No menu items!

மூளை மூடுபனி – கொரோனாவின் இன்னொரு பாதிப்பு

மூளை மூடுபனி – கொரோனாவின் இன்னொரு பாதிப்பு

உங்களால் சரியாக யோசிக்க முடியவில்லையா?

உங்களின் ஞாபக சக்தி குறைந்திருக்கிறதா?

உங்களால் எதையும் கூர்ந்து கவனிக்க இயலவில்லையா?

உங்களால் வேலைகளை முன்புபோல் செய்ய முடியவில்லையா?

உங்களுக்கு களைப்பு அதிகரித்திருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுமுன் மற்றொரு முக்கிய கேள்வி
உங்களை கோவிட் வைரஸ் தாக்கி சிகிச்சை எடுத்து குணமடைந்திருக்கிறதா?

Brain Fog அதாவது மூளை மூடுபனி என்றொரு நோய் இருக்கிறது. இந்த நோய்க்கான அறிகுறிகளைதான் மேலே கேள்விகளாக பார்த்தோம்.

இந்த நோய் இப்போது கோவிட் வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு அதிகரித்திரிப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கோவிட் நோய் தாக்கி, சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

மேலே கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துமே சாதாரணமாகவே நாம் உணரக் கூடியவை. சில சமயம் அப்படி இருக்கும். ஆனால் சில தினங்களில் கடந்து சென்று விடும். அப்படி கடந்துச் சென்று விட்டால் கவலை இல்லை. ஆனால் நீண்ட நாட்கள் இந்த நிலை தொடர்ந்தால் அதை நோயாக கருத வேண்டும் அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சரி, கோவிட் வைரசுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

கோவிட் வைரசை எதிர்த்து போராட நமது உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு அணுக்கள் (antibodies) மூளைக்குள் இயங்கும் ஒரு தடுப்பு சுவரை தாக்குகின்றன. இந்த தடுப்பு சுவர் மூளைக்குள் பாதகம் விளைவிக்கும் செல்களை அனுமதிக்காமல் தடுக்கும் சக்தியைப் பெற்றவை. அந்த சுவர் பாதிப்படையும்போது மூளைக்கு சிக்கல் தரக்கூடிய அம்சங்கள் உள்ளே போகின்றன. அதில் ஒன்றுதான் மூளை மூடுபனி.

இந்த மூளை மூடுபனி மூளையின் செயல்பாடுகளை தாமதமாக்கிறது. களைப்படைய வைக்கிறது. கவனம் செலுத்தும் விதத்தை மாற்றுகிறது.

கோவிட் பாதித்த எல்லோருக்கும் இந்த நிலை ஏற்படுவதில்லை. சிலருக்கு ஏற்படுகிறது. அந்தச் சிலருக்கும் சில நாட்களிலேயே கடந்து சென்று விடுகிறது. ஆனால் சிலருக்கு மாதக் கணக்கில் நீள்கிறது. 14 மாதங்கள் வரை இந்த சிக்கல் நீள்வதற்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

பொதுவாகவே கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும், களைப்பு நீடிக்கும், உணவு சுவையில் வித்தியாசங்கள் தெரியும் இப்படி பல மெல்லிய பாதிப்புகள் தொடர்ந்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இப்போது இந்த மூளை பாதிப்பும் குறிப்பிடப்படுகிறது.

சரி, இதற்கு என்ன தீர்வு?

எளிமையான எளிதான தீர்வுகள் இருக்கின்றன.

நன்றாக தூங்குங்கள். தூக்கம் மூளையை ஓய்வெடுக்க வைக்கும். மூளையின் அழுத்தத்தை வேலை பளுவை குறைக்கும். தூக்கம் முக்கியம்.

ஒரு நேரத்தில் ஒரு வேலையை செய்யுங்கள். மல்டி டஸ்கிங் என்று கூறிக் கொண்டு ஒரே நேரத்தில் மூன்று நான்கு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யாதீர்கள்.

உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க பயிற்சி செய்யுங்கள். மொபைல் எண்களை மனனம் செய்ய முயற்சி செய்யுங்கள். உங்கள் பழைய நினைவுகளை மீண்டும் நினைத்துப் பாருங்கள். கூகுள், மொபைல் வந்த பிறகு நம்முடைய ஞாபகத் திறனை அதிகம் பயன்படுத்துவதில்லை. அதை பயன்படுத்துங்கள்.

புதிய காரியங்களை செய்யுங்கள். ஒரே வேலையை செய்துக் கொண்டிருப்பது மூளைக்கு அலுப்பைத் தரும். அதற்காக புதிய வேலையைஒ தேட வேண்டும் என்பதில்லை. வீட்டுக்குப் போகும்போது வழக்கமான பாதையிலிருந்து மாறி மாற்றுப் பாதையில் பயணியுங்கள். வழக்கமான பாட்டை கேட்பதைவிட்டு புதிய பாட்டைக் கேளுங்கள். இது போன்று சிறு சிறு புதிய முயற்சிகள் மூளைக்கு புத்துணர்வு தரும்.

தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். அமைதியாய் இருப்பதே மனதை ஒருமுகப்படுத்தும்.

இந்தக் காரியங்களில் ஈடுபட்டும் உங்கள் மூளையின் செயல்திறன் மாறவில்லை என்றால் மருத்துவரை நாட வேண்டும். அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இந்த மூளை மூடுபனி சிக்கல் குறைந்த கால பிரச்சினை என்பதால் இது போன்ற முயற்சிகளே தீர்வுகளைத் தந்துவிடும். அதனால் கவலை வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...