுவ வீரரின் உயிரை 13 தடவை காப்பாற்றியதோடு மட்டுமில்லாமல் அவர் மேல் விழுந்த களங்கத்தையும் தீர்த்து வைக்கிறார்.

இந்த ஒன்லைனை கேட்டுவிட்டு, ’அடடா இப்படியொரு எமோஷனலான கதையா அப்படீன்னா ஆக்‌ஷன் சென்டிமெண்ட் எல்லாம் கொஞ்சம் தூக்கலாக இருக்குமே’ என்று மசாலா பட ரசிகரைப் போல யோசிக்க தோன்றலாம்,

ஆனால், ஸாம்பீஸ், ஸ்பேஸ் என ஹாலிவுட் ஸ்டைலில் கான்செப்ட்டை பிடிக்கும் சக்தி செளந்தர் ராஜன் கிழக்கு சிக்கிம் காட்டுப் பகுதியின் பின்னணியில், மினோடார் என்ற ஏலியன் சமாச்சாரத்தை விஷூவல் எஃபெக்ட்ஸில் கலந்துகட்டி கோலிவுட்டின் ‘ப்ரீடேட்டர்’ ஆக கொடுத்திருக்கிறார்.

நார்த் ஈஸ்ட் செக்டர் 42. ஆள்நடமாட்டமே இல்லாத காட்டுப்பகுதி. ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் பாழடைந்த மினரல் ப்ராசஸிங் கம்பெனியை தவிர வேறொன்றும் அங்கு இல்லை. இங்கே மக்கள் புழக்கத்தை உருவாக்க இந்திய அரசு யோசிக்கிறது. அதற்காக மிலிட்டரியை அனுப்பி, அங்கே பிரச்சினைகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய முயற்சிக்கிறது. காட்டுக்குள் போன மிலிட்டரி டீம் மர்மமான முறையில் இறந்துப் போக, வழக்கம் போல் ஹீரோவின் தலைமையில் ஒரு டீம் களத்தில் இறங்குகிறது.

கேப்டன் டீமுடன் ஏலியன் பற்றி ஆராய்ச்சி செய்துவரும் விஞ்ஞானி சிம்ரனும் கூட்டு சேர என்ன நடக்கிறது என்பதே இந்த இரண்டு மணிநேர ’கேப்டனின்’ திரைக்கதை.

‘கேப்டன்’ ஆக ஆர்யா. ’சார்பட்டா’ படத்தில் லேசாக எட்டிப் பார்த்த முதுமை இந்த முறை முகத்தில் தெரியவில்லை. ஏலியனுடன் மோதும் காட்சிகளில் அசுரத்தனத்தனமான ஆக்‌ஷனை காட்டாமல் சாஃப்ட் கேப்டனாகவே நடித்திருக்கிறார்.

சிம்ரன் நடிப்பு விஷயத்தில் அதிகம் மெனக்கெடவில்லையோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.

ஐஸ்வர்யா லெஷ்மி சில காட்சிகள் வந்தாலும், மனதில் நிற்கிறார்.

ஆர்யாவின் மிலிட்டரி டீம் வெரி குட்.

படத்தின் பாடல்களில் இமானின் வழக்கமான டச் இல்லை. ஆனால், பின்னணியில் விறுவிறுப்பை ஏற்றியிருக்கிறார்.

யுவாவின் ஒளிப்பதிவு அந்த காட்டுக்குள் நாமும் பயணிப்பது போன்ற உணர்வை அளிக்கிறது.

வசனம் கொஞ்சம் டெக்னிக்கலாக இருப்பதால் ஹாலிவுட் படத்தின் டப்பிங்கை பார்ப்பது போன்ற உணர்வு.

பொதுவாக ஏலியன்களின் பாடி லாங்க்வேஜ், குரல் எல்லாம் திகிலை கிளப்பும் அம்சங்களாக இருக்கும். ஆனால், அதில் கவனம் செலுத்தாமல் விட்டிருக்கிறார்கள். ஏலியன்கள் தாவி வந்து சண்டையிடும் காட்சிகளில் சிஜிஐ பிரமிப்புக்கு பதிலாக கார்ட்டூன் படம் பார்த்தது போல் இருக்கிறது. ஏலியன்கள் வருவது போவது எல்லாம் கிராமத்து விழாவில் நான்கு பேர் மட்டும் தனியாக சுற்றினால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது.

மினோடார்களின் ராணியைக் காட்டும் போது, வரவேண்டிய பதட்டத்தை, ஒரு ஆக்டோபஸை காட்டி காலி பண்ணிவிட்டார்கள்.

திரைக்கதையில் எமோஷனுக்கும் வழியில்லை. ஏலியன்கள் என்றதுமே வயிற்றுக்குள் கலக்கும் பீதியும் இல்லை. இதனால் இந்த கேப்டன் கொஞ்சம் சுமாரான கேப்டன்தான்

பின்குறிப்பு – ஹாலிவுட் படங்களைப் பார்க்கும் போது நம் ரசிகர்கள் லாஜிக் பார்க்க மாட்டார்கள். ஆஹா ஒஹோ என்று விமர்சனத்தை அள்ளிவிடுவார்கள். ஆனால், நம்மூரில் ஒருவர் இதே போல் படமெடுத்தால், அதில் லாஜிக் இல்லை. மேஜிக் இல்லை என்பார்கள். இந்த மனநிலையை ஓரங்கட்டிவிட்டு, யோசித்துப் பார்த்தால் ப்ரீடேட்டர் போன்ற படத்தை தமிழில் முயற்சித்து இருப்பது வரவேற்புக்கு உரியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...