தி. ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த இருபத்தைந்து சிறுகதைகளின் தொகுப்பான ‘பாயசம்’ என்னும் நூலுக்கு அதன் தொகுப்பாசிரியரும் கவிஞருமான சுகுமாரன் ‘தீரா வியப்பின் கதைகள்’ என்னும் தலைப்பில் எழுதிய முன்னுரையின் சுருக்கம் இது….
தி. ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பை எழுத்தாளரும் அதைவிட முதன்மையாக ஜானகிராமனின் தீவிர வாசகராக அறியப்பட்டவருமான பிரபஞ்சன் 2006ஆம் ஆண்டு முதன்முதலாக நூலாகக் கொண்டுவந்தார்; ‘சிலிர்ப்பு’ என்ற தலைப்பில். தொகுப்பில் 27 கதைகள் இடம்பெற்றுள்ளன. முதலில் ‘காலச்சுவடு அறக்கட்டளை’ வெளியீடாகவும் தொடர்ந்து ‘காலச்சுவடு பதிப்பக’ வெளியீடாகவும் வந்த ‘சிலிர்ப்பு’ இதுவரை பதினொரு பதிப்புகளைக் கண்டிருக்கிறது. நவீனத் தமிழிலக்கியச் சூழலில் குறிப்பிடத் தகுந்த நடவடிக்கை இது. அத்துடன் முன்னோடி எழுத்தாளர் மறைந்து நாற்பதாண்டுகளுக்குப் பிறகும் காலப்பொருத்தம் உடையவராகத் தொடர்கிறார்; புதிய வாசகர்கள் அவரைக் காலத்தைக் கடந்த படைப்பாளராகக் கருதுகிறார்கள் என்ற உண்மைகளையும் இது எடுத்துக் காட்டுகிறது.
‘சிலிர்ப்பு’ தொகுப்பின் வாசக வரவேற்புக்கு தி. ஜானகிராமனின் கலை மேதைமை முதற் காரணம் என்றால் பிரபஞ்சனின் துல்லியமான தேர்வு இன்னொரு காரணம். இதுவரை கண்டெடுத்துத் தொகுக்கப்பட்டுள்ள ஜானகிராமன் கதைகளின் எண்ணிக்கை 135. மிகச் சிறந்த கதைகளும் சிறந்த கதைகளும் சாதாரணக் கதைகளும் இந்த எண்ணிக்கையில் அடங்கும்.
தி. ஜானகிராமனின் சிறுகதைகளின் இலக்கியப் பெறுமதியை நிறுவும் கதைகளையே பிரபஞ்சன் தொகுத்திருப்பது அவரது ரசனையையும் பார்வையையும் காட்டுகிறது. தி. ஜானகிராமனின் நிகரற்ற பெரும்பான்மைக் கதைகளை இந்தத் தொகுப்பு உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் முன்மாதிரித் தொகுப்பாகவும் கவனம் பெறுகிறது.
சர்வ லட்சணங்களும் பொருந்திய தொகுப்பு இப்போதும் கிடைப்பதாகவே இருக்கும் நிலையில் தேர்ந்தெடுத்த கதைகளின் இன்னொரு தொகுப்புக்கு அவசியம் உண்டா என்ற கேள்வி எழுவது இயல்பு. தொகுப்பாளன் என்ற நிலையில் எனக்கு எழுந்த முதல் கேள்வியும் அதுவே, நடைமுறை சார்ந்தும் இலக்கிய அடிப்படையிலும் வெவ்வேறு காரணங்களைப் பதிலாகக் காண்கிறேன்.
‘சிலிர்ப்பு’ தொகுப்பு வெளிவந்து ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. காலப் பழக்கத்தால் தொகுப்புக்குப் புராதனச் சாயல் படிந்துவிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. புதிய வரிசையில் கதைகள் அமைந்த ஒரு தொகுப்பு வாசிப்பில் மாற்றத்தை அளிக்கலாம் – புத்தக அலமாரியைக் கலைத்து மீண்டும் நிரல்படுத்தினால் புதுத் தோற்றம் ஏற்படுவதுபோல –
என்ற எண்ணத்தைக் கொடுத்தது.
‘காலச்சுவடு பதிப்பகம்’ வாயிலாக முன்னோடி எழுத்தாளர்கள், சமகால எழுத்தாளர்கள் பலரதும் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் என்ற வகையிலும் கிளாசிக் சிறுகதைகள் என்ற வகையிலும் அவை வெளியாகியுள்ளன. இவற்றில் சில அந்தந்த ஆசிரியர்களின் முழுத் தொகுப்புகள் வெளியான பின்னர் தொகுக்கப்பட்டவை. கனத்த தொகுதியின் பாரத்தைச் சுமக்க வருந்துபவர்களுக்காகவும் ஓர் ஆசிரியரை எளிதில் அணுக விரும்பும் புதிய வாசகர்களுக்காகவும் தொகுக்கப்பட்ட நூல்கள் இவை. ஐந்து அல்லது ஆறு தலைமுறையைச் சார்ந்த ஏறத்தாழ இருபது எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்புகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. வெவ்வேறு தலைமுறையினரான இலக்கியவாதிகளும் ஆர்வலர்களும் கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறார்கள்.
ஓர் ஆசிரியரது கதைகளின் எண்ணிக்கை மாற்றமில்லாத ஒன்றுதான். அவற்றிலிருந்து தொகுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகள் ஓரளவுக்கு மாறுபட்டவை. தொகுப்பாளரின் ரசனையையும் விருப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. ‘காலச்சுவடு’ வெளியீடாக வந்துள்ள புதுமைப்பித்தனின் தேர்ந்தெடுத்த கதைகள் அடங்கிய இரு தொகுப்புகளை உதாரணமாகச் சொல்லலாம். ‘ஒருநாள் கழிந்தது’, ‘எப்போதும் முடிவிலே இன்பம்’ ஆகிய இரு நூல்கள். புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகள் 97இலிருந்தே இரு தொகுப்புகளுக்குமான கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இரு தொகுப்புகளிலும் இடம்பெற்ற கதைகளும் உள்ளன. எனினும், இரு தொகுப்புகளும் வெவ்வேறான வாசிப்பனுபவத்தை அளிக்கின்றன. கதைகள் வரிசைப்படுத்தப்பட்ட விதமும் தொகுப்பாளர்களின் ரசனையும் மாறுதலான அனுபவத்துக்குக் காரணங்கள். தி. ஜானகிராமன் கதைகளில் அதுபோன்ற சாத்தியத்தைக் காணும் விருப்பமே இந்தத் தொகுப்புக்கான இன்னொரு காரணம். உபரிக் காரணம் தி. ஜானகிராமன் வாசகனாக எனக்குள் எழுந்த இலக்கிய வீம்பு.
தி. ஜானகிராமன் நூற்றாண்டையொட்டி அவரது படைப்புகள் மறுவாசிப்புக்கும் புது வாசிப்புக்கும் உள்ளாயின. கதைகள் புதிய கோணங்களில் விளக்கப்பட்டன. சில கதைகளுக்கு ஆசிரியரே கற்பனை செய்திராத வியாக்கியானங்கள் சொல்லப்பட்டன. ‘இசைப் பயிற்சி’ என்ற கதை தலித் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டதாகவும் ‘சிவப்பு ரிக்ஷா’ பெண்ணியத்துக்கு அழுத்தம் கொடுக்கும் கதையாகவும் விளக்கப்பட்டன. இந்தப் பின்புலத்தில் இன்னொரு பார்வையில் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்புக்குப் பொருத்தமும் தேவையுமிருப்பதை உணர்ந்தேன்.
இரண்டு வகையான கதைகள் இந்த தொகுப்பில் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இசையை மையமாகக் கொண்ட கதைகளும் ஆண் – பெண் உறவையும் விழைவையும் அவற்றின் சிக்கலையும் கருப்பொருளாகக் கொண்ட கதைகளும் இதில் இடம்பெறவில்லை (இசையை ஆதாரமாகக் கொண்ட கதைகளின் தனித் தொகுப்பு வெளிவரலாம்).
தி. ஜானகிராமன் எழுதிய ஒன்பது நாவல்களும் சந்தேகமின்றி ஆண் – பெண் உறவின் சுரங்களையும் அபசுரங்களையும் பற்றிப் பேசுபவைதாம். அவரது முக்கியமான குறுநாவல்களும் அதே மையப் பொருளைக் கொண்டவைதாம். அதன் விளைவாகவே அவரது எழுத்துக்கள் பாலியல் வேட்கையைச் சித்தரிப்பவை என்ற பிழையான கருத்து நிலவியது. இந்தக் கருத்துக்கு இன்று இலக்கியம் சார்ந்தோ தார்மீக அடிப்படையிலோ பொருத்தப்பாடு இல்லை. தி. ஜானகிராமனின் தொகுக்கப்பட்டிருக்கும் மொத்தக் கதைகளில் பத்து விழுக்காடு அளவிலான கதைகள் மட்டுமே ஆண் – பெண் உறவின் சிக்கலைச் சித்தரிப்பவை.
தனது எழுத்துக்களைப் பற்றி தி. ஜானகிராமன் அதிகம் பேசியதில்லை. நாவல்களில் ‘அம்மா வந்தாள்’, ‘மோக முள்’ இரண்டைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், சிறுகதைகளைப் பற்றிக் கொஞ்சம் அதிகமாகவே பேசியிருக்கிறார். தன்னுடைய சில கதைகளின் தோற்றுவாயைப் பற்றி ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ கட்டுரையிலும் பிறரது கதைகளைப் பற்றி முன்னுரை, மதிப்புரைகளிலும் தனிக் கட்டுரைகள் ஒன்றிரண்டில் பொதுவாகச் சிறுகதைகள் பற்றிய கருத்துக்களையும் முன்வைத்திருக்கிறார். ஆனால், அவை இலக்கண விளக்கங்கள் அல்ல; எழுத்தனுபவத்திலிருந்து திரண்ட சான்றுகள்.
‘சக்தி வைத்தியம்’ தொகுப்புக்காக தி. ஜானகிராமனுக்கு (1979இல்) சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு ஆற்றிய உரையில் தனது சிறுகதைகளின் இயல்பாகக் குறிப்பிட்ட சொற்கள் அவரது கதையுலகின் ஆதார விசையை இனங்காட்டுகின்றன.
‘(ஒரு சிறுவனைப்போல), நான் அன்றாட உலகைப் பார்த்து வியக்கிறேன், சிரிக்கிறேன். பொருமுகிறேன். நெகிழ்கிறேன், முஷ்டியை உயர்த்துகிறேன், பிணங்குகிறேன். ஒதுங்குகிறேன். சில சமயம் கூச்சல் போடுகிறேன். இந்த ‘சக்தி வைத்தியம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு மற்ற தொகுப்புகளைப்போல மேற்கண்ட சேஷ்டைகள் அடங்கிய தொகுப்புத்தான்.’
இந்த வரிகளையே அவரது எல்லாக் கதைகளுக்கும் பொருத்தலாம். ஓர் எழுத்தாளரின் சேஷ்டைகளாக அவர் குறிப்பிடுபவற்றை மனிதர்களின் ஆதார இயல்புகளாகப் பார்க்கும் செயலின் பயனே இந்தத் தொகுப்பு. மனிதர்களின் நேர் இயல்புகளும் கோணல் குணங்களும் எதிர் நடவடிக்கைகளும் இந்தக் கதைகளில் வெளிப்படுகின்றன. மனிதர்களின் இந்த உணர்வுநிலைகளை அனுதாபத்துடனும் கரிசனத்துடனும் அணுகியதுதான் தி. ஜானகிராமனின் கலைநோக்கு என்று இந்தக் கதைகள் நிறுவுகின்றன.