இங்கிலாந்து அரசரான மூன்றாம் சார்ல்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த 2022-ம் ஆண்டு காலமானார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் புதிய அரசராக மூன்றாம் சார்லஸ், கடந்த 2023-ம் ஆண்டில் பதவியேற்றார். 75 வயதான மூன்றாம் சார்லஸ், கடந்த சில மாதங்களாக பிராஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் தங்கி சமீபத்தில் அவர் சிகிச்ச்சை பெற்றிருந்தார்.
இந்த சூழலில் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு அதற்கான மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதே நேரத்தில் தனது வழக்கமான மற்ற பணிகளை மன்னர் மேற்கொள்வார். சிகிச்சை முறையில் பாசிட்டிவ் மனநிலையில் உள்ள மன்னர், விரைந்து பொது வாழ்வுக்கு திரும்புவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வகையான புற்றுநோயால் மூன்றாம் சார்லஸ் பாதிக்கப்பட்டுள்ளார்?, அது எந்த நிலையில் இருக்கிறது என்பது போன்ற விவரங்களை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிடவில்லை.
இளவரசர் வில்லியமுக்கு கூடுதல் பொறுப்பு?
மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரது பணிகள் சிலவற்றை இளவரசர் வில்லியம் பகிர்ந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளவரசர் வில்லியமின் மனைவி காத்தரினுக்கு சில நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் மனைவியையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்வதற்காக சில நாட்களாக அரசுப் பணிகளில் இருந்து அவர் விலகி இருந்தார். இப்போது மன்னரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் உடனடியாக பணிக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை நோய் காரணமாக மூன்றாம் சார்லஸ் தனது மன்னர் பதவியை விட்டு விலகினால், அடுத்த மன்னராக இளவரசர் வில்லியமுக்கு முடி சூட்டப்படும். அப்படி நடந்தால் அவரது மகன் இளவரசர் ஜார்ஜ், அடுத்த இடத்துக்கு முன்னேறுவார்.
பிரதமர் மோடி பிரார்த்தனை
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மன்னர் சார்லஸ் விரைவில் குணமடைய இந்திய மக்களுடன் இணைந்து தாமும் பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இரண்டில் ஒருவருக்கு புற்று நோய்
இங்கிலாந்து மக்களில் இரண்டில் ஒருவருக்கு அவர்களது வாழ்நாளில் எதாவது ஒருவித புற்றுநோய் உண்டாவதாக அங்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை வலைத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்தில் மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய்கள் அதிக அளவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான புதிய புற்றுநோய்கள் 75 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.